8/27/2010

‘நாட்டுக்கு போக கேட்டபோதெல்லாம் ஆணிகள், குண்டூசிகளை உடலில் செலுத்தினர்’ சவூதியில் சித்திரவதைக்குள்ளான பெண் வாக்குமூலம்

சவூதியில் உடல் ரீதியாக மிக மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய இலங்கைப் பணிப் பெண்ணின் உடலிலுள்ள ஆணிகள், குண்டூசிகளை அகற்றும் சத்திர சிகிச்சை இன்று நடைபெறுகிறது.
கம்புறுபிட்டிய திஹகொடையைச் சேர்ந்த எல். பி. ஆரியவத்தியின் சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதற்கு முன்னதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க குறித்த பெண்ணை நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
மேற்படி பெண்ணின் உடலில் 23 ஆணிகள் மற்றும் குண்டூசிகள், கம்பிகள் என்பனவும் காணப்படுவதாக எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கம்புறுப்பிட்டிய போதனா வைத்தியசாலை பதில் வைத்திய அதிகாரி பிரபாத் கஜதீர தெரிவித்துள்ளார். நாடு திரும்ப வேண்டும் என தான் தெரிவித்த போதெல்லாம் உடலுக்குள் குண்டூசிகளையும், ஆணிகளையும் செலுத்தி சித்திரவதை செய்ததாக பெண் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாத்தறை கிளை அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) ஆஸ்பத்திரிக்குச் சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர்.
மோசமான மனித உரிமை மீறல் என்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் பணியகம் முறைப்பாடு செய்துள்ளது. அத்துடன் சவூதி அரசுக்கும் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது என்றும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment