வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 2300 கோடி தேவை என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக, சிந்து நதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியதால் சுமார் 1700 பேர் பலியாகினர். 20 லட்சம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். மேலும் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். கடந்த 80 ஆண்டுகளில் காணாத வெள்ளம் காரணமாக 5 இலட்சம் டொன் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா சார்பாக, ஏற்கனவே 8 ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது 19 ஹெலிகொப்டர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கராச்சி துறைமுகத்தில் இருந்து அந்த ஹெலிக்கொப்டர்கள் செயல்படும். சுமார் 3 ஆயிரம் பேர் ஹெலிக்கொப்டர் மூலமாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 2300 கோடி தேவைப்படும் என ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது. அந்த பணத்தை அளிக்குமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இரண்டாவது கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பாகிஸ்தான் மக்களை ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவித் தொகையை ரூ. 275 கோடியாக அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. மேலும் ஐ.நா. அகதிகள் பிரிவு மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு ரூ. 80 கோடியை அளித்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பாகிஸ்தானுக்கு உறுதி அளித்திருக்கிறது.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெள்ள நிவாரண உதவி பெறுவதை தலீபான் தீவிரவாதிகள் எதிர்த்துள்ளனர். இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் ஆஸம் தாரிக் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டினர் அளிக்கும் உதவிகளை பாகிஸ்தான் அரசு திரும்ப அளிக்க வேண்டும். தலீபான் இயக்கமே சொந்தமாக, ரூ. 100 கோடி அளிக்க தயாராக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் அளிக்கும் உதவியானது, பாகிஸ்தானை அடிமைப்படுத்தும் நோக்கில் அளிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
தலீபான் தீவிரவாதிகளின் இந்த கருத்து குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான ஐ.நா. உதவிகள் வழங்கும் பிரிவு தூதர் ஜீன் மவுரிஸ் ரிபெர்ட் ‘இந்த பேரழிவு மூலமாக தீவிரவாதிகள் பலனடைய முயற்சி செய்கிறார்கள். ஆயுதம் தாங்கிய அழிவு சக்திகளிடம் இருந்து மக்களை விலக்கி வைப்பதில் பாகிஸ்தான் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
0 commentaires :
Post a Comment