8/29/2010
| 0 commentaires |
தமிழிலக்கிய வளர்ச்சிக்கு சமண பௌத்த அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு*- முருகேசு ரவீந்திரன்
தமிழிலக்கிய வளர்ச்சி சங்க காலத்திலிருந்து நோக்கப்படுகிறது. கி. பி. முதலாம் நூற்றாண்டு சங்க காலம் எனக் கொள்ளப்பட்டு அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாக கருதப்படுகின்றன. சங்க காலத்திற்கு பிற்பட்ட காலம் சங்க மருவிய காலமாக நோக்கப்படுகிறது. சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் வியந்து போற்றின.
சங்கப் பாடல்கள் சமய சார்பற்றவையாகக் காணப்பட்டன. திருமுருகாற்றுப்படை மட்டும் முருகனின் அற்புதத்தைக் கூறும் சமயப் பாடலாக விளங்குகிறது. கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள சில பாடல்கள் பிற்காலத்தில் பெருந்தேவனார் என்பவரால் பாடப்பெற்றவையாகும்.
திருக்குறள் சமய சார்பற்ற நூலாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அனைத்து சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளும் இலக்கியமாக அது போற்றப்படுகிறது. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் அறநெறிக் கருத்துக்களை எடுத்துக் கூறுபவையாகக் காணப்படுகின்றன. சங்கமருவிய கால இலக்கியங்கள் பலவும் சமண பெளத்த அறிஞர்களால் எழுதப்பட்டவை. கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, ஏராதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணையெழுபது என்னும் நூல்களை எழுதியவர்கள் சமண அறிஞர்களேயாவர். அவர்கள் தம் சமயக் கருத்துக்களை தாம் எழுதிய இலக்கியங்களில் புகுத்தியுள்ளனர்.
சங்க காலத்தில் காதலும் போரும் என வாழ்ந்த மக்களுக்கு உலகியலில் மனச்சலிப்பு தோன்றியது. இந்த விரக்தி நிலையிலிருந்து விடுபடும் வகையில் சங்கமருவிய கால இலக்கியங்களின் தோற்றம் காணப்படுகிறது. கள்ளுண்டு களித்து காதலில் ஈடுபட்டு போர் புரிந்து வாழ்ந்த மக்கள் மனமாற்றத்தை வேண்டி நின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என அறக்கருத்துக்களை போதிப்பனவாக சங்கமருவிய காலத்து இலக்கியங்கள் விளங்கின. இதனால் இந்த இலக்கியங்களை எழுதிய சமண பெளத்த அறிஞர்கள் மீது அக்கால மக்கள் பெரும் மதிப்பை கொண்டிருந்தனர்.
சிலப்பதிகார நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். அவர் படைத்த கோவலனும் அவர்களுக்குத் துணை வந்த கெளந்தி அடிகளும் சமண சமயத்தவராக சித்தரிக்கப்படுகிறார்கள். எனினும் ஏனைய தெய்வ வாழ்த்துப் பாடல்களும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகார காப்பியத்தையொட்டிய கண்ணகி வழிபாடு தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இந்துக்களும் பெளத்தர்களும் கண்ணகியை பெண் தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர். நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலத்தில் வடபகுதியில் பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் காணப்பட்டன.
சமண சமயத்தைச் சேர்ந்த சீமாட்டிக்கு கோயில் கட்டி வழிபடுவது தவறு என நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் வலியுறுத்தினார். வடபகுதியில் காணப்பட்ட பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் முத்துமாரி அம்மன் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. சைவ சமயத்தை நிறுவுவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பங்களிப்பு பிறிதாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனாலும் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு காணப்படுகிறது.
தமிழில் எழுந்த காவியங்கள் பெரும்பாலும் சமண சமயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கின. சிந்தாமணி, வளையாபதி என்னும் பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறு காவியங்களும் சமண சார்புடையன. கொங்குவேளிர் ஒருவர் எழுதிய உதயணன் கதையும் சமண சமயத்தைச் சார்ந்ததாகும். இதற்கு பெருங்கதை என்ற பெயர் விளங்குகிறது. இது ஆசிரியப் பாவால் எழுதப்பட்டது.
இதுவும் சீவகன் கதையைப் போன்ற அமைப்பை உடையது. மேரு மந்தர புராணம் என்னும் காவியத்தை வாமனாச்சாரியார் என்பவர் இயற்றினார். இதுவும் சோழர் காலத்து எழுந்த நூலாகும். தமிழில் தோற்றம் பெற்ற புராணங்கள் அனைத்தும் காவியங்கள் எனக் கூறப்படுகின்றன. காவியங்களுக்கு புராணங்கள் எனப் பெயரிடுவது மரபாகிவிட்டது.
தமிழ் இலக்கண நூல்கள் பெரும்பாலும் சமணப் புலவர்களாலேயே எழுதப்பட்டன. நம்பி அகப்பொருள் எழுதிய நாற்கவிராச நம்பியும், யாப்பருங்கல விருத்தியும் காரிகையும் எழுதிய அமிதசாகரரும், நேமி நாதமும் வச்சணந்தி மாலையும் எழுதிய குணவீர பண்டிதரும் நன்னூல் எழுதிய பவனந்தியாரும், உரையாசிரியர்களுள் இளம்பூரணரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களென்று கூறப்படுகிறது. இவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களில் கடவுள் வாழ்த்திலேனும் கருத்துரையிலேனும் தம் சமய சார்பைப் புலப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு இலக்கிய இலக்கணங்களை எழுதி சமணர்கள் பெரும் புலவர்களாகவும் பேராசிரியர்களாகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர். பல்லவர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் ஆரம்பத்தில் தருமசேனர் என்ற பெயரில் சமண சமய அறிஞராகவே மக்களால் அறியப்பட்டார். அந்த வகையில சமணர்கள் தமிழுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர். சமண பெளத்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் ஒழுக்க நெறியை எடுத்தியம்பும் நூல்கள் தமிழில் காணப்படவில்லை. அந்த வகையில் சங்கமருவிய காலத்தில் எழுதப்பட்ட சமண பெளத்த இலக்கியங்களே மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒரு நெறி முறையை வகுத்தன.
கொல்லாமையை முதன் முதலில் வலியுறுத்திய சமயங்களாக சமண பெளத்த சமயங்களை குறிப்பிடலாம், சமண பெளத்த இலக்கியங்கள் உயிர்க்கொலையை வெறுத்தன. எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்ற அறக் கருத்தை போதித்தன. பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு அபயம் அளித்தவர் புத்தபிரான். அந்த வகையில் பெளத்த இலக்கியங்கள் உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தின. அவ்வாறே சமண இலக்கியங்களும் கொல்லாமையை வலியுறுத்தின.
அத்தோடு கள்ளுண்டு மகிழ்வது பாவம் என்பதையும் பெளத்த சமண இலக்கியங்கள் சுட்டிக்காட்டின. சமண பெளத்த கருத்துக்கள் அக்காலத்து மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. இந்து சமயத்தில் யாகங்களும் யாகங்களோடு இணைந்த உயிர்ப்பலியும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் சமண பெளத்த போதனைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். சங்கமருவிய காலத்தில் சமணமும் பெளத்தமும் தளைத்தோங்கின.
தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சமண பெளத்த சமயத்தை சார்ந்தவர்களாக காணப்பட்டனர். வைதீக சமயங்களான சைவமும் வைணவமும் வீழ்ச்சியுற்று காணப்பட்டன. சங்கமருவிய காலத்துக்குப் பின்னரான பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தளைத்தோங்குவதற்காக சமண பெளத்த கருத்துக்கள் இந்த சமயங்களால் உள்வாங்கப்பட்டன. முக்கியமாக உயிர்க்கொலையை சைவ, வைணவ சமயங்கள் வெறுத்தன. உயிர்க்கொலை செய்வது பாவமென்று போதித்தன. அவ்வாறே மதுவருந்துவதும் கண்டிக்கத்தக்க செயலாக வைதீக சமயங்களால் கூறப்பட்டது. இது பல்லவர் காலத்தில் நிகழ்ந்த பக்தி இலக்கிய நெறியோடு நோக்கப்பட வேண்டியது.
இங்கே நாம் விவரிக்கும் விடயம் சங்கமருவிய காலத்து இலக்கிய வளர்ச்சியாகும். சங்கமருவிய காலத்து தமிழ் இலக்கிய செழுமைக்கு பெளத்தமும் சமணமும் பெரும் பங்காற்றின. பெளத்த நூல்களுள் தலைசிறந்த நூலாக சாத்தனார் இயற்றிய மணிமேகலை கருதப்படுகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாக மணிமேகலை போற்றப்படுகிறது. பெளத்த சமய நெறியை உணர்த்தவே இக்காவியம் இயற்றப்பட்டது. இது மணிமேகலையின் துறவை விளக்குவதோடு வாழ்வின் நிலையாமை, உயிர்களிடத்தில் அன்பைச் செலுத்துதல், பற்று அற்று இருத்தல் முதலிய பண்புகளை உணர்த்துகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குண்டலகேசியும் பெளத்த சமய சார்பான நூலென்பது குறிப்பிடத்தக்கது.
