ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை தொடர்பாக ஏற்கனவே பேசி தீர்வுகாணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயாரென உலகின் ஆறு வல்லரசு நாடுகளும் தெரிவித்துள்ளன. நியூயோர்க்கில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ், பிரிட்டன், சீன, ஜேர்மன் வெளிநாட்டமைச்சர்கள் இம்முடிவை அறிவித்தனர்.
ஆறு நடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் மேற்கொண்ட தீர்மானத்தை ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் விளக்கினார். ஈரானின் நீண்டகால சர்ச்சைக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சோதனை செய்வதற்காக பிரான்ஸ், ரஷ்யாவுக்கு அனுப்ப வேண்டும், 20%க்கும் குறைந்தளவே யுரேனியத்தை செறிவூட்ட வேண்டும் என்பவையே அந்தத் தீர்மானங்களாகும். இதை ஈரான் நிராகரித்தது.
தேவையேற்படின் ஈரானின் எல்லைக்குள் இவற்றைப் பார்வையிடலா மென்றும் ஈரான் கூறியது. இதையடுத்து மேற்கு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தன. தற்போது தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்து ஈரானை வழிக்குக் கொண்டுவர நியூயோர்க் மாநாட்டில் ஆராயப்பட்டது.
ஆறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட தீர்மானம் ஈரான் வெளிநாட்டமைச்சர் மொனாச்சர் மொட்டாக்கியிடம் தெரிவிக்கப்பட்டது. இவரும் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளனர்.
ஆறு நாடுகளும் இவ்விடயம் தொடர்பாக ஒன்றுபட்டுள்ளதால் ஈரான் இதை நிராகரிக்க முடியாது. ஈரானுக்கெதிரான எவ்வகையான தீர்மானங்களிலும் நாங்கள் (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜேர்மன்) உறுதியாக உள்ளோம் என்பதை இந்த மாநாடு காட்டுகின்றது.
ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களையும் மீறி அளவுக்கதிகமாக ஈரான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளதால் அக்டோபர் தீர்மானங்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் வெளிநாட்டமைச்சர் களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20% வீதத்திற்கு மேல் ஈரானால் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை என்ன செய்வது என்பது தொடர்பாக ஆறு நாடுகளும் புதிய தீர்மானங்களுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment