ஆப்கானிஸ்தானில் நாளை சனிக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 249 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க 2500 பேர் போட்டியிடுகின்றனர். நாட்டின் 34 மாகாணங்களிலும் 6835 வாக்களிப்பு நிலையங்கள் தயார் நிலையிலுள்ளன. தேர்தலைக் குழப்பவுள்ளதாகத் தலிபான்கள் எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சில வேட்பாளர்கள் தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் தலிபான்களின் செல்வாக்குள்ள மாகாணங்களான கந்தஹார், ஹொல்மென்ட் மாகாணங்களுக்கு மேலதிக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருந்தும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாதுள்ள இடங்களில் சுமார் ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இப்பிரதேச மக்கள் வாக்களிப்பதற்கு வேறு இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளபோதும் இம்மக்களைக் கொண்டு செல்வதில் பாரிய பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. ஓகஸ்ட் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலையும்விட மிக மோசமான அச்சுறுத்தல்களை தலிபான்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளில் அதிகமானதை கந்தஹார், ஹெல மெண்ட் மாகாணங்களுக்கு அனுப்ப யோசனை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேட்டோ படைகளையும்விட மேலதிக படைகளை (30,000) ஒபாமா அனுப்பியபோதும் தலிபான்களின் நடமாட்டத்தை முறியடிக்க முடியாதுள்ளது.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை நடைபெறும் தேர்தல் முடிவுகளைத் தலிபான்களே மறைமுகமாகத் தீர்மானிக்கவுள்ளதாகவும் கருதப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் ஒன்பது வருட யுத்தம் முடிவுக்கு வரும் கட்டத்திலுள்ள போதும் 34 மாகாணங்களில் 09 மாகாணங்கள் தலிபான்களின் பிடியிலுள்ளன.
இங்கு அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு 63 ஆயிரம் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ்பெற்றுக்கொண்ட அமெரிக்கா அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தானிலுள்ள படைகளையும் வாபஸ் பெறவுள்ளது. இதனால் ஆப்கான் இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவையும் ஜனாதிபதி கர்ஸாயிக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பாராளுமன்றத்திலும் தெளிவான வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. இது இவ்வாறுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக தலிபான்களும் பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தேர்தலில் ஈடுபட வேண்டாமென மக்களை வலியுறுத்தியுள்ளோம். தேர்தலுக்கு உதவும் அதிகாரிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள், பாதுகாப்புப் படையினர் அனைவரும் எமது தாக்குதல் இலக்குகள் என தலிபான்களின் பேச்சாளர் ஷைபுல்லா முஜாஹ்ட் தெரிவித்தார்.
ஆப்கான் மக்கள் பொதுவாக சட்டரீதியற்ற அதிகாரத்திலும் வன்முறையிலும் தங்கியுள்ளனர். எனவே தலிபான்களின் எச்சரிக்கை அதிகமான மக்களை வாக்களிப்பதிலிருந்து தடுக்கலாம்.
0 commentaires :
Post a Comment