சிறுவர்களை படைக்கு சேர்ப்பதை தவிர்க்க போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எதுவும் இல்லை
நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலாநிதி ஷிரந்தி விஜேமான சாட்சியம்
சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார்.
புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத ¡கவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார்.
சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார்.
ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று (12) இரண்டாவது நாளாக கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்ட மாஅதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த திருமதி விஜேமான, சிறுவர் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது தமது அவதானிப்புகளை முன்வைத்தார்.
கொங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் சிறுவர்களின் நலன் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும்தான் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் 60% - 70% வரையில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட சிறுவர்களே இருந்தனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இளைஞர்கள் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும். கல்வி கற்காதவர்களுக்கு முறைசாராக் கல்வியையும் தொழில் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலமே உரிய அபிவிருத்தியை எட்ட முடியும். நாம் என்னதான் புனர்வாழ்வை அளித்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புலி இளைஞர்கள் பற்றிய சிந்தனை வேறாகத்தான் உள்ளது. எனவே, முன்னாள் புலிகள் இயக்க இளைஞர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் பெற்றோர்களுடன் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்.
0 commentaires :
Post a Comment