“அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று” (அதிவீரராம பாண்டியர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அவரை வீட்டுக்கு அனுப்ப வேன்டும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்சவிற்கெதிராக கச்சை கட்டிக்கொன்டு ஏனைய முஸ்லிம் மஹிந்த ஆதரவு கட்சியினரை ஆதரவாளர்களை துரோகிகளாக முஸ்லிம் விரோத ஆட்சியாளர்களுக்கு துணை போபவர்களாக காட்டி தீவிர பிரச்சாரம் பண்ணியவர்கள் அதே வேகத்தில் இப்போது ஒரு குத்துக்கரணம் அடித்துள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி (Executive Presidency)முறை நீக்கப்பட வேன்டும். அதற்கான உறுதியுரையை பொன்சேகா தந்துள்ளார் ஒரு தனி மனிதரிடம் அதிகாரம் குவிந்திருக்கின்ற குடும்ப ஆட்சி நடத்தும் சர்வாதிகார மஹிந்த அரசை வீழ்த்தியே ஆகுவோம்; என்று சூளுரைத்தவர்கள் எதிபாராதவிதமாக சுடுதியான குத்துக்கரணம் அடித்து இப்போது தமது நிலைப்பாட்டு மாற்றத்துக்கு புதிய “நியாயங்கள்” கற்பித்து வருகிறார்கள்.
இதுபற்றி பல சுவாரஷியமான சங்கதிகள் அபிப்பிராயங்கள் வெளி வந்து கொன்டிருக்கும் வேளையில்.சென்ற ஜனதிபதித் தேர்தலின் போது “ஜாதிக ஹெல உறுமய (புத்தரின்) போதனையில் மஹிந்தவின் 4 வருட சாதனைகளால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் ” என்ற தலைப்பிட்டு ஒரு நீன்ட துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. இப்பிரசுரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாங்கள் வெளிப்படையாக பிரசுரத்திற்கு உரிமை கோராமலும் வாக்காளர்களுக்கு தமது செய்தி சென்றடைய வேண்டும் அதேவேளை அதனை வெளியிட்டவர்கள் யாரென்று யூகித்து விளங்கிக் கொள்ளப்படவும் வேண்டும் என்ற வகையில் அப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக அறியவந்தது.
அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனியினர் அவர்களுடன் கூட்டமைத்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் ஜனனாயக அரசியல் நீரோட்டத்தில் நுழைந்து கொன்ட முன்னாள் புலிகளான தமிழ் அரசியல் வாதிகள் அனைவர் மீதும் சேறு அள்ளி வீசியது மட்டுமல்ல, சிங்கள பெளத்த தமிழ் இனவாத கருத்துக்களையும் (ஏதோ ரணில் பொன்சேகா சம்பந்தன் ஆகியோர் முஸ்லிம்களின் காவலர்கள் போலும்) சமூகத்தின் பலவீனமான மத இன உணர்வுகளை தமது அரசியல் இலாபங்களுக்காக தூண்டிவிடும் வகையில் இப்பிரசுரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சிவில் அமைப்பு ((Sri Lanka Muslims’ Civil Society (SLMCS) என்ற பெயரில் வெளியிடப்பட்டு முஸ்லிம் சிவில் சமூகத்தையும் கொச்சைபடுத்தியது.
முஸ்லிகளுக்கான காணி அரசியல் சமூக கல்வி பொருளாதார பிரச்சினைகள் அணுகப்பட வேன்டிய முறை இது வல்ல என்பதை முஸ்லிம் சிவில் சமூகம் நன்கு அறியும். அதற்கான வினைதிறனும் இயலுமையும் அதற்குன்டு.எனவே முஸ்லிம் சிவில் சமூகத்தை கேவலப்படுத்தும் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் மத இன அடிப்படையிலான அரசியல் செய்வோருக்கு அனுகூலமாகலாம். ஆனால் சமூக உறவுக்கு இன செளஜன்யத்துக்கு எதிராகவே இவ்வாறான கபடத்தனமான செயற்பாடுகள் அமையும். ஏனெனில் இவ்வறான பிரசுரங்களை வெளியிட்டு தமது அரசியலை மத இன சாயங்களை அதீதமாக பூசியவர்கள் அடிக்கடி பல்டி அடித்து தமது நலன்களுக்காக (தேசிய நலன் என்று சாமார்த்தியமாக காரணம் கற்பித்து ) தாம் தீவிரமாக எதிர்த்த மத சமுக விரோதிகள் என்று தங்களால் மக்களுக்கு அடையாளம் காட்டியவர்களுடன் புதிய உறவை நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில் சமூகம் இவர்களின் அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படும் காய்களாக மாற்றப்படுகிறார்கள். எனவே இவ்வாறான முஸ்லிம் பிற்போக்கு நயவஞ்சக அரசியல் தொடர்பில் நிரம்பவே எழுத வேண்டி உள்ளதால் இந் நீண்ட துண்டுப்பிரசுரத்தின் ஒரு பகுதியை உங்களின் பார்வைக்கு விட்டு இன்றைய முஸ்லிம் அரசியல் மாற்றம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
———–
“அன்பின் தந்தைமார்களே, சகோதர சகோதரிகளே மாணவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தயவு செய்து கட்சி பேதமின்றி இதனை வாசிக்கவும்.
சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழர்களின் அரசியல் மற்றும் 30 வருட கால ஆயுதப் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டு நசுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஜனாதிபதித் தேர்தலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். நாம் அனைவரும் நினைத்திருந்ததைப் போல் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களின் நண்பரா? என்றால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர் மேற்கொள்ளாத நடவடிக்கைளும், அவரின் விடாப்பிடியான சிங்களப் பேரினவாதக் கொள்கைகளும் அவரின் சுயரூபத்தை எமக்கு நன்கு வெளிக்காட்டியுள்ளன.
அவர் ஜாதிக ஹெல உறுமயவின் தர்மராஜ்யக் கனவை நனவாக்குவதற்கு வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுவது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் வெளியுலகுக்கு அப்பாவி போல் நடித்தாலும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் தனிச் சிங்களப் பேரினவாத வெறியை ஹெல உறுமய பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் நடைமுறைப்படுத்தி வருகின்றார். இதனை நன்கு தெரிந்துள்ள அரசாங்கத்திலுள்ள எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களின் சுய இலாபங்களுக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எமது சமூகத்தை இவ்வாறு காட்டிக் கொடுக்கப் போகின்றார்கள்?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்த நிலைப்பாட்டினை முஸ்லீம் மக்களுக்காக ஒரு கணப் பொழுதேனும் விட்டுக் கொடுத்தார் என்று யாருக்காவது கூற முடியுமா? தனக்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் தன்னை ஆதரிக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கு அவர்களின் சமூகத்தை விடவும் என்னென்ன சுய தேவைகள் உள்ளன என்பதுவும் ஜனாதிபதிக்கு நன்கு தெரியும்.
தமிழில் சிரித்துக் கதைத்து விட்டால் மாத்திரம் முஸ்லிம்களின் நண்பராகிவிட அவரால் முடியாது. சிங்களப் பேரினவாத அரசுத் தலைவரான அவர் நினைப்பது போன்று முஸ்லீம்கள் மடையர்கள் அல்ல. இலங்கை முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தரின் சிலைகளை நமது பள்ளிவாசல்களுக்கு முன்னாலும் முஸ்லிம் கிராமங்களிலும் அவர் ஜனாதிபதியாகி ஒரு வருடத்திற்குள்ளாக வைத்து பூர்த்தி செய்து முடித்தார்.
பொத்துவிலில் பட்டப்பகலில் முஸ்லிம் மக்கள் மத்தியில் சிலைகள் வைக்கப்பட்டன. பிக்குகளால் முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டனர். முஸ்லிம் மையவாடிகளிலும் சிலைகள் வைத்துக் காட்டியது இந்த மஹிந்தவின் தர்மராஜ்ய சட்டம்தான். அப்போது நமது முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் எங்கே பதுங்கிக் கொண்டு இருந்தார்கள்?
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக பௌத்த பிக்குகளை ஏவி விட்டு பள்ளிவாசல்களை மூடவைத்தது இந்த மஹிந்த அரசுதான். (உதாரணமாக தெஹிவல, கடவத்தை வீதி பள்ளிகள்) அங்கு தொழுகைக்குச் சென்ற முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். சிங்களப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை மூடச்சொல்லி ஹெல உறுமய தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏன் மஹிந்த அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை? பௌத்த பன்சலைகளின் சுற்றுப் பகுதிகளிலிருந்து முஸ்லீம் மக்களை குடியெழும்பச் செய்தது யார்? ‘கிழக்கின் உதயம்’ என்ற போர்வையில் கிழக்கு முழுவதிலும் சப்தமின்றி நடைபெறும் சிங்களக் குடியேற்றத்தைச் சரி என்றுகூட எமது தலைவர்கள் கூறுவார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் கொழும்பில் உல்லாசமாக வாழுகின்றனர்.
ஹெல உறுமயவின் போஷகரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் பரம்பரையான காணிகளையும், நிலங்களையும் சுவீகரித்து அரச சொத்தாக மாற்றி பின்னர் அவற்றை சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தது எல்லாம் அவர் முஸ்லிம்களின் நண்பர் என்பதினாலா?
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இது வரைக்கும் சரியாக வீடுகள் கட்டிக் கொடுக்காத இந்த மஹிந்த அரசாங்கம் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரை மஹோயா உட்பட பல்லாயிரக்கணக்கான வீடுகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றியிருப்பது எம் கண்களுக்குத் தெரியவில்லையா? பாரிய சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க முதலமைச்சர் பிள்ளையான்கூட ஜனாதிபதியோடு சண்டை செய்தபோது எமது முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்?
அவர்கள் சிறுசிறு பாதைகள் போட்டுக்கொண்டு இருந்தார்கள். மஹிந்த மீண்டும் ஜனாதிபதியானால் இலங்கை முஸ்லீம்களுக்கு பெரும்பான்மைத் தாயகம் என்றிருக்கும் அம்பாறை மாவட்டம் இல்லாது போவதை எந்த முஸ்லிம் மகனாலுமே தடுக்க முடியாது போகும்.
உள்நாட்டு அமைச்சினூடாக ஹெல உறுமய பிக்குகளின் ஆலோசனைப்படி முழு வடக்கு கிழக்கு நிர்வாக அலகுகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் புதிதாக மீள நிர்ணயிக்கப்பட்டு விட்டன. இரவோடிரவாக முஸ்லிம் மக்களுக்கு அடிமைச்சங்கிலி இடப்பட்டு விட்டது. பல மூத்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே இருக்கையில் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வடக்குக்கும் கிழக்குக்கும் இரண்டு இராணுவத் தளபதிகளை ஆளுநர்களாக நியமித்தமையும், முஸ்லீம்களை அடக்கி ஆள்வதில் அனுபவசாலியான கருணா அம்மானை ஏவி விட்டு மீண்டும் குழப்பம் ஏற்படுத்தியமையும், தன் தம்பி பசில் ராஜபக்ஷவை இவற்றுக்குப் பொறுப்பாக நியமித்தமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிங்களப் பேரினவாத இனவெறியின் வெளிப்பாடுகளாகும். இவற்றையெல்லாம் பொய் என்று இன்னமும் மறுக்க முடியுமா?
இதுமட்டுமல்ல தான் தெற்கின் சிங்களக் குடிமகன் என்பதால் ஹெல உறுமய தேரர்கள் கூறுவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவவாக்காக மதித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை மிதித்து வந்துள்ளார்.அதற்கோர் சிறு உதாரணம்: இந்நாட்டின் பிரதமர் தெரிவின்போது ஜே.வி.பி கட்சியினர் மறைந்த வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொண்டுவர முனைந்தபோது அவர் சிறுபான்மையினத்தவர் என்று கூறி பிக்குகளினதும் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலையாட்டி பொம்மையான ரத்னசிறி விக்ரமநாயக்காவை பிரதமராக்கியமை.
அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கும் நமது முஸ்லிம் சமூகத்தின் கோடரிக் காம்புகளான தலைவர்கள் தங்களது மனச்சாட்சிகளுக்கு விரோதமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக அடகுவைத்து விட்டு மஹிந்த நல்லவர், வல்லவர் முஸ்லீம்களின் நண்பர் என்று கூவித் திரிகின்ற மாமனிதர் அஷ்ரபின் கட்சியில் முளைத்த களைகளும், கட்சி தாவித்திரியும் ஜடங்களும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் முதலமைச்சர் நியமனத்தில் மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு முழு இலங்கை முஸ்லீம்களையுமே ஏமாற்றி மடையர்களாக்கி எமது சமூகத்தின் முகத்தில் பேரினவாத வெறியுடன் செருப்பால் அறைந்ததை ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லையென்று முதலமைச்சர் நியமனத்தில் அரசுக்கு எதிராகப் பேசியவர்களை மஹிந்தர் இரஜினாமாச் செய்துவிட்டுச் செல்லலாம் என்றதும் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனவர்களையும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களைக் காட்டிக் கொடுத்து தமது சலுகைகளைக் கூட்டிக் கொண்டவர்களையும் இச்சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.
எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனை சரியான தருணத்தில் எமது மக்களால் வழங்கப்படும். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரின் வாயாலேயே ஏன் முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் விளக்கியபோது, ‘தமிழர்களை விடவும் முஸ்லீம்களை ஏமாற்றுவது இலகுவான விடயம்’ என்றும் ‘முஸ்லீம்களுக்கு கிழக்கில் ஆட்சியமைத்துக் கொடுப்பதற்காக நான் ஜனாதிபதியாகவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ஜனாதிபதியினால் அதானுக்கும், குர்பானுக்கும் தடை வரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிய போதும் முஸ்லீம்களில் கணிசமானவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அவரின் உண்மையான சுய ரூபம் தெரியாமல் ஆதரித்து ஜனாதிபதியாக ஆக்கினார்கள். இன்று என்ன நடந்துள்ளது?
அதான் விடயத்தில் யார் என்ன கூறினாலும் எப்படி விவாதித்தாலும் அல்லது அது இரு முஸ்லிம் குழுக்களுக்கிடையில் உருவான பிரச்சினையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு என்று கூறினாலும் அல்லது இஸ்லாமிய முறைப்படி ஒலிபெருக்கியில் அதான் சொல்லத் தேவையில்லையென ‘பத்வா’ கூறினாலும் உண்மையிலேயே ஒலிபெருக்கியில் அதான் சொல்வதைத் தடை செய்யவே வேண்டும் என்கிற எண்ணக்கரு ஹெல உறுமயவின் முஸ்லீம்களுக்கு எதிரான நீண்டகாலக் கனவேயாகும் என்பதை அழுத்திக் கூற விரும்புகின்றோம்.
இந்த விடயத்தில் நாட்டு மக்களுக்குப் பொதுவானவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பௌத்த தேரர்களின் வேண்டுதலின்பேரில் அந்தப் பிரச்சினையை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி தனக்கு வேண்டியபடி தீர்ப்பையும் வழங்கச் செய்துவிட்டு தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என ‘கழுவிய மீனில் நழுவிய மீனாக’ தன்னை முஸ்லிம் சமூகத்திடம் காட்டிக் கொண்டார்.
பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளுக்கு குரல் கொடுத்தவர் என்று சொல்லப்படும் மஹிந்தவுக்கு இலங்கை முஸ்லீம்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் ஹெல உறுமயவின் கடும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகும்.
இந்த வருடத்தின் ஹஜ்ஜுப் பெருநாளின்போது குர்பானுக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான கால்நடைகளை பொலீஸார் பறிமுதல் செய்தபோது எமது முஸ்லிம் அமைச்சர்களினால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாதுகாத்து வரும் ஜாதிக ஹெல உறுமயவின் தாமராஜ்ய சட்டத்திற் கெதிராக ஒன்றுமே செய்ய முடியாது போனதுடன் அவர்கள் தங்களின் தலைக்கறுப்பையும்கூட இவ்விடயத்தில் காட்டாமல் ஒழிந்து கொண்டார்கள். இத்தனைக்கும் கால்நடைகள் பிரதியமைச்சராக ஒரு முஸ்லிம் சண்டியனே இருந்து வருகின்றார். (முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ்) இந்தப் பாரதூரமான விடயங்களெல்லாம் எம்மில் சிலருக்கு சிறுவிடயமாகக் கூடத் தெரியலாம்.
ஹெல உருமயவின் போஷகரான மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் மீண்டும் ஜனாதிபதியானால் எமது பிள்ளைகளுக்கு ‘கத்னா’ செய்வதற்கான வயதெல்லையையும் (12 வயதுக்கு மேல் என்று) மிருகவதைச் சட்டத்தின் கீழ் நிச்சயம் கொண்டு வரப்படும்.
எம்மவர்கள் தையல் மெஷின்கள், தகரங்கள், தென்னங்கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றைப் பகிர்ந்து அளிப்பதாலும், கட்டிடங்கள் திறப்பதாலும், ரோட்டுக்குத் தார் ஊற்றுவதாலும் சில சில்லறை அபிவிருத்தியாலும் எமது சமூகத்தின் உரிமைகள் கிடைத்து விடாது. தலைவர் அஷ்ரபிற்குப் பிந்திய காலத்தில் எமக்காக எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்டவில்லை.
இந்த மஹிந்தவின் அரசுதான் முஸ்லிம் மாணவர்களுக்கு பிரபல சிங்களப் பாடசாலைகளில் அனுமதி வழங்க மறுத்தது. முஸ்லிம் மாணவியரின் ‘பர்தா’க்களைக் கழற்றச் சொல்லித் துன்புறுத்தியது. அவர்களை வீட்டுக்கு அனுப்பியதும் இந்த மஹிந்தவின் தர்ம ராஜ்ய சட்டம்தான் என்பதை முஸ்லீம்கள் ஒரு போதும் மறந்துவிட மாட்டார்கள்.
அதுமட்டுமா? கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லிம் வர்த்தகர்களை (ஹமீடியாஸ், நோ லிமிட் ஹாஜியார் உட்பட மேலும் பலரை) கோத்தபாய ராஜபக்ஷ குழுவினர் கடத்திப் பல மில்லியன்களைக் கப்பமாகப் பெற்றதை கடத்திச் செல்லப்பட்டவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். முஸ்லிம்கள் உழைக்கும் பணத்தை மஹிந்த குடும்பத்தினர் கொள்ளையடிக்க அது அவர்களின் பாட்டன் சொத்தல்ல. (நொ லிமிட் (No Limit )நிர்வாகத்துடன் நான் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக மறுத்தார்கள் )
அபிவிருத்தி என்னும் மாயையில் விழுந்து எமது இருப்பிடங்களை, காணிகளை, சுதந்திரத்தை எல்லாம் நிச்சயமாகவே இழக்கப் போகின்றோம். எமது கரங்களாலேயே எமது கண்களைக் குத்திக் கொள்ளப் போகின்றோமா? சிந்தியுங்கள்.
முஸ்லிம் நாடுகள் கொடுத்த பல பில்லியன்கள் ரூபா செலவில் சர்வதேச பௌத்த ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளமை மற்றும் தொல்பொருள் புராதன ஆராய்ச்சிகள் என்ற போர்வையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்களை அபகரித்தும் ஹெல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை மஹிந்த நடைமுறைப்படுத்தவில்லை என்று எம்மில் யாருக்காவது மறுக்க முடியுமா?
மேடைகளில் மஹிந்தவைச் சிரிக்க வைப்பதற்காக கீழ்த்தரமான கதைகளைக் கூறித்திரியும் நியாஸ் மௌலவிக்கோ, தொலைக்காட்சியில் தோன்றும் ஆசையில் பேட்டியளிக்கும் முபாரக் மௌலவிக்கோ, தள்ளாடும் வயதிலும் பதவி மோகத்தில் உளறித் திரியும் அலவி மௌலானாவுக்கோ, எம்.எச்.முகம்மதுக்கோ, கிரிக்கட் வர்ணனையாளர் ‘எல்லாம் தெரிந்த எங்கள் சமூகக் கோமாளி’ அஸ்வர் ஹாஜிக்கோ இலங்கை முஸ்லீம்களின் உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு யார் அனுமதி கொடுத்தது?
மறைந்த முஸ்லிம் தலைவர்களுக்கு முத்திரைகள் வெளியிடுவதால் எமது இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்து விடாது. இந்த நாட்டில் சிறுபான்மை என்பது இனிமேல் கிடையாது என்று யுத்த வெற்றியின் பின் மஹிந்த கூறியது வேறு நோக்கத்தில். ஆனால் மேலோட்டமாகப் பார்த்து விட்டு அதை சிறு விடயமாகக் கருத முஸ்லிம்கள் மடையர்கள் அல்லவென்று அரசுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நயவஞ்சகத்தனம், உள்நோக்கம் மற்றும் தர்ம ராஜ்ய நிகழ்ச்சி நிரலுக்கு அடிமைப்பட்டுள்ள மஹிந்தவை தன்மானமுள்ள எந்தவொரு முஸ்லிமும் மீண்டும் வாக்களித்து ஜனாதிபதியாக்க முனையக்கூடாது. தனிப்பட்ட ரீதியில் ஒரு சில பேருக்கு அவர் நல்லவராக இருந்தாலும் முஸ்லிம் சமூகம் என்று வரும்போது மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் பொது எதிரியாவார் என்பதை மறந்து விட வேண்டாம்.
இந்த அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளதாக மார்பு தட்டியவர்கள் வாய்கிழிய வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர்கள் மஹிந்தவின் வேண்டுதலால் அன்வர் இஸ்மாயில் மரணிக்கும் முன்னரேயே அவரின் பதவியை பலகோடி ரூபாய்க்கு விற்றதை முஸ்லீம்கள் மறந்து விடவில்லை. ஏனென்றால் மஹிந்த முஸ்லீம்களின் நண்பரல்லவா?
