தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, வீடமைப்பு நிர்மாணப் பொறியியல் துறை அமைச்சுப் பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகவும் ஆனால் ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பியும் கட்சியின் அரசியல் பீட உறுப்பினருமான ஜயந்த சமரவீர கூறினார். இதேவேளை, ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு தொடர்பில் அரசாங்கம் நேற்று தனது நிலைப்பாட்டை வெளியிட்டது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய சிரேஷ்ட அமைச்சர்கள்; மேற்படி நிபுணத்துவ குழுவை கலைப்பது குறித்து ஐ. நா. மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளது. அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ், மைத்ரிபால சிரிசேன ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றினர். ஐ. நா.வுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணி வருகிறதெனவும் சகல பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பேணுவதற்கு உச்ச அளவில் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை நடுநிலையாக பேணி வருவதாகவும் அதன் காரணமாகவே அணிசேரா மாநாடு இலங்கையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறினார். சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகள் இந்த விசேட குழுவை ரத்துச் செய்யுமாறு ஐ. நா. செயலாளரை கோரியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜயந்த சமரவீர; அமைச்சர் விமல் வீரசன்ச தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தையும் ஊடகங்களுக்கு விளக்கினார். அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையில் இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படலாம் என்பதாலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவைக் கட்டுக்கோப்பை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நாடுகளின் தூதரகங்களுடன் தமது கட்சி பேச்சு நடத்தி வருவதாகத் தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் புவாட் முஸம்மில் இங்கு கூறினார். இதன்படி, நேற்று (09) ரஷ்ய தூதரகத்திற்கு மனுவொன்றை கையளித்ததாகவும் ரஷ்யா தலையிட்டு நிபுணத்துவ குழுவை வாபஸ் பெறச் செய்யுமாறும் தமது கட்சி கோரியதாக அவர் கூறினார். இது குறித்து தமது நாட்டுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய தூதரகம் உறுதியளித்தது. இன்று சீனா மற்றும் இந்திய தூதரகங்களுடன் பேச உள்ளதாகவும் முஸம்மில் குறிப்பிட்டார். சாகுவரை உண்ணாவிரதம் தொடர்கிறது.... தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. அவர் கடந்த 34 மணித்தியாலங்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதனால் அவரது உடல் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் புவாட் முஸம்மில் தெரிவித்தார். ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலம் தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, ஐ. நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை தொடருகின்ற நிலையில், நேற்று அவரது கட்சியினர் ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு நியமனம் தொடர்பில் ரஷ்யா இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தும், மேலும் ஆதரவை கோரியும் கொழும்பு ப்ளோவர் வீதியில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி தேசிய சுதந்திர முன்னணியினர் பேரணியை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ‘ரஷ்யாவுக்கு நன்றி’ என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர். | |
7/10/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment