இன நல்லுறவின் வித்துக்களாக 15 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனங்களிடையே அந்நியோன்யத்தை வளர்ப் பதில் இலக்கியத்தின் பங்கு அளப் பரியது. அரசியல்வாதியால் சாதிக்க முடியாதவற்றைக் கூட இலக்கிய வாதியால் சாதித்துவிட முடியும்.மூன்று தசாப்த மோதல் வடக்கையும் தெற்கையும் மட்டுமன்றி உள்ளங்களையும் பிரித்தது. பிரித்த அந்த உள்ளங்களை இணைக்கும் கலைப் பாலமாக இலக்கியங்களே இருக்க முடியும்.
போர்ச் சூழல் தமிழ் இலக்கியத்தை சிங்கள சமூகமும் சிங்கள இலக்கியத்தை தமிழ் சமூகமும் நுகர்வதற்கு தடைக்கல்லாக இருந்தது எனலாம். இன்று அமைதிச் சூழல் மலர்ந்துள்ள நிலையிலே இலக்கியத்தினூடாக இலக்கியப் பாலம் அமைக்க அவகாசம் உருவாகிவிட்டது.
இந்த மாபெரும் சமூகக் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஆனமடுவ தோதென்ன வெளியீட்டகம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இலங்கையில் பல வெளியீட்டகங்கள் இதுவரை கைவைக்காத முயற்சியில் இந்த சிறிய நிறுவனம் காலடி வைத்திருக்கிறது.
இலக்கியத்தினூடாக சமாதானப் பாலம் கட்டும் நோக்கத்துடன் சிங்கள இலக்கிய நூல்களை தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கிய நூல்களை சிங்கள மொழியிலும் வெளியிட தோதென்ன வெளியீட்டகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த முயற்சி, ஓரிரு செங்கற்களைக் கொண்டு மிகப்பெரிய பாலம் கட்டத் தயாராவது போன்று சிலருக்கு தோன்றலாம். ஒரு சில புத்தகங்கள் தான் இவ்வாறு வெளியிடப்பட்டாலும் அவற்றின் பெறுமதி மட்டிட முடியாது. ஏனென்றால் அடுத்த இனத்தின் உணர்வுகளை, பண்பாட்டை இலக்கியத்தை உணர முடியாததாலே சகோதர இனங்களிடையே தூரம் ஏற்பட்டிருக்கிறது.
தோதென்ன வெளியீட்டகத்தினூடாக கடந்த வருடம் 16 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இதிலே பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படப்பட்டன. அதே போன்று சிறந்த சிங்கள சிறுகதைகள் தமிழில் வெளியிட்டன. அத்தோடு சிறுவர் நாவல்களும் இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்டமாக கடந்த வாரம் 15 மொழிபெயர்ப்பு நூல்கள் கொழும்பில் வெளியிடப்பட்டன. கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் போது 7 சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களும் 7 தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்டன. ஒரு சிங்கள நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிங்கள மொழியில் இருந்து தமிழில் வெளியிடப்பட்ட நூல்களிடையே திக்கவல்லை கமால் மொழிபெயர்த்த வெற்றியின் பங்காளிகள்; குறும்புக்காரக் குரல்கள் ‘தொடரும் உறவுகள்’ ஆகிய நூல்களும் எம். எஸ். பாஹிம் எழுதிய ‘ரோஜா இளவரசி’ ‘குருவிக் கூட்டாளிகள்’ நூல்களும் ரவி ரத்னவேல் எழுதிய ‘ஆகாயப் பூக்கள்’ நூலும் எம். ஏ. எம். யாகூத் எழுதி ‘சங்கமன்’ நூலும் அடங்கும்.
சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களிடையே எஸ். அருளானந்தனின் வாக்கினிலிலே இனிமை வேண்டும் நூல் தம்மிக ஜெயசிங்கவினால் ‘கம்தொர விக்ரமய’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஏ. கே. குணநாதனின் மரம் வெட்டியும் ஒரு தேவதையும், சங்கருக்குப் பிறந்த நாள், குட்டிமுயலும் சுட்டிப் பயலும் பஞ்சுக் கால்கள் ஆகிய நூல்கள், ஏ. சீ. எம். கராமத் மற்றும் சிட்னி மாகஸ் டயஸ் ஆகியோரினால் சிங்களத்தில் வழங்கப்பட்டன. திக்கவல்லை கமாலின் உதயக் கதிர்கள் நூல் ‘ராலியா’ என்ற பெயரில் ஏ. சீ. எம். கராமத்தினால் சிங்கள மொழி மாற்றம் செய்யப்பட்டது.
இவற்றில் சிறுவர் நூல்களே அதிகமாகக் காணப்பட்டமை முக்கிய அம்சமாகும். ஏனென்றால் மாணவர் உள்ளங்களின் இன நல்லுறவின் விதைகளை தூவுவதன் மூலமே உயர்ந்த பயனை எட்ட முடியும் என்பது தோதென்ன வெளியீட்டகத்தின் எண்ணமாகும்.
சிங்கள சமூகத்திற்கு தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பை உணரவும் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு சகோதர சிங்கள சமூகத்தின் எண்ணங்களை தெரிந்து கொள்ளவும் இந்தப் புதிய முயற்சியில் காலெடுத்து வைத்ததாக தோதென்ன வெளியீட்டக பணிப்பாளரும் பிரபல சிங்கள எழுத்தாளருமான சிட்னி மாகஸ் டயஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வெளியீட்டு விழாவில் கொழும்பு ஸ்ரீபாலி பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி டியுடர் வீரசிங்க சிறப்புரையாற்றினார்.
