8/23/2010

சேர் ராசிக் பரீத்தின் 26 ஆவது நினைவு

மக்கள் சேவைக்காக முழுமையாகப் பாடு பட்ட பெருந்தலைவர்கள் வரிசையில் சேர் ராசிக் பரீத் முக்கிய இடத்தை வகிக்கின்றார்.
அவர் மறைவுற்று இன்றுடன் இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரின் நினைவுகள் பசுமைமிக்கதாக எம்மில் நிலைபெறுகிறது.
தேசாபிமான உணர்வும், சமூகப்பற்றும், பொதுநல மனப்பாங்கும், சேவை உணர்வும் உடைய சேர் ராசீக் பரீத்திடம் நிறைத்திருந்தது.
தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் “முடிசூடா வேந்தராக” சேர் ராசீக் பரீத் கொள்ளப்பட்டார். அவருக்கு மிக உயர்ந்த கெளரவம் சமூகத்தில் கிடைத்தது.
எல்லாத்துறைகளிலும் அவர் தம் சேவைகளால் முத்திரை பதித்தார். அவரின் கல்விப் பணிகள் அவருக்கு சமூகத்தில் கீர்த்தியை உருவாக்கின.
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக, செனட் சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக, அமைச்சராக, இராஜதந்திரியாக என்றெல்லாம் பதவிகளைப் பெற்ற அவர் பதவிகளை சமூக நல மேம்பாட்டுக்கே பயன்படுத்தி வந்தார்.
தன்னலம் கருதாமல் பொது நலத்தையே பிரதானமாகக் கொண்ட சேர் ராசீக் பரீத்தின் கல்விப் பணிகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக கல்விச் சேவைகள் – வரலாற்றில் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டை உணர்த்த அவர் கொழும்பில் பம்பலப்பிட்டி பகுதியில் முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.
சொந்தக் காணியையும், செல்வத்தையும், கட்டடத்தையும், முஸ்லிம் மகளிர் கல்லூரிக்காக நன்கொடை செய்தார். தமது புதல்வி ஹாஜராவின் நினைவாக சொத்துக்களையும் முஸ்லிம் பெண் கல்வி வளர்ச்சிக்காக சேர் ராசீக் பரீத் அன்பளிப்பு செய்தார்.
இலவசக் கல்வியின் தந்தை கலாநிதி சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவின் இலவசக் கல்வி இயக்கத்துக்கு சேர் ராசீக் பரீத் புத்துயிர் அளித்தார். அவர் இலங்கை முஸ்லிம்களின் “கல்வித் தந்தை”யாக மதிக்கப்பட்டவர்.
அரச கழகத்தின் கல்வி நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்த சேர் ராசீக் பரீத் நாடு முழுவதும் அரச முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்க பாடுபட்டார்.
முஸ்லிம் பாடசாலைகளைப் போன்று முஸ்லிம் ஆசிரியர் நியமனத்திலும் அக்கறை செலுத்தினார்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டுமென அரச அவையில் பிரேரணை ஒன்றை சேர் ராசீக் பரீத் 1948 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதியன்று சமர்ப்பித்தார்.
இதன் பிரதிபலனாகவே முஸ்லிம் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமனம் பெற்றனர்.
முஸ்லிம் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் உருவாக்கப்படுவதி லும் சேர் ராசீக் பரீத் ஆர்வமாகச் செயலாற்றினார். இதன் பின்னணி யிலேயே அளுத்கமை, அட்டாளைச் சேனை ஆகிய இடங்களில் ஆசிரியர் கலாசாலைகள் தோற்றம் பெற்றன.
முஸ்லிம் ஆசிரியர்களுக்கான முதன் முதலாகத் தொழிற்சங்கம் உருவாவதிலும் இப் பெரியார் பெரும் பங்கேற்றார்.
1-8-1953 அன்று “இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்” இதன் விளைவாகவே உருவானது. இன்று பரவலாகப் பேசப்படும் மவ்லவி ஆசிரியர் விடயம் தொடர்பாக சேர் ராசீக் பரீத் 1936 இல் அரச சபையில் பிரேரணை கொண்டு வந்தார். இதன் பின்பே அரபு ஆசிரியர் நியமனம் இடம் பெற்றது.
அரபுக் கல்லூரி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஏன்? பல்கலைக்கழகத்திலேயே அரபு மொழித்துறை தோற்றுவிக்கப்பட்டது.
