9/12/2010

உள்@ராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் ஒக்டோபரில் புதிய முறையில் பெப்ரவரியில் தேர்தல்

முற்றிலும் தொகுதி வாரி முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கு ஏற்றவாறு உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமென்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதிய உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க வேண்டும். அதற்கமைய இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி வாரி முறையிலான திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
அடுத்ததாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக் கிறது. புதிய சட்ட திருத்தத்தின்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்படும். 70% உறுப்பினர்கள் தொகுதிவாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
30% விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகளிலிருந்து இந்த 30% உறுப்பினர்கள் தெரிவாகுவார்கள். சில தொகுதிகளில் இரட்டை அல்லது மூன்று அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சி மன்றமொன்றுக்கு ஒரு பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தொகுதிக்குத் தொகுதி ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வெவ்வேறான வேட்பாளர் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வாக்குகள் கட்சியின் சின்னத்திற்கே அளிக்கப்படும். 50%இற்கும் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சியின் செயலாளர் குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தலைவரையோ அல்லது பிரதித் தலைவரையோ அதே போன்று நகர முதல்வரையும் பிரதி முதல்வரையும் தெரிவு செய்ய முடியும்.
50%இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றால் சபை கூடிய பின்னர் இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். குறித்த உள்ளூராட்சி மன்றமொன்றின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியுறும் பட்சத்தில் அதன் தலைவரோ அல்லது முதல்வரோ இராஜினாமாச் செய்ய வேண்டும்.
இந்தத் திருத்தங்களுடனான முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டதும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, அடுத்த வருட நடுப்பகுதியில் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென்றும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். மீள்குடியேற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அமைச்சர் சொன்னார்.

0 commentaires :

Post a Comment