7/18/2010

கிழக்கு தமிழ் மொழி தின போட்டிகள் இன்று கல்முனையில் ஆரம்பம் காரைதீவில் நாளை தமிழ் செம்மொழி விழா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இம் மாகாண மட்டப் போட்டியில் கலந்துகொள்வரென மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
திருமலை, மட்டு மாவட்டப் போட்டியாளர்கள் நேற்று கல்முனை வந்து சேர்ந்தனர். அவர்களும், நடுவர்களும், மாகாண கல்வி அலுவலக ஊழியர்களும் கல்முனைப் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று 36 போட்டிகள் கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் பற்றிமா கல்லூரியிலும் நடாத்தப்படும். 26 தனி நிகழ்ச்சிகளும் 10 குழு நிகழ்ச்சிகளும் இதிலடங்கும்.
வடமோடி, தென்மோடி, சிந்து நடை போட்டிகளும் நடாத்தப் படுமென இணைப்பாளரும், ஆசிரிய ஆலோசகருமான கன. வரதராஜன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் 36 தமிழ் போட்டிகளும் நடாத்தப்பட்டு முடியும். ஏலவே 14 தமிழ் எழுத்தாக்கப் போட்டிகள் நடாத்தப்பட்டு முடிவு களும் வெளியிடப்பட்டுள்ளன.

நாளை பேரூர்வலம் விழா

நாளை 19ம் திகதி மாகாண தமிழ் செம்மொழி விழா நடைபெறும். அதனையொட்டி நாளை காலை 8.00 மணிக்கு பெரிய நீலாவணை முதல் காரைதீவு வரை பாரிய ஊர்திகளின் ஊர்வலம் நடைபெறும். இதில் கிழக்கிலுள்ள 09 தமிழ்க்கல்வி வலயங்களின் 15க்கும் மேற்பட்ட ஊர்திகள் கலந்துகொள்ளும்.
காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலைவடிவங்கள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி,கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள் பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். இவ் ஊர்வலம் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.
இதற்கென காரைதீவு விபுலா னந்த ஞாபகார்த்த பணிமன்றத்துடன் இணைந்து ஏனைய பொதுநல அமைப்புகள் காரைதீவை விழாக் கோலம் பூணச் செய்துள்ளன. மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் நாளை திங்கள் 19ம் திகதி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தமிழ் செம்மொழி விழா நடை பெறவுள்ளது. முதன்மை விருந்தி னராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தனும், கெளரவ விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவும் அழைக் கப்பட்டுள்ளனர்.
விஷேட விருந்தினர்களாக இந்தியா பாண்டிச்சேரி, புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதி தமிழியற் புலத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூர் முனைவர் இ. வெங்கடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலை உபவேந்தர், முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். கே. யூ. கே. வீரவர்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

 

பேராளர்கள்

கெளரவத்திற்குரிய பேராளர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பேராசிரியர்களான எஸ். தில்லைநாதன், அ. சண்முகதாஸ், கா. சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான், சி. சிவலிங்கராஜா, எஸ். மெளனகுரு, சித்ரலேகா மெளனகுரு, க. அருணாசலம் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக் கப்பட்டுள்ளனர். இருநூல்கள் வெளி யிடப்படுகின்றன. சுவாமி விபுலா னந்தரின் மருமகள் திருமதி. கோ. மேதகவல்லி செல்லத்துரை (இ.அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார். மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. பொறுப்பாளர் எஸ். முருகுப் பிள்ளை விழா ஒழுங்குகளைக் கவனித்து வருகிறார். காரைதீவின் பொதுநல அமைப்புகளும் உஷாராக பணியிலீடுபட்டு வருகின்றன.

0 commentaires :

Post a Comment