இலங்கையில் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற 395 பேர் தோன்றுகின்றார்கள்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், பூந்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு மையங்களில் உள்ள மாணவ மாணவியருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான போட்டி மிகுந்ததாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்தப் பரீட்சை கருதப்படுகின்றது. நாடெங்கிலும் 2லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் இந்தப் பரீட்சை எழுதுவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள்.
இவர்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக சரணடைந்தவர்களை இந்தப் பரீட்சைக்குத் தயார் செய்வதற்கு மாகாணக் கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கூறுகின்றார்.
சரணடைந்த இளைஞர் யுவதிகளை இந்தப் பரீட்சைக்குத் தயார் செய்வதற்காக மாகாணக் கல்வி அமைச்சு ஜிரிசட் என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு இவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள் தயார் செய்து ஆளுமை மிக்க சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா கூறுகின்றார்.
0 commentaires :
Post a Comment