குணடலகேசி கள்வனொருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். அவள் விளையாட்டாக அவன் குறையை சுட்டிக்காட்ட அது வினையாக முடிந்துவிட்டது. அவன் அவளை ஏமாற்றி மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே வைத்து அவளிடம் தான் மலையுச்சியிலிருந்து அவளை தள்ளி கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறான். அவளோ சாவதற்கு முன் கணவனை மூன்று முறை வலம் வந்து வணங்கப் போவதாக தெரிவிக்கிறாள். அவனும் அதற்குச் சம்மதிக்க வலம் வருவது போல் கணவனை வலம் வந்த குண்டலகேசி அவனை மலையுச்சியிலிருந்து தள்ளி கொன்றுவிடுகிறாள்.
பின்னர் பல இடங்களிலும் அலைந்து திரிந்த குண்டலகேசி பெளத்த மதத்தைத் தழுவுகிறாள். குண்டலகேசி பலரை வாதில் வென்று இறுதியில் நீலகேசியிடம் தோற்றாலென்று குறிப்பிடப்படுகிறது. இலக்கண நூல்களுள் வீரசோழியும் பெளத்த மதத்தைச் சார்ந்த புத்தமித்திரனார் என்பவர் இயற்றியதாகும். கீழ்க்கணக்கு நூல்களில் ஒரு சில பெளத்த சார்புடையன.
சங்கமருவிய காலத்தில் தமிழகத்தில் பெளத்தமும் சமணமும் சிறப்புற்று விளங்கின. தமிழகத்திற்கு மிக அருகில் இருக்கும் இலங்கையின் வடபகுதியிலும் இந்த மதங்களின் செல்வாக்கு அன்றைய காலத்தில் மிக அதிகமாகக் காணப்பட்டது. யாழ்குடா நாட்டில் பல பெளத்த விகாரைகள் சிறப்புற்று விளங்கின. கந்தரோடையில் காணப்படுகின்ற பெளத்த வழிபாட்டுத் தலம் இதற்குச் சான்றாக விளங்குகிறது. அகழ்வாராச்சியின் போது பல புத்தர் சிலைகளும் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்டன. யாழ்.
குடாநாட்டில் உள்ள மாதகல் துறைமுகத்தினூடாக சங்கமித்தை வெள்ளரச மரக்கிளையை அநுராதபுரத்திற்கு கொண்டு வந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மாதகல் துறைமுகத்திற்கு அருகிலும் பெளத்த விகாரை ஒன்று சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றது. தமிழர்கள் அநேகர் பெளத்தர்களாகவும் சமணர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
சங்கமருவிய காலத்திற்கு பிற்பட்ட காலமான பல்லவர் காலத்தில் ஏற்பட்ட வைதீக சமயங்களின் வளர்ச்சி இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழர்கள் மீதும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கலாம். இதனால் பெளத்தர்களாகவும் சமணர்களாகவும் வாழ்ந்த தமிழர்கள் பலரும் சைவர்களாக மாறியிருக்கலாம். இவ்வாறான ஒரு கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
சமணமும் பெளத்தமும் வளர்ச்சியுற்றிருந்த சங்கமருவிய காலத்தில் நீதி நூல்கள் பல எழுத்தப்பட்டன. இந்த நீதி நூல்களுள் ஒரே புலவன் எழுதிய பல பாடல்களை காணக்கூடியதாக இருக்கிறது. பல புவலர்கள் பாடித் தொகுத்த பாடல்களும் உள்ளன. இக்காலத்தில் கட்டுரை எழுதும் போது ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து பின்னர் விளக்கம் தருவது போல சமண பெளத்த இலக்கியங்கள் காணப்பட்டன. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறள் குறிப்பிட்ட தலைப்புக்கேற்ற செய்திகளை அடிக்கித் தொகுத்து கட்டுரை வடிவில் அமைந்துள்ளது. ஏனைய நூல்களும் இவ்வாறே அமைந்துள்ளன.
