முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது எங்களின் நண்பர்களின் மெளனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங்
(“In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends.”Martin Luther King Jr.)
இருபது வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி பள்ளிவாசல்களில் வணக்கதில் ஈடுபட்டுக் கொன்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் பொது மக்களை ( சிறுவர்கள் உட்பட ) புலிகள் கொன்றனர் என்பதை ஐயத்திற்கிடமின்றி தமக்கும் தெரிந்தும், இருபது வருடத்திற்கு பின்னர் “இன்று புதிதாய் பிறந்து ” அறிந்தோம் என்பதுபோல் ஒரு வேடிக்கையான செய்தியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் ” தமிழ் பேசும் மக்களின் தலைமகன் ” என விருது வழங்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன “திருவாய்” மல(ர்)ந்திருக்கிறார்.
புலிகள் இருபது வருடத்திற்கு முன்பிருந்தே தமது மதவிரோத செயற்பாட்டின் தொடராக முஸ்லிம்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் வட கிழக்கில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் மே 14 ம் திகதி 1985ல் அனுராதபுர ஸ்ரீ மஹாபோதி விகாரை அனுராதாபுர பேரூந்து தரிப்பு நிலையம் ஆகியவற்றில் சிங்கள அப்பாவி மக்கள் வழிபாட்டில் ஈடுபடிருந்த புத்த பிக்குகள் பிக்குனிகள் உட்பட 146 பேரை கொன்றது தொடக்கம் தமது அந்திம காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தாக்குதல் வரை (10.03.2009) ஏன் அதற்கு சற்று முன்னரான, வாகரை கோவில் பூசாரி வரை எண்ணற்ற கொலைகளை மிலேச்சத்தனமாக செய்துள்ளனர். அது தவிர ஆயிரக்கனக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் பொது மக்களை, அரசியல் வாதிகளை, கல்விமான்களை அரச அலுவலகர்களை என்று ஆயிரக்கணக்கனோரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். அப்போதெல்லாம் புலிகளின் கொடூரங்களை தமிழர் தலைமகன் கன்டு கொள்ளவேயில்லை.
புலிகளின் மறைவுக்கு பின்னர் இப்போதுதான் முதன்முதலில் சுதந்திரமாக புலிகள் தன்னை கொல்ல முடியாது என்ற நிலை உருவான பின்னர் தான் இந்த தமிழ் மக்களின் கோழைத் தலைவன் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் பற்றி தனது புலியுடனான விசுவாசத்தினை மீன்டும் உறுதி செய்து புலிகள் ” பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்பு கோரவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்” (I have to regret that the Tamil Tigers did not apologise for the mosque massacre. That was a mistake, but we have no hesitation whatsoever in apologizing to our Muslim brethren for what happened 20 years ago ) என்று கூறுவது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நித்தியமாக நினைவுகூரப்படும் ஒரு மிலேச்சத்தனமான செயலை தமிழர் தலைமகன் ‘தவறு’ என்று மிக சாதாரனமாக குறிப்பிட்டமையுடன் வட மாகான முஸ்லிம்களினை புலிகள் வெளியேற்றியது பற்றி அன்டன் பாலசிங்கம் ஒரு “துன்பியல் சம்பவம் ” என்று குறிப்பிட்டதை பதப் பிரயோகம் அதன் தாற்பரியம் பற்றி நோக்கினால் அன்டன் சம்பந்தனைவிட ஒரு படி மேலே சென்று சம்பவத்தின் விளைவுகளை தகுதிப்படுத்துகின்ற ஒரு சொல்லை (துன்பத்தை ) பயன்படுத்தியுள்ளார் என்றே எனக்கு தோன்றுகிறது.
ஆனால் சம்பந்தன தவறு என்று குறிப்பிட்டது மட்டுமல்ல “ஆனால் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நடந்ததற்காக எந்தவிதத்திலும் மன்னிப்பு கோர தயங்க மாட்டோம் .” என்று 20 வருடங்கள் தயங்கிய சம்பந்தன் கூறுவதை இது நாள் வரை ஏன் தயங்கினார் என்று யாரும் அவரை கேட்கவில்லை. கேட்டாலும் அவருக்கு அவர் அது குறித்து நிதானமாக பதில் சொல்லுவதை விடுத்து வழ்க்கம்போல் கர்சித்திருப்பார். ஒரு வேலை வயசுக் கோளாறாலும் ஒரு சமூகத்தின் தலைவர் தானே என்ற அதிகார மமதையாலும் கர்சிப்பதை வழ்க்கமாக கொன்டிருக்கலாம்..
தான் ஒரு பழுத்த சட்டத்தரணி (உண்மைகளை பொய்யாக்கி, பொய்களை உண்மையாக்கும்) என்பதையும் நிரூபணம் செய்யும் விதத்தில் அக்கொலைகள் ஏன் நடைபெற்றன என்று வேறு நாசூக்காக வழக்கம்போல் தமிழ் தேசியவாத புலி சட்டத்தரணிகளின் பாசையில் (மொழியில்) “அக்கொலைகளுக்கு சாக்கு கூறமுடியாவிடினும் அப்போது நிலவிய பதற்ற சூழ் நிலையின் பிண்ணனியிலேயே அவை பார்க்கப்பட வேண்டும். ((Mr. Sambanthan points out that while there is no excuse for the killings, they have to be seen in the context of the tense situation at that time.) என்றும் கூறியுள்ளார்.புலிகள் செய்தது பிழைதான் என்றாலும் அதற்கான சூழலையும் பார்க்க வேன்டும் என்று குறிப்பிட்டு புலிகளின் ஈனச்செயலை தனது தொழில் தேர்ச்சி திறைமையை காட்டி நியாயப்படுத்தி உள்ளார். புலிகள் மீது புலிகளை விடவும் சம்பந்தனுக்கு அக்கறை அதிகம். எனது முன்னைய கட்டுரையில் தமிழ் செல்வனே இது குறித்து தனிப்பட்ட முறையிலேனும் தம்மை சந்தித்த சிரான் (SIHRN) குழு முஸ்லிம் உறுப்பினர்களிடம் எதோ ஒரு சாக்கை சொல்லி (தமது கிழக்கு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக) அக்கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் புலிகளுக்கு சாமரம் வீசிய தமிழ் தீவிர இனவாதியான சம்பந்தனுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இல்லை என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது.
மிக ஆழமாக நோக்கினால் இந்தக் கொலைகளினை மட்டும் ஒப்புக்கொன்டு புலிகளுக்காக சம்பந்தன் மன்னிப்பு கேட்டாலும் இக்கொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஏராவூரில் கர்ப்பிணிப் பெண்னின் வயிற்றை கிழித்து சிசுவை கூட கொன்று நூற்றுக்கனக்கான முஸ்லிம்களை புலிகள் கொன்றது பற்றி பலர் பேசாதிருக்கிறார்கள். பீ.பீ சீ உட்பட அனைத்து ஊடகங்களும் அது பற்றி புலிகளை சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூட குறிப்பிட்டதில்லை.
ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அனுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேணி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இராணுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த (ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவ்வாறான பின்னணியில் சம்பந்தன் வகையறாக்களின் வாய் சவடால்கள் கபடத்தனங்கள் குறித்து முஸ்லிம்கள் மிகவும் அவதானமாகவும் இருக்கவேன்டும். இவர் தற்புகழ்சியாக கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமகன் விருது வழங்கியபோது சம்பந்தன் கூறியவற்றுக்கு எதிரிடையான அர்த்தமே பொருத்தமானதாகவிருக்கும். “கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன்.”
