9/13/2010

மட்டு. சிறையில் கைதிகளுடன் உறவினர் சந்திப்பு; உணவுண்டு அளவளாவி குதூகலம்

சிறைக்கைதிகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளின் குடும்ப உறவினர்கள் கைதிகளை சந்தித்து அளவளாவி உணவு வழங்கி மகிழ்வித்தனர்.
காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் வரை இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 130 கைதிகளின் குடும்ப உறவினர்கள் இதன்போது கைதிகளை சந்தித்தனர்.
கைதிகள் தமது குழந்தைகளை அரவணைத்து முத்தமிட்டு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுடன் ஒன்றாக இருந்து அளவளாவி உணவு உண்டனர்.
இதையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையின் கைதிகள் நலன்புரி உத்தியோகத்தர் அமைப்பினால் கைதிகள் தினத்தையொட்டி வைபவமொன்றும் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் டாக்டர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ. கித்சிறி பண்டார பிரதம சிறைச்சாலை அதிகாரி என். பிரபாகரன் மற்றும் சமயப் பிரமுகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு இதன்போது பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் சிறைக் கைதிகளின் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுக்காக கைதிகளின் மனைவிமாருக்கு கைத்தொழில் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

0 commentaires :

Post a Comment