9/24/2010

அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

 
இந்தியாவில், மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்ககப்பட்ட சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது.
தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கோரி ஆர்.சி. திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனு மீது வரும் 28-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பாபர் மசூதி – ராமஜென்ம பூமி பிரச்சினையில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநலன் கருதி, இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
திரிபாதி தாக்கல் செய்த மனு இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்வு காண வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் தீர்ப்பு வழங்குவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்பட இருந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. திரிபாதியின் மனு தொடர்பாக வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய உத்தரவில் கூட, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நீதிபதிகளில் ஒருவர், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர், தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அனுப்பலாம் என்றும் கருதினார். எனவே, நீதிமன்ற பாரம்பரியத்தின்படி, தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏமாற்றமளிப்பதாக, ராமஜென்ம பூமி அமைப்பின் வழக்கறிஞர் ரஞ்சன் அக்னிஹோத்ரி, பாப்ரி நடவடிக்கைக் குழுவின் வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜிலானி ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். இரு தரப்பினரும் சுமுகமாகப் பேசித் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்..
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி--ராமஜன்ம பூமி பிரச்சினை, கடந்த அறுபது ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் முதலில் இந்துக்களின் கடவுளான ராமர் கோயில் இருந்ததா அல்லது முஸ்லிம்களின் மசூதி இருந்ததா என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி இந்து கடும்போக்குவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டது.
 

0 commentaires :

Post a Comment