மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தெரிவித்தார்.
ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள்
சீனா நிறுவனமொன்றால் பெருந்தெருக்கள் மற்றும் கற்பாறையகழ்ந்து கல்லுடைத்தல் வேலைகளிற்காகக் கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட “டைனமற்” கொள்கலன்கள் இரண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன
பாதுகாப்புக் காரணங்களிற்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவற்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக மேற்படி டைனமற் வெடித்துப் பாரிய சேதத்தை ஏற்படுத்தின என்றும் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 2 சீனர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்களில் அநேகர் மேற்படி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் என்றும் ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும் மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து பெறுவார்கள் என்றும்,
அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.
பிரதமர் தி.மு.ஜயரட்ன இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்று கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பிரதம மந்திரி உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர் சம்பவத்தில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்புக் கொடுப்பனவும் வழங்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமருடன் சீனா நாட்டுத் தூதுவர் யங் க்சூப்பிங் மற்றும் மற்றும் சீனா நாட்டுத்தூதுரக அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
பிரதமர் சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான முழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். இதன் போது அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். __
0 commentaires :
Post a Comment