திருக்குறள் ஓர் ஆசிரியரால் பாடப்பட்டது. நாலாடியார் பல ஆசிரியர்கள் பாடிய தொகுப்பு நூலாகும். தனிப்பட்ட ஆசிரியர்கள் எழுதிய நூலாயினும் பண்டைக் கருத்துக்களை தொகுத்து அமையும் போக்கை பெரிதும் தழுவியுள்ளன. பழமொழி என்பது பழைய மொழிகளை தொகுத்து முன்றுறையார் என்பவர் பாடியதாகும். ஏனைய நூல்கள் தனித்தனிப் புலவர்களால் பாடியவை, எனினும் ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டியிட்டு சிறந்த கருத்துக்களை அறிவிப்பதில் முந்திக்கொள்ள முயன்றனர்.
மருத்துவன் உடம்புக்கு நல்லது இது. உடம்புக்கு ஆகாதது இது என விதித்தும் விலக்கியும் கூறியது போல எழுதப்பட்ட இலக்கியங்களும் காணப்படுகின்றன. இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்பன ஒன்றைப் பார்த்து மற்றொன்று அமைந்தது போல காணப்படுகின்றன.
சொல்வதை அளவாக சொல்ல வேண்டுமென்ற கட்டுப்பாட்டோடு எழுதியவர்களும் உள்ளனர். அதிகமாக வற்புறுத்தினால் நீதிகளும் கசந்துவிடும். பிரசார நெடி மிகுந்த இலக்கியங்களை மக்கள் விரும்பிப் படிக்க மாட்டார்கள். ஈரடிகள் கொண்டு விளக்குவது திருக்குறள், நாலடிகளில் இயற்றப்பட்டது நாலடியார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியும் இதனாலேயே எழுந்தது. நாலடியார் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை அதிகம் கூறுவதாக உள்ளது. திருக்குறளைப் பின்பற்றி காமத்துப்பாலும் இதிலுள்ளது. சமண சமயப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலாக நாலடியார் கருதப்படுகிறது.
சிந்தாமணியை எழுதிய திருத்தக்கதேவர் வாழ்க்கையில் நேர்த்தியான கொள்கை உடையவர். துறவியாக வாழ்ந்தவர். வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர். பிரமச்சாரியாக வாழ்ந்தார். சமண சமயத்தவராகக் காணப்பட்டார். இதுவே அவர் காவியத்தின் நெறியாகவும் திகழ்கிறது. சிந்தாமணி என்ற இலக்கியத்தின் நாயகனான சீவகன் எட்டு திருமணங்கள் செய்தவன். வாழவின் நிலையாமையைக் கண்டு அவ்வாழ்வை வெறுத்தொதுக்கி விட்டதால் அமைதி கண்டான். கன்னியர் எண்மரைக் காதல் மணம் புரிந்தான்.
அதன் காரணமாக எதிர்த்த மன்னர்கள் பலரை புறமுதுகிடும்படி போரில் வென்றான். காதலும் வீரமும் காவிய உணர்வுகளாக காட்டப்பட தீவினை தோற்றலும் அறம் வெல்லலும் கதையின் முடிவாக அமைகிறது. சூழ்ச்சி மிகக் கட்டியங்காரன் இறுதியில் தோற்க நன்மை வெல்வதை இங்கே திருத்தக்கதேவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இத்தகைய போரட்டக் கதையை எழுதியதோடு இடையிடையே சமண சமய கருத்துக்களையும் இவர் புகுத்தியுள்ளார்.
வளையாபதி, குண்டலகேசி ஆகிய காவியங்கள் கிடைக்கப்பெறவில்லை. இவற்றின் ஒரு சில பாடல்களே கிடைத்தன. வளையாபதி சமண சமய கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்டது. குண்டலகேசி பெளத்த சார்புடைய நூலென்று அறிய முடிகின்றது. நிலகேசி எனும் நூல் சமண நூலாக கருதப்படுகின்றது. உதயணன் கதையைக் கூறுவது உதயணகுமார காவியம், யசோதர காவியமென்பதும் சமண நூலாகும். இது உயிர்க்கொலையின் தீமையைப் பற்றியும் ஒழுக்க உயர்வைப் பற்றியும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற சமண பெளத்த இலக்கியங்களுக்கு பிற்பட்டதாகவே நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவார பிரபந்தங்களும் சேக்கிழார் பெருமானால் பாடப்பெற்ற பெரிய புராணமும் காணப்படுகிறது. எனவே சைவ வைணவ அறிஞர்களுக்கு முன்னராகவே சமண பெளத்த அறிஞர்கள் தமிழிலே சிறந்த இலக்கியங்களை எழுதியுள்ளனர் என்பதை வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது. சமண பெளத்த இலக்கியங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
0 commentaires :
Post a Comment