9/07/2010
| 0 commentaires |
நேபாளப் பிரதமரைத் தெரிவு செய்வதில் இழுபறி
நேபாளப் பிரதமரைத் தெரிவு செய்வதற்கென பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் தலைவருமான பிரசண்டாவின் கட்சிக்கு வாக்களிக்க எம்.பி.யொருவருக்கு ஒரு கோடி ரூபா வீதம் வழங்க மாவோயிஸ்டுகள் முன்வந்தனர்.
இதற்கான நிதியை அவர்கள் சீனாவிடமிருந்து பெற்றதாகவும் நேபாள தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பிலும் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாள நாட்டில், பிரதமர் மாதவ் குமார் நேபாள் தலைமையில் 22 கட்சிக் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அக்கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின், ஜூன் மாத இறுதி முதல் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. தற்போது இடைக்கால அரசு பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், நிலையான ஆட்சிக்கு, பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஜூன் மாதம் முதல், ஐந்து சுற்றுக்களாக வாக்கெடுப்பு நடந்து வந்தது.
ஐந்து சுற்றுக்களிலும் பிரதமர் வேட்பாளர்களான பிரசண்டாவும், ராமச்சந்திர பவுத்யாலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. இந்நிலையில், இருநாட்களுக்கு முன், “நேபாள 1 சேனல்” என்ற தனியார் டிவி, அடையாளம் தெரியாத சீன நபர் ஒருவருக்கும், நேபாள மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண பகதூர் மகாரா என்பவருக்கும் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை அடங்கிய, ‘டேப்’பை வெளியிட்டது.
அதில், மாவோயிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிற கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக, மகாரா, சீன நபருடன் பேசுகிறார். அதில், “நான் என் தலைவருடன் (பிரசண்டா) கலந்து ஆலோசிக்கிறேன். தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், வெளியிலிருந்து நமக்கு 50 எம். பி.க்களின் ஆதரவு தேவை என்று தலைவர் கூறியுள்ளார்.
அப்படி அவர்களை இழுக்க வேண்டு மானால் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். இது தெற்குப் பகுதியை (இந்தியா) சமாளிக்க அவசியம் தேவை என்று கூறுகிறார். இக்குற்றச்சாட்டு குறித்து மறுப்பு தெரிவித்த மகாரா இப்பிரச்சினையில் என் பெயரை வேண்டுமென்றே இழுத்து விட்டு, இட்டுக்கட்டியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment