கரடியனாறுப் பகுதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீன நிறுவன மொன்றுக்குச் சொந்தமான வெடிமருந்துகளை நிரப்பிய மூன்று கொள்கலன்கள் தற்செயலாக வெடித்ததிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டமாகி யுள்ளதுடன் அதனை அண்டியுள்ள கட்டடங்கள் பொலிஸ் நிலையத்திற்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 ற்கு மேற் பட்ட வாகனங்களும் முழுமையாகச் சேத மடைந்துள்ளன.
இந்த வெடிப்புச் சத்தத் தால் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியே அதிர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்துக்கு பல்வேறு அலுவல்களுக்காக வந்திருந்த பொதுமக்களும் பொலிஸாரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் சீன நிர்மாணப் பணிகள் நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர்.
சீன நிறுவனத்துக்குச் சொந்தமான வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்கள் பாதுகாப்புக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்றுக் காலை அக்கொள்கலன்களிலிருந்து வெடிமருந்துகளை வெளியே எடுக்கும் போதே சடுதியாக இவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்படி சீன நிறுவனமானது கரடியனாறு பகுதியில் வீதிப்புனரமைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றது. கற்பாறைகளை உடைப்பதற்காக இவ் வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
நேற்றைய இச்சம்பவத்தையடுத்து கரடியனாறு பிரதேசம் பெரும் அல்லோல கல்லோலப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பெருமளவு பொலிஸாரும் இராணுவம் மற்றும் அதிரடிப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொழும்பிலிருந்து பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவொன்று கரடியனாறு சென்றதுடன் அவர்களுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் குழுவொன்றும் சென்று பகுப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்திலேயே அமைச்சர் பியசேன கமகே, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மாகாண அமைச்சர் சுபைர் மேற் கொண்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கைகளை மட்டக்களப்பு இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதவான் இராமகமலன் ஸ்தலத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டி ருந்தார்.
நேற்றைய இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன.
0 commentaires :
Post a Comment