இலங்கையில் சகோதர கலாசார இலக்கியம் வளர்ச்சி காணாததால் சமூக அமைப்பென்றை கட்டியெழுப்ப முடியவில்லை என்பது அவரது கருத்தாக அமைந்தது. இந்தப் பிரச்சினையில் இலக்கியத்தின் பங்கு அவசியமற்றது வெளிப்பார்வைக்குத் தோன்றலாம். ஆனால் சகோதர கலாசார உறவில் இலக்கியத்தின் பங்கு இன்றியமையாதது என கலாநிதி ரியூடர் வீரசிங்க ஆணித்தரமாகக் கூறினார்.
யுத்தத்திற்குப் பிந்திய இன்றைய காலகட்டத்தில் உடைந்த மனங்களை இணைக்கும் கைங்கரியத்திற்கு இலக்கியங்கள் கூடுதல் பங்காற்ற முடியும். இதற்கான ஆரம்ப எட்டை தோதென்ன எடுத்து வைத்திருக்கிறது எனவும் அவரது உரையில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆங்கில, ரஷ்ய இந்திய மற்றும் பிரான்ஸ் இலக்கியத்தை அறிந்துள்ள அளவிற்கு நாம் சகோதர இலக்கியத்தை அறிந்திருக்கவில்லை. என்று அவர் கூறிய விடயம் பலரையும் சிந்திக்க வைத்தது.
கல்வி அமைச்சின் கல்வியியல் பீட விரிவுரையாளர் எஸ். முரளிதரன் இலக்கியத்தினூடாக ஒரு சமூகத்தின் மீது அயலவ சமூகத்திற்குள்ள வகிபாகம் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
இலங்கைக்கு தேசிய இலக்கியமொன்றின் தேவைப்பாட்டை நிறைவேற்ற, மொழியே பிரதான தடையாக உள்ளது. இதற்கு நெடும் பயணம் செல்ல வேண்டும் சமாதானமென்பது சண்டைக்கு எதிரான அம்சமல்ல- சமாதானமென்பது முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என அவரின் உரையில் குறிப்பிடப்பட்டது.
பிளவுபட்ட சமுகங்களுக்கிடையில் பாலம் கட்டுவதற்கு ஆரோக்கியமான இலக்கியங்கள் எழுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் அயலவரின் கலாசாரத்தை உள்வாங்குவது நீண்ட பயணம் என்றும் கூறினார்.
சிங்கள, தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்படுகின்றன. இவ்வாறான மொழிபெயர்ப்பு நூல்கள் மாணவர் மத்தியில் கொண்டு செல்லப்படுவதன் மூலமே அதன் பயனை அடைய முடியும் என்பதும் முரளிதரனின் கருத்தாக இருந்தது. சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு போர், இன வாதம் என்பவற்றுக்கு எதிரான ஆளுமைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு எழுத்தாளர்கள் நாட்டின் தலைவர்களாக கையாளப்பட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிங்கள, தமிழ் மூத்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கள, தமிழ் மூல நூல்களின் ஆசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலக்கியத்தினூடாக சமாதானப் பாலம் அமைப்பதினூடாக நாட்டில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் இலக்கியவாதிகள் இதனை செய்வதாக இல்லை என எஸ். அருளானந்தன் ஆதங்கப்பட்டார்.
சிறிய தீவில் வாழ்கிறோம். ஆனால் சிங்கள தமிழ் மக்களிடையேயான தொடர்பில் விரிசல் காணப்படுகிறது. தூரத்தில் உள்ள ரஷ்யா, பிரான்ஸ் கலாசாரங்களை இலக்கியங்களினூடாக தெரிந்து கொண்ட அளவிற்கு அயலவரின் கலாசாரத்தை தெரிய முடியாதிருப்பது பற்றி வெட்கப்படுவதாக பிரபல சிங்கள எழுத்தாளர் ரஞ்சித் தர்மகீர்த்தி கூறியிருந்தார்.
முழு இலங்கையையும் கறுப்பாக்கிய கறுப்பு ஜுலை இடம்பெற்ற தினத்திலே இந்த வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கறுப்பு ஜுலை நிகழ்வு இடம்பெற்று 27 வருடங்களின் பின்னர் அந்த கரிநாளை அனுஷ்டிப்பதற்காக சமாதானப் பாலம் அமைக்கும் நூல் வெளியீட்டு விழா இடம்பெறுவதாக எழுத்தாளர் சிட்னி மாகஸ் டயஸ் அறிவித்தார்.
மோதல்கள் தீர்ந்த போதும் அதன் எச்சங்கள் எஞ்சியிருக்கவே செய்யும். அரசியல்வாதிகள் எவ்வளவுதான் வாய்கிழியப் பேசினாலும் தூரமான உள்ளங்களை அரசியல்வாதிகளாலன்றி இலக்கியவாதிகளினாலே இணைக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடையாது. அயலவரின் இலக்கியத்தினூடாக சகோதர சமூகத்தின் உணர்வுகளை அறிவோம். இலக்கியத்தினூடாக சமாதானப் பாலமமைக்கும் முயற்சிகள் தொடரட்டும்.
0 commentaires :
Post a Comment