9/04/2010

ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களினால்தான் தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர் அமரர் தர்மலிங்கத்தின் நினைவு தினத்தில் சித்தார்த்தன் உரை

சிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்யவில்லை. எமது அமைப்பும் உட்பட தமிழ் மக்களுடைய இரட்சகர் என்று விளங்கிய தமிழினத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்போம் என்று ஆயுதம் ஏந்திய குழுக்களினால்தான் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வந்தார்கள். கொலை காரர்கள், கொலைக்கான சூத்திரகாரர் யார் யார் என்பது பற்றி மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு தமிbழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அமரர் தர்மலிங்கத்தின் 25 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார்.
நேற்று முன்தினம் தாவடியில் அமைந்துள்ள அமரர் வீ. தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் த. சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன், முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் வவுனியா நகர சபைத் தலைவர் லிங்கநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
அமரர் தர்மலிங்கத்தின் புதல்வர் சித்தார்த்தன் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, கட்சியின் ஆதரவாளர்கள், அபிமானிகள் பலர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தர்மலிங்கத்தின் நினைவுக்குழுத் தலைவர் க. கெளரிகாந்தன் தலைமையில் தூபிக்கு முன்னிலையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சித்தார்த்தன் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது,
1948 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த பேரினவாதிகளால் எமது உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தது. தமிழ் தலைவர்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையின்மையே இந்நிலைக்குக் காரணமாகும். தமிழரசுக் கட்சியாக இருந்த ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்து அதைத் தொடர்ந்து மூன்றாகப் பிரிந்து தற்பொழுது பல்வேறு பிரிவுகளாக இயங்கி வருகின்ற தமிழினத்தின் நன்மை கருதி எதிர்கால சந்ததியினருக்காக அனைத்துக் கட்சிகளும் உரிமைகளைப் பெறுவதற்கு ஒற்றுமைப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் பயங்கரமானது. மிகக் கடினமானது எக்காலத்திலும் ஆயுதம் ஏந்திப் போராட முடியாது. ஆயுதம் ஏந்த முற்பட்டால் தமிழினம் முற்றாக அழிந்து விடும். இலங்கை இரண்டாகப் பிரிவதை இந்தியா ஒரு போதும் விரும்ப மாட்டாது. இது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. தனி நாட்டை எப்போதும் அடைய முடியாது. மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

0 commentaires :

Post a Comment