நேபாளத்தின் இன்றைய பாராளுமன்றம் அரசியலமைப்பொன்றை வரையும் விசேட நோக்கத்துக்காக 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாகக் கெரில்லா போரில் ஈடுபட்டிருந்த மாவோவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே இப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இப் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாகச் செயற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் அரசியலமைப்பை வரைந்து ஏற்றுக்கொள்வதெனவும் அதன் பின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது எனவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற மாவோவாத அமைப்புக்கும் ஜனநாயகக் கட்சிகளுக்குமிடையே உடன்பாடு காணப்பட்டது. புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் வரை இடைக்கால அரசியலமைப்பொன்று நடைமுறையில் இருக்கும்.
ஜனநாயகக் கட்சிகள் எதிர்பாராத வகையில், தேர்தலில் மாவோவாதிகள் தனிக்கட்சியாகக் கூடுதலான ஆசனங்களை வென்றனர். மொத்தம் 575 பேரைக் கொண்ட சபையில் அவர்களுக்கு 220 ஆசனங்கள் கிடைத்தன. நேபாள காங் கிரஸ் 110 இடங்களையும் நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஒன்றிணைந்த மாக்சிஸ்ட்- லெனினிஸ்ட- UML ) 103 இடங்களையும் சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 142 இடங்களையும் பெற்றன.
பாராளுமன்றத்தின் இரண்டு வருட ஆயுட்காலம் 2010 மே 28ந் திகதியுடன் முடிவடைந்தது. அக்காலத்துக்குள் அரசியலமைப்பு வரைவு இடம்பெறாததால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது.
மாதவ் குமார் நேபால் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தால் தான் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க முடியும் என்று மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனை விதித்தது. மாதவ் குமார் நேபால் மே மாத இறுதியில் இராஜினாமா செய்தார். பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2011 மே 28ந் திகதி வரை நீடிக்கப்பட்டது. இத்திகதிக்கு முன் அரசியலமைப்பை வரைவதற்கான முன்தேவையாகப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மாவோவாத தலைவர் பிரசண்டவும் நேபாள காங்கிரஸின் ராம் சந்திர பவ்டெலும் களத்தில் நிற்கின்றனர். பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜுன் மாதத்திலிருந்து இதுவரை ஐந்து தடவைகள் நடைபெற்ற போதிலும் ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆறாவது வாக்கெடுப்பு செப்ரெம்பர் 5ந் திகதி நடைபெறவிருக்கின்றது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (UML ) எடுத்திருக்கும் முடிவே இந்த இக்கட்டு நிலைக்குக் காரணம். வாக்கெடுப்பு மூலமாகவன்றி எல்லாக் கட்சிகளும் கூடிப் பேசிக் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் பிரதமரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று இக்கட்சி கூறுகின்றது. பிரசண்டவும் பவ்டெலும் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று இக்கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்த நிலையில் நேபாள காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைப் பிரதிநிதிகள் 142 பேரும் நேபாள காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவ்டெலுக்கு வாக்களித்தாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. அப்போதும் அவருக்கு 252 வாக்குகளே கிடைக்கும். வெற்றி பெறுவதற்குக் குறைந்தது 288 வாக்குகளைப் பெற வேண்டும்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ( UML) அதன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதால் தனக்கு வெற்றிவாய்ப்பு அறவே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு பவ்டெல் போட்டியிலிருந்து விலகுவது தான் நியாயமானது. ஆனால் அவரோ அவரது கட்சியோ போட்டியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இல்லை. அறுதிப் பெரும்பான்மைக்கு அருகேயும் செல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்டும் போட்டியிலிருந்து விலகாமலிருப்பதற்குப் பிரத்தியேகமான காரணம் இல்லாமலிருக்காது.
பவ்டெல் போட்டியிலிருந்து விலகினால் பிரசண்ட போட்டியின்றித் தெரிவாகுவார். பிரசண்ட பிரதமராகுவதைத் தடுப்பதே நேபாள காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது.
இந்தியாவினது ஆலோசனையின் பேரிலேயே நேபாள காங்கிரஸ் இவ்வாறு செயற்படுகின்றது என்ற அபிப்பிராயம் நேபாளத்தில் பரவலாக நிலவுகின்றது. பிரசண்டவுக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து சிறிய கட்சிகளையும் இந்தியாவே தடுத்திருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள். பிரசண்ட பிரதமராகப் பதவியேற்றதும் முதலாவதாகச் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதையிட்டு அந்த நேரத்தில் இந்தியா அதிருப்தி தெரிவித்ததையும், இந்திய மாவோயிஸ்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்குப் பிரதான அச்சுறுத்தலாக இருப்பதையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில், நேபாளத்தில் மாவேயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வருவதை இந்தியா விரும்பாதென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எவ்வாறாயினும் நேபாள பாராளுமன்றம் இவ்வருட முடிவுக்குள் பிரதமரைத் தெரிவு செய்தால் தான் 2011 மே 28ந் திகதிக்கு முன் அரசியலமைப்பைத் தயாரித்து நிறைவேற்றுவது சாத்தியமாகும்.
பிரதமரைத் தெரிவு செய்ய முடியாமற் போனால் தோல்வியடைவது பிரசண்டவும் பவ்டெலுமல்ல. ஜனநாயகம்.
0 commentaires :
Post a Comment