8/27/2010

மலையகத்தில் கல்வி எங்கே போகிறது?

தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று அண்மையில் மலையகத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பாடசாலையைவிட்டு இடைவிலகும் மாணவர்களின் தொகை 10 முதல் 25 வீதமாகக் காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் 7.6 வீதமாக உள்ளது. ஆரம்பப் பிரிவில் 8.4 வீதமானோர் இடை விலகுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் இந்தத் தொகை 1.4 வீதமாக உள்ளது.
மலையகத்திலுள்ள 830 பாடசாலைகளில் பயிலும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களில் இந்தளவு தொகை இடைவிலகி வருகின்ற அதேவேளை, இவர்களுள் 7 வீதமானோர் உயர் தரத்திற்குத் தோற்றி, அவர்களுள் ஒரு வீதமானவர்களே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிறார்கள் என்ற வருந்தத்தக்க தகவல் ஆய்வின் மூலம் வெளிவந்திருக்கிறது.
பெற்றோரின் வறுமை நிலை, போக்குவரத்து வசதி இன்மை, பாடசாலைகளில் பெளதிக வளப்பற்றாக்குறை போன்ற காரணிகள் மாணவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கின்றதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் ஒரு வகுப்பறையில் 2,3 வகுப்புகள் நடைபெறுவதுடன் மேசை, கதிரை வசதிகளின்றி மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது. மேலும் பாடசாலைகளில் மாணவர்களுக்குக் குடிநீர் வசதி, மலசலகூட வசதி இல்லாத நிலையும் காணப்படுகிறது. இந்த ஆய்வுத் தகவல் பற்றி பத்திரிகைகளில் செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்கள் மிகக் குறைந்த பயிற்சிகளையே பெற்றிருப்பதாகவும் 50 வீதமானோர் பயிற்சியே பெறவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும் கல்வி வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படும் பகுதிகளிலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வருவதையே காண முடிகிறது.
மலையகத்தில் போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை இன்னமும் வளர்ச்சியுறாத நிலைதான் காணப்படுகிறது. ஆரம்பப் பிரிவு மாணவர்கள் இன்னமும் நான்கைந்து மைல் நடந்து பாடசாலைக்குச் சென்று வருவதை பல தோட்டப் பகுதிகளில் காண முடிகிறது. அவ்வாறு சென்றாலும் பாடசாலையில் நிம்மதியாகக் கல்வி கற்பதற்கான சூழல் இல்லை. இதனால், மாணவர்கள் இடைவிலகுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
ஆசிரியர்களும் முன்பு நடந்து சென்றாலும் இப்போது மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கர வண்டிகளையும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், மாணவர்களின் தலையெழுத்து மாறுவதாகத் தெரியவில்லை. இதற்கு பஸ் கம்பனி நடத்தும் சங்கக்காரர்கள் மனது வைத்தால் இயலாதது எதுவுமில்லை. என்றாலும் மலையகத்தில் கல்வி நிலையைக் கை தூக்கிவிட ஆசிரியர்களால்தான் பங்களிப்புச் செய்ய முடியும். தாமும் முன்னேறி பாடசாலையையும், பிள்ளைகளையும் முன்னேற்ற பாடுபடுவர்களைப் பாராட்டி வரலாறு பதிவு செய்யும்.

0 commentaires :

Post a Comment