முஸ்லீம்களின் பூர்வீகம், காணிநிலம், சுய முகவரி, இருப்பு, பாதுகாப்பு எல்லாவற்றையும் பட்டப் பகலில் அபகரித்துவிட்டு சில சில்லறை அபிவிருத்திகளைக்காட்டி எமது வாக்குகளைக் களவாட மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் மஹிந்தவின் சிங்கள நிறைவேற்று அதிகார அராஜகத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது எமது மக்களின் கட்டாயக் கடமையாகும்.
இதன் மூலம்தான் தேசிய பிக்குகள் முன்னணி, தேசிய தேசப்பற்று இயக்கம், ஜாதிக ஹெல உறுமய, கிழக்கு மாகாண முஸ்லீம்களை மீண்டும் அடிமைப்படுத்தத் துடிக்கும் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் கூட்டணியினரின் குறுகிய மற்றும் நீண்டகாலச் சதித் திட்டங்களை முஸ்லீம்களான எம்மால் தவிடு பொடியாக்க முடியும்.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு கட்சி பேதமின்றி நாமனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்து விட்டது. அல்லது எமது எதிர்காலச் சந்ததியை சொந்த நிலத்திலேயே அடிமைகளாக்கி, அகதிகளாக்கிய சிங்களப் பேரினவாதிகளிடமும், தமிழ்த் தீவிரவாதிகளிடமும் அடகு வைத்து அதன் பாவத்தை நாமே சுமந்துகொள்ளப் போகின்றோமா?
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தார்கள். அதன் பலனை இப்போது உணர்ந்துள்ளார்கள். அந்த வரலாற்றுத் தவறிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வாக்களித்து நாமும் அதே வரலாற்றுத்தவறை இழைத்து அவஸ்தைப்படப் போகின்றோமா? (இவ்வாறான கருத்துக்களை ஹக்கீம் பலதடவைகள் பகிரங்கமாக கூறியுள்ளர்.)
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்காக சவூதி அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியைக்கூட அவரின் வலக்கையான ஹெல உறுமய பிக்குகள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கும்வரை மஹிந்த எங்கே தூங்கிக் கொண்டிருந்தார்? பேரியல் அஷ்ரப் அம்மையாருக்கோ ஏனைய கூஜா தூக்கிகளுக்கோ தங்கள் பதவியை இன்னமும் இச்சமூகத்துக்காக விட்டுக் கொடுக்க மனம் வரவில்லையா?
சிரித்து மழுப்பும் மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது. அவர் நல்லவர், முஸ்லிம்களின் நண்பர் என்றெல்லாம் இன்னமும் யாராவது கூறினால் அவரின் சுயபுத்தியை பேரின வாதிகளிடம் தனது சொந்தச் செலவுக்காக விற்று விட்டார் என்பதே அர்த்தமாகும். இந்த அரசுக்கு முஸ்லிம் நாடுகளிடம் அனுப்பிப் பிச்சை கேட்க வைப்பதற்கு மட்டும்தான் முஸ்லிம் அமைச்சர்கள் தேவை. விலாங்கு மீன்போல் முஸ்லிம் நாடுகளோடும், இஸ்ரேலோடும் பிரமாதமாக நடித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடகம் இனிமேல் இந்நாட்டில் வெற்றி பெறாது.
ஈரான், சவூதி, குவைட், லிபியா, பஹ்ரைன், கட்டார் உட்பட முஸ்லிம் நாடுகள் கொடுத்த பணத்தில் பத்து வீதம்கூட எமது முஸ்லிம் மக்களுக்காகச் செலவு செய்யப்படவில்லை. எமது முஸ்லிம் நாடுகளின் பணத்தில்தான் ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமான மாட மாளிகைகளைக் கட்டியுள்ளனர். மஹிந்தவுக்கு இந்த உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியுமா? தனது குடும்ப மேலாதிக்கத்தால் இந்நாட்டை பரம்பரை பரம்பரையாக ஆட்சிசெய்து பௌத்த தர்மராஜ்யம் ஒன்றை உருவாக்க மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலமாக கண்டுவந்த பகற்கனவில் இன்று பாரிய இடியும், பலத்த அடியும் விழுந்துள்ளது.
இலங்கையின் மொத்தச் செலவில் 70 சத வீதமான தொகை ஜனாதிபதி மஹிந்தவின் கைக்குப் போக மீதியாகவுள்ள 30 சத வீதம்தான் நூற்றுக்கும் மேற்பட்ட எல்லா அமைச்சுகளுக்கும் பிச்சையாக ஒதுக்கப்படுகின்றது. ஈற்றில் எலும்புத் துண்டுகளுடன் எம்மவர்கள் சில சலுகைகளுக்காகவும், ரூபாய்களுக்காகவும் எமது எதிர்காலச் சந்ததியை பேரினவாதம் முற்றிப்போயுள்ள இந்த அரசிடம் அடிமைப்படுத்த வேண்டாம் என்றும் தனிச் சிங்களத் துவேஷத்தின் உச்சியில் பௌத்த பிக்குகளிடம் சோரம் போயுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்காக வாக்குக் கேட்டு தமது விருப்புக்களை எமது முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க வேண்டாமென்றும் எமது தலைவர்களை மிகவும் கண்டிப்பாக இச்சமூகத்தின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
நடுநிசியிலும் கோட்-சூட்டுகளுடன் நகைச்சுவை நடிகர்களைப்போல் கூவித்திரியும் அரசியல்வாதிகளே.! (ரிசாட் பதுர்தீன், அமீர் அலி ) இருபது வருடங்களுக்கு முன் வடக்கில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நீண்ட காலத்திட்டங்கள் எதுவும் உங்களிடம் இல்லை. இன்று தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட பின்னரே தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளால் உங்களின் காலம் கழிகின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மானம் போன பின்னராவது உங்களுக்கு ஞானம் பிறக்காமலிப்பது வெட்கக்கேடான விடயமாகும்.
வடக்கின் வசந்தத்தினால் நன்மையடையப் போவது 20 வருடங்களுக்கு முன் துரத்தியடிக்கப்பட்ட யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் முஸ்லிம் மக்களோ, தமிழர்களோ அல்ல. மாறாக வடக்கில் சிங்களக் குடியேற்றத்திற்காக சர்வதேச நாடுகளிலிருந்து வருகின்ற பணத்தையெல்லாம் பஸில் ராஜபக்ஷ ஊடாக கொள்ளையடிப்பதற்கே!
‘வடக்கின் வசந்தம்’ என்று முஸ்லிம் தமிழ் மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி மஹிந்தவினால் வடக்கில் ஏற்கனவே முஸ்லீம்களுக்குச் சொந்தமான பகுதிகளில் நடை பெற்றுவரும் இராணுவ முகாம்களுடன்கூடிய பன்சலைகள் மற்றும் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த முடியுமா? அவரின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சதித்திட்டங்களெல்லாம் இப்போது ஆதாரபூர்வமாக அம்பலமாகிவிட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களிடம் தன்னை மீண்டும் ஜனாதிபதியாக்குமாறு கேட்பதெல்லாம் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் மூலம் நமது வடகிழக்கை பௌத்தரின் பெரும்பான்மைப் பூமியாக ஆக்குவதற்கே என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
இந்தச் சதிமானத்தை எல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு எம்மிடமுள்ள ஒரேவழி அவர் மீண்டும் ஜனாதிபதியாகாமல் தடுப்பதேயாகும். ஆகவே சலுகைகளுக்காக மஹிந்தவின் புகழ் பாடித்திரி கின்ற தலைவர்களே! (பசீர் சேகு தாவூத் இப்போது மஹிந்த ரஜபக்ச ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தேசியத்தலைவர் என்று கூறுகிறார். Sunday Observer 29/08/2010)
முஸ்லிம் மக்களின் தலைவிதியை முஸ்லிம் இளைஞர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். யுத்தத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பிலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுவரை எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர் தனது நோக்கம் நிறைவேறியவுடன் ஏணியை எட்டி உதைக்கும் வரலாற்று அனுபவம் கொண்டவர். உதாரணமாக ஜே.வி.பி, சந்திரிக்கா, மங்கள், ஸ்ரீபதி, கிழக்கு முஸ்லிம்கள்.. என இன்னும் பலரின் விடயங்களைச் சொல்லலாம்.
ஜனாதிபதி மஹிந்தவின் முஸ்லிம் தலைவர்களுடனான இப்போதைய தேநிலவு போலியானது. மூத்த ஹெல உறுமய பிக்குகளின் உத்தரவுப்படி இயங்கும் சிங்கள அதிதீவிரவாதப் போக்குடையவரான ஜனாதிபதி ஒரு அங்குலம் நிலத்தையேனும் முஸ்லிம் மக்களுக்காக விட்டுத்தரப் போவது இல்லை. அவர் நமது மையத்துக்களை அடக்கம் செய்யும் மையவாடியிலும்கூட நிலத்தைச் சூறையாடியது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தேசிய பிக்குகள் முன்னணியின் தேரர்களின் கால்களைக் கொஞ்சி அவர்களின் கால்களில் ஜனாதிபதி வீழ்ந்து கிடக்கும் வரை சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லீம் சமூகம் அவருடன் கட்டித் தழுவுவதால் அல்லது தமது சுயநலன்களுக்காக இச்சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதால் அவர் வீசியெறியும் எலும்புத் துண்டுகளான அபிவிருத்தி என்னும் மாயை தவிர வேறு எதையும் இந்த முஸ்லிம் தலைவர்களால் பெற்றுச் சாதித்து விட முடியாது.
இன்று அரசாங்கத்தில் இணைந்துள்ள கருணா அம்மான் அண்மையில் தமிழர்கள் மத்தியில் வாகரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது ‘நான் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒன்று சேர்ந்துள்ள வரைக்கும் எந்த முஸ்லிம் தலைவருக்கும் தமிழர்களின் ஒரு மயிரைத்தானும் ஆட்ட முடியாது’ என்று கூறியுள்ளார். இதுதொடர் பான ஒலிப்பதிவு நாடா எம்மிடம் உள்ளது.
கடந்த 30 வருடங்களாக கிழக்கு முஸ்லிம்களை புலிகளின் பெயரால் துன்புறுத்தி, கப்பம் பெற்று, அடிமைப்படுத்தி, பள்ளிவாசலுக்குள் தொழுகையில் இருந்தவர்களைச் சுட்டுத்தள்ளிய கருணா அம்மான், பிள்ளையான் போன்ற மாஜிப்புலிகள் அவர்கள் உண்டு வளர்ந்தது முஸ்லிம்களின் பணத்திலாகும் என்பதை இன்று மறந்து போனார் கள். அவர்களின் புலித்தோல் மாறினாலும், புலிகளின் குணம் மாறவில்லை என்பது அவர்களின் பேச்சிலும், நடவடிக்கையிலும் நன்கு தெரிகின்றது.
பிள்ளையான் கூறியதால் கேவலம் ஒரு ஆசிரியர் இடமாற்றத்தைக்கூட தடுத்து நிறுத்த எமது பெரும் அமைச்சரவை மந்திரிகளுக்குக் கூட முடியவில்லை. இன்று கிழக்கில் ஜனாதிபதியின் சம்மதத்துடன் தமிழ்ப் பேரினவாதம் மீண்டும் எம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. எமது விதண்டாவாதத்தால் மஹிந்தவுக்கு வாக்களித்து பஷில் ராஜபக்ஷவின் கழுகுப் பார்வையில் வடக்கை டக்ளஸ் தேவானந்தாவுக்கும், கிழக்கை கருணாவுக்கும் பிரித்தாளக் கொடுப்பதன் மூலம் முழுநாட்டையும் பௌத்த பிக்குகளுக்கு அராஜகம் செய்யக்கொடுத்து அனைத்து முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தப் போகின்றோமா?
முஸ்லீம்கள் ஜனாதிபதிக்கு அளிக்கும் வாக்குகள், முஸ்லீம்களை சிங்களப் பேரினவாதிகளிடமும், அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ்த் தீவிரவாதிகளிடமும் தாமாகவே காட்டிக் கொடுப்பதாகும். அவர்களின் அடாவடிகளுக்குத் தலைவணங்கி வாழ்வதற்குச் நாம் சம்மதம் தெரிவிக்கும் ஆணைகளாகும். ஜனாதிபதிக்கு விழுகின்ற ஒவ்வொரு முஸ்லீம்களின் வாக்கும் முஸ்லீம்களின் அரசியல் தற்கொலையாகும். எனவே இந்த அரசின் சதிவலையில் இன்னமும் நாம் வீழாது எமது சம அந்தஸ்த்தையும் சுய கௌரவத்தையும் சம உரிமையையும் நிலைநாட்ட ஜனாதிபதிக்கு எதிராக நாம் வாக்களிப்போம்.
இந்தத் தேர்தல் மஹிந்தவுக்கும், ஜெனரலுக்கும் இடையிலான தேர்தலல்ல. மாறாக இது சிங்கள இனவெறி மற்றும் தமிழ்த் தீவிரவாதம் ஒன்று சேர்ந்த கூட்டணிக்கும் முஸ்லீம்களின் இருப்பையும் பூர்வீக அடையாளத்தையும் உறுதி செய்யும் கூட்டணிக்குமான தேசந்தழுவிய ஜனாதிபதித் தேர்தல் என்பதை முஸ்லிம்களான நாங்கள் மறந்து விடக்கூடாது.
0 commentaires :
Post a Comment