புனித குர் ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத் துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார்.
அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.
இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது.
தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மற்றும் தலிபான், அல் கைதா அமைப் புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment