இலங்கைக்கும் இந்தியாவுக்குமி டையிலான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அரசாங்க உயர் மட்டத்தூதுக்குழுவொன்று இன்று (24 ஆம் திகதி) இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இத் தூதுக்குழுவானது இரு நாடுகளினதும் பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது பற்றி குறிப்பிட்ட அமைச்சர்; மேற்படி தூதுக்குழு இன்று காலை இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளுமெனவும் இத் தூதுக்குழுவில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகி யோர் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அத் தூதுக்குழு தொடர்பான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த மாநாடு தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று கட்சியின் தலை மைப் பணியகத்தில் நடைபெற்றது. அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நெருக்கமான ராஜதந்திர உறவுகள் நிலவுகின்றன. இரு நாடுகளின் தூதுக் குழுக்களும் இதனை மென் மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே நாடுகளுக்கிடையிலான விஜயங்களை மேற்கொள்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயமானது இலங்கைக்குப் பெரும் பிரதி பலனைப் பெற்றுத் தந்துள்ளது.
125 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
வடக்கில் 5,000 மில்லியன் செலவில் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் திட்டம் மற்றும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கான நிதியினையும் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்த வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒருவர் அங்கு உள்ளார். அவரது செயற்பாடுகளும் இதற்கு உறுதுணையாகின்றன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment