யாழ்ப்பாணம், அச்சுவேலியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இதன் மூலம் வடக்கில் 4000 பேருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமென பாரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.
இத்திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் முதலீட்டுச் சபையின் தலைவர் நீர், மின்சாரத்துறை சார்ந்த உயரதிகாரிகள் முதலீடுகளை மேற்கொள்ளும் நான்கு முக்கிய நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். இப் பேச்சுவார்த் தையையடுத்து இது தொடர்பான செயற்பாடுகளை ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருட யுத்தத்தின் பின் யாழ். குடா நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் யுகமாக இந்த கால கட்டத்தைக் கருத முடியும்.
இந்த வகையில், யாழ். அச்சுவேலியின் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஒவ்வொன்றும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறுவப்படவுள்ளன.
இதற்கான முதலீடுகளை ஒமேகாலைன், ஓரிட் எப்பரல்ஸ், டைலெக்ஸ் உட்பட நான்கு நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்றன. இதற்கான இணக்கப்பாட்டினையும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளதுடன் நீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நட வடிக்கைகள் பற்றி தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment