ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருடன், அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில், காஷ்மீரில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அம்மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இன்று (செவ்வாய்கிழமை) பாரமுல்லா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள சி்ன்கான்ட் பகுதிகளில் சிறு, சிறு வன்முறை நடந்தது. இன்றைய மோதலில் 6 பேர் காயமுற்றனர். இது வரை இல்லாத அளவிற்கு வன்முறையை கருத்தில் கொண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது கார்கில் போருக்காக விமான சேவை இங்கு நிறுத்தப்பட்டிருந்ததது. தற்போது இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சியின் உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது. ஸ்ரீநகர் அருகே சின்கான்ட் பகுதியில் பாதுகாப்பு படையினரின் முகாம்மீது தாக்குதல் நடத்த முற்பட்ட கும்பல் விரட்டியடிக்கப்பட்டனர்.
காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை நிலவுகிறது. இதனால், ஸ்ரீநகர் உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் கடந்த சனியன்று நடந்த தொழுகையில் பங்கேற்றவர்களில் ஒரு பிரிவினர், வன்முறையில் இறங்கினர். இதனால், அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் குற்றப்பிரிவு அலுவலகம் சூறையாடப்பட்டது. மேலும், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள காஷ்மீர் மாநில கல்வி அமைச்சர் பீர்ஜதா முகமது சயீது வீட்டிலும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஸ்ரீநகர் உட்பட, பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. புனித நூலான குர்-ஆன், அமெரிக்காவில் அவமதிக்கப்பட்டதாக, வதந்தி கிளம்பியதை அடுத்து, பாரமுல்லா மாவட்டத்தில், டேங்க் மார்க் என்ற இடத்தில், ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் தனியார் பள்ளி ஒன்றுக்கு தீ வைத்தனர். இதன்பின் வட்டார வளர்ச்சி அலுவலகம், கோர்ட் வளாகம், தாசில்தார் அலுவலக வாகனங் கள், சமூக நல அலுவலகம், சுற்றுலா துறை குடியிருப்புகளுக்கும் தீ வைத்தனர். போலீஸ் நிலையம் ஒன்றை தாக்கிய கும்பல், அதை சூறையாடவும் முற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 20 பேர் காயமடைந்தனர்; ஐந்து பேர் பலியாயினர்.
பத்காமில் நடந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உட்பட, இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர மற்ற பகுதிகளில் நடந்த வன்முறையில் மேலும் ஏழு பேர் பலியாயினர். பத்காம் மாவட்டத்தில் மாச்சவ் மற்றும் கோகா ஹம்கமா மற்றும் ஸ்ரீநகரின் சப்ஸி மண்டி உட்பட பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. மக்கள் உணர்வுகளை பாதிக்கும் செய்திகளை ஒளிபரப்பிய சர்வதேச செய்தி சேனல்களுக்கும் காஷ்மீர் மாநில அரசு தடை விதித்தது. அதேபோல், "பிரஸ் டிவி' என்ற "டிவி'யின் ஒளிபரப்பும் தடை செய்யப் பட்டது. சில பத்திரிகைகளும் செயல்படவில்லை.
ஆலோசனை: இதற்கிடையில், காங்., தலைவர் சோனியா மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று காலை டில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை பாதி அளவுக் காவது வாபஸ் பெற வேண்டும் என, கேட்டுக் கொண்டார். அப்படிச் செய்தால், அது நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என்றும் வலியுறுத்தினார். காஷ்மீரில் ஒமர் முதல்வராக நீடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஆதரவு அளிப்பதாகக் கூறப்பட்டது. ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தில், உள்துறை அமைச்சகம் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்றாலும், அதை ரத்து செய்யக்கூடாது என, ராணுவ அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. மேலும், நேற்று ராணுவ கமாண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன், காஷ்மீர் நிலைமை குறித்து பெரும் கவலை தெரிவித்தார்.
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வது, காஷ்மீரில் உள்ள பல்வேறு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்னைக்கு நம்பகமான, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வு காண பேச்சுவார்த்தையே உகந்தது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
0 commentaires :
Post a Comment