இன்று புலிகள் போனபின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் மீது அன்பு காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று புலிகளின் எழுச்சிகளுக்கு முன்னர் முழங்கியவர்கள் தேவையானால் முஸ்லிம்கள் பிரிந்தும் போகலாம் என்று அரசியல் மேடைகளை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அலங்கரித்த தமிழ் தலைமைகள் மெதுவாக முஸ்லிம்களும் தமிழர்கள் என்றபோதும், இஸ்லாமிய தமிழர்கள் என்றபோதும், மௌனம காத்த சந்தர்பங்கள் அநேகம். சரி போகட்டும் என்றால் கடந்த அரசு சமாதான யுத்த நிறுத்த காலத்தில் மூதூர் பகுதியில் காணப்பட்ட தமிழ் முஸ்லிம் முறுகல் நிலைக்கு காரணமாக ஒரு புறம் ஹக்கீம் சமாதானத்துக்கு எதிரான முஸ்லீம்கள் சிலர் தான் காரணம் என்று கண்டுபிடித்துக் கூற அதனை தமிழ் நெட் (Tamilnet)எனும் புலி ஊடகம் கனதியுடன் காவ, சமாதான ஒப்பந்தத்தின் நடுபகுதியில் மூதூர் இன முறுகலுக்கு என்றுமே காரணமான புலிகளை பாதுகாத்து அரசியல் நாணயமற்ற சம்பந்தன் ஒசாமா குரூப் தான் காரணம் என்று புலிகளின் நிதர்சன இணயத்தின் பரப்புரைக்கு மெருகூட்டியவர். இவருக்கு முன்னர் ஜோசப் பரராஜசிங்கம் கணிசமான அளவு முஸ்லிகள் குறித்து தனது புலி அரசியல் சார்ந்த முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை மனித உரிமை சாயத்துடன் உலக பரப்புரை செய்தவர்.
எப்போதோ முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மருதூர் கனி கூட்டணியினரை ” வெற்றிலை பாக்கு வைத்து” அழைத்த போது அலட்சியப்படுத்திய கூட்டணியினர்தான் இன்று தம்பி தவறிப்போனபின் “சம்பந்தம் கலக்க” முனைப்புடன் செயற்படுகிறார்கள். (”தமிழ் முஸ்லிம் கட்சிகள் தங்களது தனித்துவத்தை பாதுகாப்பினை பிரதேச உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்து ஒன்று சேர்ந்து ஒரே குரலில் குரல் கொடுக்காத வரைக்கும் வட கிழ்க்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தமிழ் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளை அங்கீகரிக்க விரும்பவில்லை.”
( ஆதாரம்: தமிழ் டைம்ஸ் ((Tamil Times )- மருதூர் கனி -மார்ச் 1993)
2004 ம் ஆண்டு தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபணத்தை வெளியிடுவதற்கு சம்பந்தன் தலைமையில் சு.ப தமிழ் செல்வனை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நடுவப்பணியகத்தில் சந்தித்து அவர்களின் அறிவுறுத்தலின் அங்கீகாரத்தின் பின்னரே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. சம்பந்தன் புலிகளின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளாக எவ்வித மறுப்புமின்றி தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டவர்கள் எப்படி தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கமுடியும். எப்படி அப்பாவி மக்களின் உயிர்க்களை காவு கொண்ட புலிக்கொடூரங்களை கண்டித்திருக்க முடியும். அதே காலகட்டத்தில்தான் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கெளவ்சல்யனை கொக்கட்டிச்சோலையில் சந்தித்து பேசிய மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஜோசெப் பரராஜசிங்கம் புலிகளை ” 1977 ஆம் ஆண்டில் பெற்ற பொதுத் தேர்தல் எவ்வாறு தமிழ் ஈழம் என்ற ஆணைக்கு சர்வஜன வாக்கெடுப்பு போன்று அமைந்ததோ அதே போன்று விடுதலை புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கூற்றுக்கு ஆணைஏறும் ஓர் சர்வஜன வாக்கெடுப்புப் போன்று இத்தேர்தல் அமைய வேண்டும்” என்று போற்றிப் புகழ்ந்தார் என்பதனை மீட்டுப்பார்த்தால் கூட்டணியே புலிகளின் குரலாக இருந்து பொது நியாயங்களை, பிற சமூக மனித உரிமைகளை, தமது சொந்த சமூக மாற்றுக் கருத்தாளர்களை மறுதலித்துள்ளனர். “ அவரை (பரராஜசிங்கத்தை ) வெட்டி விலத்தியதன் மூலம் தமிழ் மக்களை வெட்டி விலத்தியதாக அவர்கள் நினைத்தார்கள்; என்னுடைய தந்தை எப்பொதுமே புலிகளின் குரலாகவும் தமிழ் மக்களின் குரலாகவும் இருந்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் இலண்டனிலே தனது தந்தையின் இரங்கலுரையில் குறிப்பிட்டது புலிகள் குரலாக பராரஜசிங்கம் செயற்பட்டதற்கு பகிரங்க ஒப்புதலாகும்
