செப்டெம்பர் 26 இல் மறுவாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடும்
நேபாளப் பாராளுமன்றம் புதிய பிரதமரைத் தெரிவு செய்வதில் ஏழாவது முறையாகவும் தோல்வியைச் சந்தித்தது சென்ற செவ்வாய்க்கிழமை பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஏழாவது முறையாகவும் நடந்தது. இதில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா, நேபாள காங்கிரஸ் தலைவர் ராம்சண்ரா பெளல் ஆகியோர் போட்டியிட்டனர். 601 ஆசனங்களையுடைய பாராளுமன்றத்தில் பிரசண்டா 252 வாக்குகளையும் ராம்சண்ரா 119 வாக்குகளையும் பெற்றனர். பெரும்பான்மை யைப் பெற்று பிரதமராக 301 ஆசனங்கள் தேவை.
இதனால் ஏழாவது முறையாகவும் பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தோல்வியடைந்தது. நேபாளத்தில் ஜுன் 30ம் திகதியிலிருந்து அரசாங்கம் இல்லாமலுள்ளது.
மாவோயிஸ்டுகள் அரசாங்கத்தை விட்டு விலகியதால் இந்நிலை ஏற்பட்டது. நீண்ட காலமாக இழுபறிக்குள்ளாகியுள்ள அரசியல் நெருக்கடியை முடித்து வைக்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் தெளிவான முடிவுகளின்றியே பாராளுமன்றம் கூடிக் கலைகின்றது. ஞாயிற்றுக்கிழமையும் பிரதமரைத் தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடந்தது.
ஏழாவது முறையாகவும் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இம்மாதம் 26ம் திகதி மீண்டும் கூடி பிரதமர் தெரிவு செய்யப் படவுள்ளார். இந்நிலைமை தொடர்ந்தால் அரசியலமைப்பு மாற்றம், வரவு - செலவு திட்டம் என்பவையும் பாதிக்கப் படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நீண்ட காலமாகப் போராடிய மாவோயிஸ்டுகள் 2006ம் ஆண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தனர். பின்னர் 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மாவோயிஸ்டுகள் பெரும் வெற்றியீட்டி ஆட்சியமைத்தனர்.
பிரசண்டா பிரதமரானார். ஜனாதிபதிக்கும் பிரசண்டாவுக்கும் இடையிலுண்டான அதிகார மோதலால் மாவோயிஸ்டுகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். அன்று முதல் ஸ்திரமான ஆட்சி நேபாளத்தில் இல்லை. காபந்து அரசாங்கத்தின் பிரதமரான மாதவ் குமாரை மாவோயிஸ்டுகள் வற்புறுத்தி பெரும்பான்மை அரசை அமைக்கும்படி கோரினர்.
இதனால் நீண்ட காலமாக கட்சிகளிடையே பேச்சுகள் நடந்தன. இதில் பேரம் பேசுதல்களும் இடம்பெற்றன. மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் எம்.பி.க்களுக்கு சீன அரசாங்கம் பணம் கொடுத்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. நேபாளத்தில் நிலவும் நீண்ட கால அரசியல் இழுபறிகள் தொடர்பாக ஐ.நா. வும் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது.
நேபாளத்தின் பாதுகாப்பு, அரசாங்கத்தை அமைப்பதில் எழுந்துள்ள சவால்கள், சட்டம், ஒழுங்குகள் குலைந்துள் ளமை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கான விடுபாட்டுரிமையில் உள்ள குறைபாடுகள் என்பவற்றையும் ஐ.நா. முதன்மைப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தை அமைப்பதில் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் சமாதானத்தை அடையும் முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
0 commentaires :
Post a Comment