8/30/2010

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக்கழக கருத்தரங்கு மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், முன்னாள் அரச அதிபர் கே. கணேஷ், ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்

0 commentaires :

Post a Comment