இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டையில் மத்தல என்ற இடத்தில் 2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் செயற்பட ஆரம்பிக்கும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் பிரசன்ன ஜே. விக்ரமசூரிய கூறியுள்ளார். விமான நிலையத்தின் முதற்கட்ட நிர்மாண பணிகள் முடிவுற்றதும் மத்தல விமான நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முதலாவது விமானம் வந்து இறங்கும்.
இதன் மூலம் இலங்கையின் நீண்ட கால தேவையான இரண்டாவது சர்வதேச விமான நிலையம் நனவாகும் என்று அவர் மேலும் கூறினார்.
அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2009 நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2000 ஹெக்டயர் காணி யில் விமான நிலைய நிர்மாண வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைத் துறையில் இடம்பெறும் உச்ச மட்ட சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் நிர்மாண பணிகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகின்றன.
முதற்கட்டமாக விமான ஓடுபாதை நிர்மாணம் அமைகிறது. 3500 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஓடுபாதை அமையும்.
உலகில் மிகப் பெரிய விமானமான ஏ380 விமான பஸ்ஸை இறக்கி ஏற்றக்கூடிய வசதிகளுடன் இந்த ஓடுபாதை அமையும் என்று துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.வி.பி. ரஞ்சித் டி சில்வா தெரிவித்தார்.
முதலாம் கட்ட பணிகள், நாட்டின் கெளரவத்தையும், பாரம்பரியத்தையும், விளக்கும் வகையில் அமையும். விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் தாமரை மலரின் வடிவத்தில் அமைக்கப்படும்.
இரண்டாவது கட்டத்தில் 1200 ஹெக்டயர் பரப்பளவு காணியில் விமானங்களின் திருத்த வேலைகள் தளம், விமானிகள் பயிற்சி நிலையம், தனியார் விமானங்களை நிறுத்தும் இடம், தொழில்நுட்ப பயிற்சி கேந்திரங்கள் மற்றும் சமாந்திரமான ஓடு பாதையும் அமைக்கப்படவுள்ளன.
விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் முற்றுப் பெற்றதும் வருடாந்தம் 10 இலட்சம் பயணிகள் வந்து செல்லக்கூடியதாகவிருக்கும்.அத்துடன் வருடாந்தம் 45 ஆயிரம் மெட்ரிக் தொன் சரக்குகளை கையாள முடியும். வருடாந்தம் 30 ஆயிரம் விமானப் பயணங்கள் இடம்பெறும் வகையில் அமையும். விமான நிலையத்தில் 2 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மறைமுக வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்
0 commentaires :
Post a Comment