9/25/2010

தலிபான்களுக்கெதிராகப் போராட சி.ஐ.ஏ.யின் கண்காணிப்பின் கீழ் இரகசிய இராணுவம்

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயற்படும் அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினரை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா இரகசிய இராணுவம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் 3 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் மறைந்து இருந்தபடி, அல்கொய்தா மற்றும் தலீபான்கள் அமெரிக்க இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் தயங்குகிறது. அந்த நாட்டுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்து வருகிறது.
பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்காதவரை அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்று ஜனாதிபதி ஒபாமா கருதுகிறார்.
இதனால் தான் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினர் மீது அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணை தாக்குதலால் மட்டும் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள அமெரிக்கா, இரகசிய இராணுவம் ஒன்றை இப்போது உருவாக்கி உள்ளது. இதில் 3 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு தனியார் நடத்தும் இராணுவக் குழுக்களில் இருக்கும் வீரர்களில் இருந்து இந்த இரகசிய இராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த இராணுவத்துக்கு ‘தீவிரவாத தடுப்புக்குழு’ என்று பெயரிப்பட்டு உள்ளது. இந்த இராணுவம் அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். இந்த இராணுவத்தில் உள்ள வீரர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்படுவார்கள். அவர்கள் தீவிரவாதிகளின் இருப்பிடங்களுக் குள் புகுந்து சோதனை போடுவார்கள். தீவிரவாதிகளை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்வார்கள்.

0 commentaires :

Post a Comment