7/17/2010
| 0 commentaires |
சிங்கள இலக்கியத்தின் யுக புரு'ர் மார்டின் விக்கிரமசிங்க
சிங்கள இலக்கியத்தின் யுக புருஷராக வர்ணிக்கப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்க மறைந்து 34 வருடங்கள் பூர்த்தியா கின்றன.
1890 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் தென் பிராந்தியத்தின் கொக்கலையில் ஒரு கிராமத்தில் பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்க தனது 24 ஆவது வயதில் முதலாவது நாவலை வெளியிட்டார். இவரது இளமைக் காலம் இவரது சிறிய கிராமத்தில் காடும் காடடர்ந்த பிரதேசம், நதியும் நதிக்கரைச் சூழலும், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலும் கடற்கரையும், தூரத்தே வயல்வெளியும் வானமும், பற்றையும் பற்றைக்காடும், அதில் செடிகொடிகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும் காணப்பட்ட ஒரு ரம்மியமான சூழலிலேயே கழிந்தது. ஆதலால் இந்த கிராமத்துச் சூழல் இவரது அநேகமான சிறுகதைகளிலும் நாவல்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.
இவர் மறைந்த தறுவாயில் தினகரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரை யொன்றில் என். எம். அமீன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
1890 ஆண்டு மே மாதம் 29ம் திகதி இலங்கையின் தென் பகுதியின் ஹபரதுவத் தேர்தல் தொகுதியிலுள்ள கொக்கலை என்னுமிடத்தில் புஞ்சி எலிசார குடும்பத்தில் பத்துப் பேரில் ஒரே ஆண்மகனாகப் பிறந்தார். சொந்தக் கிராமத்திலே சிங்களக் கல்வியைப் பெற்ற மாட்டின் விக்கிரமசிங்க காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியை பெற்றார்.
சிறு வயதிலே தந்தையை இழந்துவிட்டார். வளரும் பருவம்வரை தெற்கின் கடற்கரையோரத்தின் கிராமப் புறத்திலேயே வாழ்ந்தார். பின் கொழும்பில் ஒரு புத்தகசாலையில் லிகிதராகச் சேர்ந்தார். ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலமே பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக வர முடிந்தது.
1946 ஆம் ஆண்டு வரை தினமினவில் பணிபுரிந்து எழுத்துத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டினார். சிங்கள இலக்கியத்திலே புதிய ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கி அதனை சமுதாய இலக்கியமாக மாற்றியவர் மார்ட்டின் விக்கிரமசிங்கவே. சாதாரண மனிதனைப் பற்றி சாதாரண மொழியில் இலக்கியம் படைத்து புதிய சம்பிரதாயத்தினை ஆரம்பித்து வைத்தார். புரட்சிகரமான இப்பாணியை இவரது முதல் நாவலில் காணலாம். 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட லீ லா என்ற நாவலின் மூலம் தனது புதிய அசைவியக்கத்தினை ஆரம் பிக்கின்றார். நாவல் இலக்கியத்தில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்திற்காக வித்தியாலங்கார பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது.
கலாநிதிப் பட்டம் வழங்கும் போது வித்தியாலங்கார பல்கலைக்கழக மொழிப்பீடத் தலைவர் பின்வருமாறு பேசியிருக்கின்றார். ‘சமகால இலக்கியத்தினை புதிய மோஸ்தரில் அமைத்து அதன் வழியில் செல்கின்றவர் மார்டின் விக்கிரமசிங்க.’ இவருடைய ஆக்கங்கள் பல இவருக்கு அதிகமான செல்வாக்கினைத் தேடிக் கொடுத்தது. 1930 இல் எழுதிய வரலாற்று நாவலான ரோஹினியும் அவற்றில் ஒன்றே. பலமுறை பிரசுரிக்கப்பட்டு விற்பனையான இந்த நாவல் துடுகமுனு கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டது. கம்பெரலிய என்ற இவரது ஆக்கம் இலக்கியத் திறமையின் உச்ச கட்டத்தினை காட்டுகின்றது.
இவர் சோசலிசக் கொள்கையை விரவாக ஆராய்ந்து பல ஆக்கங்கள் வெளியிட்டுள்ளார். பரிணாமவாதத்தை சிங்களத்திற்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே, தனியாக நாவல் மட்டுமன்றி சிறுகதை கவிதை, நாடகம் விமர்சனக் கட்டுரை ஆகிய அத்தனை துறையிலுமே ஈடுபாடுடைய ஒரு பரிபூரண எழுத்தாளர் மார்டின் விக்ரமசிங்க என்று கூறினால் மிகையாகாது.
