8/28/2010

அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா மு.காங்கிரஸ்

ரவூப் ஹக்கீம்
இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னனியின் கூட்டு கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் யாப்பில் அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள இரண்டு திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
அக் கட்சியிலுள்ள ஒரு சாரார் அரசிற்கு அதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதேவேளை அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் இரு தினங்களுக்கு முன்பு சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர்பீடம் கொழும்பில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
ரவூப் ஹக்கீம்
இரண்டு பதவிக்காலங்கள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தற்போதை யாப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கும், அரசியலமைப்பின் 17வது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான அரசின் திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"இத் தீர்மானம் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தனது கட்சிக்குமிடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, அரசிற்கு தொடர்ந்தும் ஆதரவு தேவைப்பட்டால் கட்சியின் அரசியல் உயர்பீடம் அவ்வப்போது கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்" என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது தலைவர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமது கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடி இந்த தீர்மானத்தை எடு்த்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 8 பேர் தற்போது அங்கம் வகிக்கின்றார்கள். உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அதரவு வழங்குவது என்று அக்கட்சி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

0 commentaires :

Post a Comment