1995 மேயில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொன்ட அன்றய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் “இன்றைய அரசியல் சூழ்னிலையில் நான் யாழ் போவது முடியாதுதான் ஆனால் அப்படி செல்வதென்றால் முதலில் அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் அங்கு சென்று குடியமரவேன்டும்” என்று குறிப்பிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களை வானதிர கரகோசமிட செய்து மகிழ்வித்தவர். ஆனாலும் பளுத்த தனது அரசியல் சட்டத்துறை அனுபவ அஸ்திரத்தை கொன்டு நாசூக்காக முஸ்லிகள் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டதை சொல்லால் மறைத்து எதோ முஸ்லிம்கள் தாங்களாக வெளியேறியது போல் ” வெளியேறிய” என்று குறிப்பிட்டதை அங்கிருந்த இன உணர்வலையில் திழைத்திருந்த முஸ்லிம் பெருமக்களும் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறான சொல்லாடல்களையும் சொற்சிலம்பங்களையும் செய்துதானே சிறுபான்மை இனவாத கட்சிகளும் தமது தொண்டர்களை துவண்டு விடாமல் தூக்கி பிடித்துக் கொன்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கூட வட மாகாண முஸ்லிகளை வெளியெற்றிய புலிகளை நோகவில்லை. மாறாக பிரபாகரனை புகழ்ந்தவராகவே அவரும் யாழ்ப்பாணம் போகாமலே இந்த மண்ணை விட்டும் போய்விட்டார்.
சென்ற ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தனும் அவரது பரிவாரங்களும் பொன்சேகாவை ஆதரிக்கவேன்டும் என்று தீவிர முயற்சி செய்தவர் ரவுப் ஹக்கீம் என்பதுடன் பொன்சேகா சிறுபான்மையினருக்கு ஒரு புடவையை போலவென்றும் அவரை(பொன்சேகாவை) தலைப்பாகையாக அணியாமல் (மானத்தை-மர்மஸ்தானத்தை- மறைக்கும்) கோவணமாக அனிந்துகொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக வேன்டுகோளும் விடுத்தவர். பொன்சேகாவை போர்த்தி தமிழரின் மானத்தை காத்த மாவீரர் சம்பந்தன் தனியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் “கழட்டிவிட்டு” ஜனாதிபதியை சந்தித்தது; இந்தியா சென்றது, வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்று பிரச்சாரம் பண்ணியது என்று இபபோது இரு தரப்பினரும் குடும்பிச்சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர் தலைமகன் என்று பட்டம் சூட்டியதை பறித்துவிடலாமோ என்று வேறு வெம்புகிறார்கள்.
நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வளவுதான் “நேர்மையும் உண்மையும்” கொண்ட சம்பந்தனோ அவரின் சகபாடிகளோ இன்று வரை அதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏனெனில் எபபோதுமே புலிகள் செய்தால் அதற்கு காரணம் காண்பதில் சமர்த்தர்கள் இவர்கள். இப்போதான் சற்று மெதுவாக வாயை திறந்து பிளையை நொந்து கொள்வதுபோல் புலிகளை அன்புடன் கண்டிக்கிறார்கள். ஆனால் எங்கள் முதுகு மீது இனிச் சவாரி செய்யமுடியாது ஆனால் ஹக்கீம் வகையறாக்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தரலாம். இபபோதெல்லாம் எதிர் கூட்டணிக்கு எதிர்ப்பதை தவிர வேறு சமாச்சாரமே இல்லை
இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் பற்றி நாடாளுமன்ற பதிவேட்டில் சாட்சியாக பதிவாகியுள்ள சான்றுகளும் எமது கவனத்துக்கு உரியது. முன்னாள் எம்.பீ யும் அமைச்சருமான அன்வர் இஸ்மாயில் தான் மரணிக்கமுன்னர் நாடாளுமன்றத்தில் சம்பந்தனை விழித்து ஆற்றிய உரையையும் இங்கு ஒரு பகுதியையும் இங்கு பதிவிலிடவேன்டியுள்ளது.
