9/19/2010

அரசியல் தீர்வு முயற்சியில் பெற்ற அனுபவம் கசப்பானது: யதார்த்தத்துக்கு ஏற்றவாறு மாறுவதே இன்றைய தேவை

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை யாழ். செயலகத்தில் நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கு பற்றினார்கள். கூட்டமைப்பின் இப் பிரசன்னம் நீண்ட காலத்துக்குப் பின் இடம்பெற்றிருக்கின்றது. சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் அனர்த்த முகாமைத்துவ மையம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்விலும் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அமைச்சர்களான ஏ. எச். எம். பெளசியுடனும் டக்ளஸ் தேவானந்தாவுடனும் இணைந்து நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் எதிலும் பங்கு பற்றுவதில்லை என்ற நிலைப்பாட்டை நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்தது. இந்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கோ கூட்டமைப்புக்கோ எவ்வித நன்மையையும் பெற்றுத் தரவில்லை. அதேநேரம், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடன் நேரடியாகச் சம்பந்தப்படும் விடயங்களிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒதுங்கி நிற்கின்றார்கள் என்ற அபிப்பிராயத்தை மக்களிடம் தோற்றுவித்தது.
கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் ஏற்பட் டிருக்கும் இந்த மாற்றம் தமிழ் பேசும் மக்களால் நிச்சயம் வரவேற்கப்படும். எனினும், இந்த மாற்றம் அரசாங்கம் ஏற்பாடு செய் யும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதுடன் நின்று விடுமேயானால் தமிழ் மக்களின் அடிப் படைப் பிரச்சினையான இனப் பிரச் சினையின் தீர்வு கேள்விக்குறி ஆகிவிடும். கொள்கை ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே இனப் பிரச்சினைக்கான தீர்வுக்குக் கூட்டமைப்புத் தலைவர்களால் பங்களிப்புச் செய்ய முடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் கடந்து வந்த பாதைகளையும் அவற்றின் விளைவுகளையும் நிதானமான ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள் இந்த முடிவுக்கே வருவர்.
தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை காலத்துக்குக் காலம் தலைமை ஏற்றவர்களே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை (புலிகளின் கை மேலோங்கிய காலம் வரை) வழிநடத்தி வந்திருக்கின்றார்கள். இப்போராட்டத்தில் சிறிதளவேனும் வெற்றி கிடைக்கவில்லை. நெருக்கடிகளும் பின்னடைவுகளுமே விளைவுகளாகக் கிடைத்தன. எங்கே தவறு என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் இரண்டு வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்து முன்னெ டுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சமஷ்டிக் கொள்கை. மற்றைய கட்டத்தில் தனிநாட்டுக் கொள்கை.
தனிநாட்டுக் கொள்கை எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமற்றது. தமிழ் மக்களை இடம்பெயர வைத்து அகதிகள் ஆக்கியதும் அழிவுகளையும் இழப்புகளை யும் தந்ததும் அந்தக் கொள்கையே. இந்த நிலை ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறியும் அளவுக்குத் தலைவர்களிடம் தீர்க்கதரிசனம் இல்லாது போய்விட்டது.
தனிநாட்டுக் கோரிக்கை கருத்தீடுபாட்டுடன் முன்வைக்கப்பட்டது எனக் கூற முடியாது. இக்கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுமே பிரதான பங்காளிக் கட்சிகள். தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கையைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி காலம் முழுவதும் தீவிரமாக எதிர்த்து வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கையாகச் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்குச் சங்கடமான நிலை. எனவே, ஒரு சமரச ஏற்பாடாகத் தனிநாடு என்ற முடிவுக்கு வைத்திருக்கலாம்.
வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய போதிலும் தலைவர்கள் அதில் கருத்தீடுபாட்டுடன் இருந்தார்கள் எனக் கூற முடியாது. இத் தலைவர்கள் அத்தீர்மானத்துக்குப் பின் மேற்கொண்ட செயற்பாடுகள் தனிநாட்டுக்குப் புறம்பான தீர்வை நோக்கியனவாக இருந்ததை இங்கு குறிப்பிடலாம். இவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் அழிவுகரமான ஆயுதப் போராட்டம் வளர்வதற்கே வழிவகுத்தது.

தவறான அணுகுமுறை
நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கை என்பதால் தனிநாட்டுக் கோரிக்கை பலனளிக்கவில்லை. தவறான அணுகுமுறை காரணமாகச் சமஷ்டிக் கோரிக்கை பலனளிக்கவில்லை.
சமஷ்டி என்ற பதம் பல்வேறு அதிகாரப் பகிர்வு ஆட்சி முறைகளைக் குறிக்கின்றது. கனடாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் இந்தியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் அதிகார அமைப்பைப் பொறுத்த வரையில் வெவ்வேறானவை. தமிழரசுக் கட்சி சமஷ்டி எனக் கூறிய போதிலும் எவ்வாறான அதிகார அமைப்பைக் கொண்ட சமஷ்டி என்பது பற்றித் தெளிவு படுத்தவில்லை. இதனால் மக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்ற விதத்தில் அர்த்த நிரூபணம் செய்தார்கள். சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தைச் சிலர் சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பதற்கும் இது காரணமாகியது.
சமஷ்டி பிரிவினையல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதில் தமிழரசுக் கட்சி தோற்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். பிரிவினை தான் சமஷ்டி என்ற சந்தேகம் வலுவடையும் வகையி லேயே இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. சத்தியாக் கிரகத்தின்போது தனியான தபால்சேவை ஆரம்பித்து முத்திரையும் வெளியிட்டார்கள். காணிக் கச்சேரியும் நடத்தினார்கள். சமஷ்டிக் கோரிக்கையைத் தனிநாட்டுக்கான ஆர ம்ப கட்டமாகப் பார்க்கும் மனோபாவத்தையே இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தன.
சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றிய சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் தமிழரசுக் கட்சி மேற்கொள்ளவில்லை. அதிகாரப் பகிர் வுக்குச் சாதகமான முற்போக்குச் சக்தி களைப் புறந்தள்ளித் தென்னிலங்கையில் வலது சாரி சக்திகளுடனேயே தமிழரசுக் கட்சி நட்புறவை வளர்த்தது. இதனால் இக் கட்சியை வர்க்க எதிரியாக முற்போக்கு சக்திகள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு இனத்தின் அரசியல் உரிமைக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தும்போது அதற்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்க வேண்டும். பண்டா- செல்வா ஒப்பந்தம் சமஷ்டித் தீர்வுக்கான முதலாவது கட்டம் என்று எஸ். ஜே.வி. செல்வநாயகம் கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு வலுத்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டதோடு கதை முடிந்துவிடவில்லை. அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிறிதொரு சந்தர்ப்பம் சில வருடங்களின் பின் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்தது. இடதுசாரி எதிர்ப்புக்கும் தேசியமய எதிர்ப்புக்கும் முன்னுரிமை அளித்து அச் சந்தர்ப்பத்தைத் தமிழரசுக் கட்சி தவற விட்டது.
தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த போதிலும் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வ வழி¡ ழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் அக் கோரிக்கை தோல்வியடைந்தது.

இன்றைய நிலை
இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துடன் புதிய கட்டம் ஆரம்பமாகியது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த மாகாண சபையை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த தவறிவிட்டோம். அடுத்து, எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். அதையும் நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை.
மாகாண சபையையும் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தமை தமிழ் மக்களின் தலைமையைப் புலிகளுக்குக் கையளிப்பதாக அமைந்துவிட்டது. புலிகளின் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட முன்வந்த தலைவர்களும் பொறுப்பாளிகளே.
வடக்கு, கிழக்கு மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் நிராகரித்ததில் தமிழ்த் தலைவர்கள் ஒரே அணுகுமுறையையே பின்பற்றினார்கள். முழுமையான தீர்வுக்குக் குறைவான எதையும் ஏற்பதில்லை என்பதே அந்த அணுகுமுறை. இந்த அணுகுமுறையைப் பின்பற்றியதால் அரசியல் தீர்வு முயற்சி பின்னடைவு கண்டிருக்கின்றதேயொழிய வலுவடையவில்லை. பதின்மூன்றாவது திருத்தத்துக்கு முந்திய காலகட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்தப் பின்னணியில், இன்றைய நிலையிலே தமிழ்த் தலைவர்கள் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது பிரதான கேள்வியாக உள்ளது.
சரியான முறையில் கையாளாத கார ணத்தால் சமஷ்டிக் கோரிக்கை தோற்று விட்டது. தனிநாடு நடைமுறைச் சாத்திய மற்றது. முழுமையான தீர்வைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற நிலைப்பாடு பின்னடைவுகளையே தந்தது.
இது தான் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் நாங்கள் பெற்ற அனுபவம். புதிய அணுகுமுறையும் புதிய நிலைப்பாடுமே இன்றைய தேவை.
கிடைக்கும் அதிகாரங்களைப் பெற் றுக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களுக் காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுவது தான் அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் முழுமையான அரசியல் தீர்வை அடை வதற்குமான வழி.
பதின்மூன்றாவது திருத்தம் தான் இப்போது சாத்தியமென்றால் தயங்காமல் அதை ஏற்க வேண்டும். முழுமையான அதிகாரப் பகிர்வை இறுதி இலக்காக வைத்துக்கொண்டே அதை ஏற்க வேண்டும். அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வைப் பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்தது.
பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர முடியும். திருத்தம் சர்வசன வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படலாம். தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்ப்பதன் மூலமே சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பது சாத்தியமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு அர சியல் தீர்வை அடைவதற்கான அணுகு முறையைப் பின்பற்றும் வகையில் விரி வடையும் பட்சத்திலேயே இனப்பிரச்சினை யின் தீர்வுக்குக் கூட்டமைப்பின் பங்களிப்பு ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

0 commentaires :

Post a Comment