தேசியத் தலைவராகவும் மதிக்கப்படும் சேர் ராசீக் பரீத் சமூகத்துக்கு நலன் எங்கு கிடைக்குமோ, அங்கு துணிவுடன் நின்றார்.
கட்சி தாவுபவர் என்று அவரை அன்று வர்ணித்தவர்கள் சேர் ராசிக் பரீத் அவ்வாறு செய்ததெல்லாம் சமுதாய நன்மையைக் கருதியே என்பதைக் காலக்கிரமத்தில் உணர்ந்து திருப்தி கொண்டனர். தீர்க்கதரிசனம் மிக்க தலைவராக அவர் மதிக்கப்பட்டார்.
யுனானி மருத்துவத்துறைக்கும் அவர் புத்துயிர் அளித்தார். இந்த இஸ்லாமிய மருத்துவத்துறை மங்கிப் போய்விடாமல் அவர் ஒளிபாய்ச்சினார். 28 வருடங்களாக இலங்கை சுதேச வைத்திய அரசினர் குழுவில் பங்கெடுத்து காத்திரமான சேவைகளை வழங்கினார்.
இன்றோ பதவிகளுக்குப் பின்னால் ஓடுபவர்களே அநேகர் சேர் ராசீக் பரீதோ பதவிகளை நாடி ஓடவில்லை. அவரை நோக்கி பதவிகள் வந்தன.
கிடைத்த பதவிகளை எல்லாம் அவர் சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவையாகப் பயன்படுத்தி முன்மாதிரி மிக்க நேரிய தலைவராக மிளிர்ந்தார்.
தமது தள்ளாத வயதிலும் அவர் சமூக வாஞ்சையுடன் சேவையாற்றியதை நேரில் கண்டவன் நான். அவருடன் நெருங்கிப் பழகிய ஊடகவியலாளன் என்ற வகையில் அவர் எமக்கெல்லாம் அரிய ஆலோசனைகளை வழங்குவார். அவை முன்னேற்றத்துக்கான அரிய அறிவுரைகள் தான்!
முஸ்லிம் முதியவர்கள் கவுன்சிலின் தலைவராகவும் இவர் பணி செய்தார். மறைந்த தலைவர்களாக கலாநிதி பதியுதீன் மஹ்மூத், அப்துல் அசீஸ் போன்றவர்களுடன் சேர்ந்து இந்தக் கவுன்சிலின் மூலம் அரும் பணி செய்தார்.
சர்வகட்சி மாநாடுகளில் பங்குபற்றி அரியகருத்துக்களை வெளியிட்டார்.
சோனக சமூகத்தின் “முடிசூடா வேந்தரான” சேர் ராசீக் பரீத் கொழும்பு கோட்டையில் சோனக இஸ்லாமிய கல்வி நிலையத்தை அமைத்தார். சோனக சங்கத் தலைவராக பணி செய்தார்.
ஐக்கிய இலங்கை அவரின் நெஞ்சத்தின் கமலங்களில் உறுதியாக இருந்தது.
இன செளஜன்யத்தையும் அவர் கட்டிக்காக்க காத்திரமான பணி செய்தார். “அவர் ஒரு பெருந் தலைவர். அவரை நாம் தவப்புதல்வராக கொள்கிறோம்” என மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒருமுறை கூறிய கூற்று இன்றும் பொருத்தமாகவே உள்ளது.
“அரசாங்கங்கள் வந்து போகலாம். ஆனால் சேர் ராசீக் பரீதோ என்றும் நிலைத்து நிற்கிறார்” என்று 1956 ஆம் ஆண்டில் பதில் சபாநாயகராக இருந்த எஸ். சி. ஷேர்லி கொரயா கூறியதும் சேர் ராசீக் பரீதின் மேதாவிலாசத்தையே உணர்த்தி நிற்கிறது. சேர் ராசீக் பரீத் ஒரு மாமனிதர்; மனிதப் புனிதர்!!
முஸ்லிம் தலைவர் ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் மாபெரும் சனவெள்ளம் கொழும்பில் - தெமட்டகொடை பகுதியில் – கூடியதென்றால் அது சேர் ராசீக் பரீத் அவர்களுக்குத் தான். அவர் மனித மனங்களை வென்றார். தன்னலமற்ற சேவையால் நீக்கமற நிலைபெற்றார். ஒரு மகோன்னத மனிதர்.
கால் நூற்றாண்டு கடக்கின்ற நிலையிலும் அவரின் நினைவை சமுதாயம் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்வது சாலவும் பொருத்தமானதே!
“ஷஹ்ரு ரமழானி”ல் சேர் ராசீக் பரீதின் பிழைகளைப் பொறுத்து அவரின் பெரும் சேவைகளை அங்கீகரித்து அவருக்கு “ஜன்னதுல் பிர்தவ்ஸ்” நற் சுவன வாழ்வு கிடைக்க இந் நாளில் பிரார்த்திப்போம்.”
அப்பெரியாரை ஆண்டு தோறும் மறக்காமல் நினைவு கூரும் சேர் ராசீக் பரீத் பவுன்டேஷனுக்கும், சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்துக்கும் பாராட்டுக்கள்!! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.

0 commentaires :

Post a Comment