“சம்பந்தன் அவர்களே.!
இவ்வாறு தமிழீழத்தின் கோஷத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவருக்கு (அஷ்ரபுக்கு) தங்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் வழங்கிய பரிசு என்ன தெரியுமா? கல்முனையில் அம்மன் கோயில் வீதியில் இருந்த அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டு கிழக்கின் முதலாவது முஸ்லிம் அகதி எனும் பட்டத்தை சூட்டி தலைவருக்கு அனுப்பி வைத்தவர்கள் அல்லவா நீங்கள்.
தமிழீழத்துக்காக பேசிய மர்ஹம் அஷ்ரபுக்கு வழங்கிய தண்டனை அல்ல. அந்த தண்டனை ஒட்டுமொத்தமாக வடக்கு – கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும். அப்போது உங்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் அதிகார மேலீட்டால் நீங்கள் சூழ்நிலைக் கைதியாக மாறிய வரலாற்றினை நாங்கள் மறக்கவில்லை. இந்த பாராளுமன்றத்தில் கடந்த 05 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்பில் பேசி வருகின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தை ஜாலத்துக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி அலங்காரமாக பேசுவதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.
இன்று இந்த சபையில் வாகரை மக்களுக்காக அல்லல்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் பற்றி பேசத் தயங்குவதன் மர்மம் என்ன?ஏனெனில் இந்த நாட்டின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களை கோமாளிகளாக பார்க்கின்ற காலம் மலையேறி விட்டது. இன்று இந்த சபையில் பேசிய சம்பந்தன் ஐயா உட்பட இதர உறுப்பினர்கள் வடக்கு கிழக்கின் இணைவு குறித்து வலியுறுத்தியுள்ளனர். நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம் உங்களது உரிமைகளுக்காக என்று சபையிலே பேசுகின்றீர்கள். அன்று ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பிலும், இன வெறியாட்டத்திலும் ஈடுபட்டபோது அவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக இருந்த உங்களின் மௌனத்தையும் முஸ்லிம்கள் பட்ட அவலத்தினையும் துன்ப துயரங்களையும் அனுபவித்த கொடுமைகளையும் பற்றி பேசுவதற்காக அல்ல. தந்தை செல்வாவும், அண்ணன் அமிர்தலிங்கமும் முஸ்லிம்கள் தொடர்பாக பேசிய கோட்பாட்டுக்காக சமதரப்பு என்ற அந்தஸ்தை முஸ்லிம்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பித்து ஈற்றிலே வாக்கெடுப்பு நடந்தபோது இன்று உங்களால் இனத்துவேசிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஜே.வி.பி.யினரும் ஐ.தே.க.வினரும் ஸ்ரீ.ல.சு.க. கட்சியினரும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் தனித்தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழர் விடுதலை கூட்டணியினரான தாங்கள் மாத்திரம் ஆதரவளிக்காமல் இருந்ததை எமது முஸ்லிம் சுயாட்சியில் வாழப்போகின்ற யாரும் மறக்க மாட்டார்கள். ஆனால் தமிழர் கூட்டமைப்பினரான உங்களின் மனசாட்சிகள் முஸ்லிம்களின் சமதரப்பு கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளும் என்பதை நாங்கள் அறியாமல் இல்லை. சம்பந்தன் ஐயா அவர்களே அதேநேரம் இதற்கான அங்கீகாரம் வன்னியிலுள்ள வன்னித்தம்பியிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதையும் தாங்கள் அறியாமல் இல்லை. இன்றிலிருந்து தமிழ் பேசும் மக்கள் என்று பேசுகின்ற வார்த்தை ஜாலத்துக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டுகின்ற முக்காளத்துக்கும் அரசியலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.”( அன்வர் இஸ்மாயில்)
sbazeer@yahoo.co.uk
0 commentaires :
Post a Comment