பிறந்த இடத்தை, கிராமப் புறத்தை நேசிக்கும் பண்பு ஏனையவர்களை விட மார்டின் விக்கிரமசிங்கவிடம் அதிகமாகக் காணக் கூடியதாகவுள்ளது. இதனை இவரது நூல்களின் பின்னணியிலிருந்தே உணரலாம். அது மட்டுமன்றி இவரது கடைசி விருப்பம் கூட தான் பிறந்த மண்ணிலே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். கடைசிச் சந்தர்ப்பத்தில் கூட கொக்கலையிற்கு போக வேண்டுமென்று கேட்கவே குடும் பத்துடன் அங்கு போய் வந்ததாக கூறப்பட்டுள்ளது. கிராமப்புற மனி தனையும் கிராமப்புற சூழ்நிலை களையும் அதிகமாக நேசித்த எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பில் அதிகமானவை இன்றும் காலத்தால் அழியாத தன்மையுடையனவாக இருக்கின்றன. கஹனியக் ‘பெண் ஒருத்தி’ என்ற கதைத் தொகுதி வஹல்லு ‘அடிமை’ என்ற கதைத் தொகுதி போன்றவை பிரசித்தம் வாய்ந்தவை.
பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ரூஷிய மொழியில் அநேக நூல்கள் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் விற்கப்படுகின்றன.
1925 ஆம் ஆண்டு திரு. மாட்டின் விக்கிரமசிங்க சதபுவே பலகே பிரேமா விக்கிரமசிங்கா என்பவரைத் திருமணஞ் செய்துகொண்டார். மார்டின் விக்கிரமசிங்க தலைசிறந்த எழுத்தாளராக வருவதில் திருமதி விக்கிரமசிங்கவின் பணிபும் அளப்பரியது. இவர்களுக்கு மூன்று பெண் மக்களும் மூன்று ஆண் மக்களும் இருக்கின்றனர். ஆறு பேருமே பல்கலைக்கழகப் பட்ட தாரிகளாவர்கள்.
எழுத்தாளர் எச். எம். பி. முகைதீன் 01.08.1976 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
இவரது அதிமுக்கிய, இறுதியான நூல் ஸ்ரீபவத்தரன’ ஆகும். புத்த பெருமானின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவர் இந்த நூலில் எழுதியுள்ளார். சித்தார்ந்த குமாரன், புத்தராகும் வரையிலான வரலாற்றுக் காலத்தை குறிப்பிட்ட போது, புத்தரைச் சித்தார்த்த குமாரரின் கோலத்தில் நிறுத்திப் பக்திபூர்வமாக இல்லாது, மதிப்புக் குறைவாக எழுதிவிட்டார் என்றும், புத்தரை இழிவுப்படுத்திவிட்டார் என்றும் பலர் நாடெங்கும் சர்ச்சை சரமாரியான விமர்சனங்களை எழுதினர். இந்த நூலைச் சட்டவிரோதமாக்கக் கோரிக் கூட்டங்கள் கூட நடத்தினர். பயமுறுத்தல்கள், எச்சரிக்கைகள், கடிதங்கள், தந்திகள் பறந்தன. ஆனால் திரு. மார்டின் விக்கிரமசிங்கவின் உறுதி, எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அத்தனை எதிர்ப்புக்களையும் சமாளித்தார். தன் கைப்பட எழுதிய ஒவ்வோர் எழுத்துக்கும் பூரண பொறுப்பேற்று விளக்கமும் தந்தார். இறுதியில் மகோன்னத வெற்றியும் பெற்றார். அவரது வெற்றி எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
‘ஸ்ரீ பவத்தரன’ திரு. மார்டின் விக்கிரமசிங்காவின் இலட்சிய நூல். தனது இலக்கியங்களின் கதாபாத் திரங்களுக்கு எல்லாம் தலைமைக் கதாபாத்திரமாகத் தனது கதாபாத்திரங்கள் அனைத்தையும் கூட்டுமொத்தமாக்கிய ஒரு சின்னமாக சித்தார்த்த குமாரனை திரு. மார்ட்டின் விக்கிரமசிங்க இந்த நூலில் அற்புதமாகப் படம் பிடித்துள்ளார். திரு. மார்ட்டின் விக்கிரமசிங்கவின் பல நூல்கள் ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டளவுக்கு தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. தனது எழுத்துத் துறைக்கு மேலதிகமாக இவர் ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக என பல தளங்களில் கால் பதித்துள்ளார். இவர் 60 ஆண்டுகளாக சேகரித்து தனது சொந்த வாசிகசாலையில் வைத்திருந்த சுமார் 5000 அபூர்வ நூல்கள் மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறு வனத்தால் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவை நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வாளர்கள் பார்வை யிடவும் உசாத்துணையாக பயன் படுத்தவும் முடியும்.
தற்போது மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரது 94 நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாத்தறை பிரதேசத்தில் கொக்கலையில் அமைந்துள்ள இவரது பிறந்த இல்லம் கிராமிய கலை அரும்பொருட் காட்சி நிலையமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தள முகவரி:
www.martinwickramasinghe.org
0 commentaires :
Post a Comment