7/22/2010

போட்டானே ஒரு போடு *இது சீமான் அல்ல சேரன் *



திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

kavingar-cheran
நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார். தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் சர்வதேச நாடுகளுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினுடைய இராணுவ முனைப்புகள் நசுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் எங்களுடைய தமிழீழம் என்ற இலட்சியத்தையும் கருதுகோளைiயும் புதிய தளங்களிலும் புதிய அரசியல் நிலைப்பாடுகளிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனுடைய விளைவாகத் தான் நாடு கடந்த தமிழீழ அரசு முன்மொழியப்பட்டுள்ளது எனவும் சேரன் குறிப்பிட்டார்.

தாயகத்தில் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில குறிப்பாக 2006ம் ஆண்டு பேச்சுவார்த்தை முறிவடைந்த காலப்பகுதியில் இத்தகைய ஒரு எண்ணக்கரு ஏன் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன் அந்தக் காலகட்டத்தில் தாயகத்தில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு தாயகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் அந்த அரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியே நடந்து கொண்டிருந்தது என்றும் அந்த நேரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேவை இருக்கவில்லை என்றும் அதே போல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாயக அரசுடன் சார்ந்து தாம் வாழ்கின்ற நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தனர் என்றும் பதிலளித்தார்.

2002ம் ஆண்டிற்கும் 2006ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்தில் இயங்கிய அங்கீகரிக்கப்படாத தமிழீழ அரசிற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சர்வதேச றாஜதந்திர நகர்வுகள் மற்றும் அரசியல் முன்னெடுப்புகளில் தீவிரமான கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்ட சேரன் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்ததைப் போன்ற எழுச்சியும் போராட்டங்களும் 2006ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இருந்திருந்தால் அப்போதே தமிழீழத்தை அமைத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து சர்வதேத்திடம் ஒரு குற்ற உணர்வு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன், அப்படித் தான் எண்ணவில்லை என்றும் சர்வதேச நாடுகளுக்கு குற்ற உணர்வென்பது கிடையாது என்றும் அரசியலில் தமது நிரந்தரமான நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவை செயற்படுகின்றன என்பதுடன் இரட்டைத்தன்மையுடனும் இயங்குகின்றன எனப் பதிலளித்தார்.

நாம் எவ்வளவு பலமாகவும திறமையாகவும் நாடு கடந்த தமிழீழ அரசைக் கட்டி எழுப்பப் போகிறோம் என்பதைப் பொறுத்து சர்வதேச அரங்கில் எமது கருத்துக்களை நாங்கள் தெளிவாக முன்வைக்க முடியும் எனக் குறிப்பிட்ட சேரன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை தன்னுடைய முதலாவது மாநாட்டின் மூலம் உலக அரங்கில் ஒரு றாஜதந்திரத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாடு கடந்த தமிழீழ அரசு இரண்டு முகங்களைக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் அதன் ஒரு முகம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அரசியலைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் அடுத்த முகம் தாயகத்திலே உருவாகும் தமிழீழத்திற்கான தார்மீக ஆதரவையும் பிற ஆதரவுகளையும் வழங்குவதாகும் எனவும் சேரன் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment