7/18/2010
| 0 commentaires |
வடக்கு, கிழக்கு இணைப்பை இப்போது வலியுறுத்துவது தீர்வுக்கு எதிரான செயல்
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான குரல் கிழக்கிலிருந்து எழுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இணைப்புக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் இணைப்பை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்தது சட்ட விரோதமானது என்றும் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகவே இயங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிக் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டன. ஏறக்குறைய அடங்கிய நிலையிலிருந்த இப்பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்குகின்றது.
இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையே இதற்குக் காரணம். வடக்கும் கிழக்கும் இணைந்ததாகவே தீர்வு அமைய வேண்டும் என்று இந்தியத் தலைவர்களிடம் கூறியதாக ஊடகங்களுக்கு இவர்கள் தெரிவித்தார்கள். இதன் பிரதிபலிப்பாகவே இணைப்புக்கு எதிரான கருத்துகள் இப்போது வெளிவருகின்றன.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதைக் கிழக்கு மாகாணத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. வட மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இணைப்புக்கு ஆதரவாக இருந்ததாலும் கிழக்கு மாகாணத்தில் அந்த நிலை இல்லாததாலுமே கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென முடிவாகியது.
இரண்டு மாகாணங்களும் இணைந்ததாக அமைந்த மாகாண சபை கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல மக்களினதும் நன்மதிப்பைப் பெறும் வகையில் செயற்பட்டிருந்தால் இணைப்பை நிரந்தரமாக்குவதற்குச் சாதகமான சூழ்நிலை ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஆனால் அந்த மாகாண சபை தொடர்ந்து செயற்படவில்லை. பிரேமதாசவும் புலிகளும் சேர்ந்து வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்தனர். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் உடன்பாடாகவே இருந்தனர். பிந்திய காலங்களில் மாகாண சபையைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளையும் கூட்டமைப்புத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்தனர்.
இந்த நிலையிலேயே இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இணைப்பு சட்ட விரோதமானது என்றும் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்படுவதற்காகவே இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக மாகாண சபை செயற்படாத நிலையிலேயே இணைப்புக்கு எதிரான தீர்ப்பு வந்தது. மாகாண சபை தொடர்ந்து இயங்கியிருந்தால் நிலைமை வேறானதாக இருந்திருக்கக் கூடும். இம்மாகாண சபை தொடர்ந்து இயங்க முடியாத நிலையை ஏற்படுத்தியவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் இணைப்பு நீக்கப்பட்டதற்கான தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.
இரண்டு மாகாணங்களும் இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்த போதிலும், இரு மாகாணங்களினதும் இணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று பிந்திய காலத்தில் இத்தலைவர்கள் தொடர்ச்சியாகச் செய்த பிரசாரத்தினால் பெரும்பாலான தமிழ் மக்களிடம் அக்கருத்து நிலைத்து விட்டது. இப்போது அக்கோரிக்கையை வலியுறுத்த்தாமல் விட்டால் அம்மக்கள் தங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் அஞ்சுவதில் நியாயம் உண்டு. அதே போல, ‘தேசியம்’ பேசும் மற்றைய கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும் என்ற பயமும் இவர்களுக்கு இருக்கின்றது.
மக்களின் நலன்
தமிழ் மக்கள் கட்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் தீர்மானிப்பது கட்சி நலன் சார்ந்த செயல். இதனால் கட்சிக்கு மட்டுமே நன்மை. ஆனால், மக்களின் நன்மையைச் சிந்தித்துச் செயற்படுபவர்களே உண்மையான தலைவர்கள்.
மக்களின் பிரதான இலக்கு அரசியல் தீர்வு. அவர்களின் உடனடித் தேவை நிம்மதியான வாழ்க்கை. இவையிரண்டையும் பெற்றுக் கொடுக்கத்தக்க அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டுமேயொழிய இரண்டுமே சாத்தியப்படாத அணுகுமுறையைப் பின்பற்றுவது தலைமைப் பண்பாகாது.
வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய இன்றைய யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இரண்டு மாகாணங்களும் இப்போது பிரிந்திருக்கின்றன. இத்தீர்ப்பு இனிமேல் எல்லாக் காலங்களிலும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இணைப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே இணைப்பை ஏற்படுத்த முடியும். அதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு உள்ளடங்கிய அரசியலமைப்புத் திருத்தம் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வர முடியும். சிங்கள மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு அதற்கு அவசியம். தமிழ்த் தலைவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பிரிவினையின் முதல்படியாகப் பார்க்கின்ற மனோபாவத்தைச் சிங்கள மக்களிடம் தமிழ்த் தலைவர்களே வளர்த்து விட்டிருக் கின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்குச் சர்வசன வாக்கெடுப்பில் இப்போது அங்கீகாரம் கிடைப்பது சாத்தியமானதாக இல்லை.
ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் அத்தகைய தீர்வு முன்வைக்கப்பட்ட வேளையில் அதை நிராகரித்துப் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டதால் தமிழர் தரப்புக் கோரிக்கைகளைப் பிரிவினை முயற்சியாகப் பார்க்கும் மனோபாவம் கணிசமான சிங்கள மக்களிடம் வளர்ந்து விட்டது. இந்த மனோபாவத்தை மாற்றும் வகையில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு.
இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய யதார்தத்துக்கு முரணான கோரிக்கைகளை வலியுறுத்தியதால் எந்தத் தீர்வும் கிடைக்காமற் போன அனுபவம் தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. அதாவது ஏதாவதொரு தீர்வு கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை வலியுறுத்தியதால், கிடைக்கவிருந்த தீர்வும் இல்லாது போயுள்ளது. இதனால் தமிழ் மக்களின் வாழ்க்கை மென்மேலும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிடைக்கும் தீர்வை ஏற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைத் தலைவர்கள் பின்பற்றியிருந்தால் பல அழிவுகளையும் இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிடிவாதமாக இருப்பது தமிழ்மக்களின் நலன் சார்ந்த செயற்பாடாகாது. மற்றைய எல்லா மாகாணங்களிலும் மாகாண சபைகள் செயற்படும் போது வட மாகாணத்தில் மாத்திரம் துரைத்தன நிர்வாகம் நடக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகம் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை செயற்படுவதால் மக்கள் பல நன்மைகளை அனுபவிக்கின்றனர். வட மாகாண மக்கள் பின்தங்கியிருக்கும் நிலைக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் காரணமாகுவது நியாயமானதல்ல.
வடக்கிலும் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும். இரண்டு மாகாணங்களிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் செயற்படுகின்ற அதேவேளை முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சியை முன்னெடுக்க முடியும். அந்த முயற்சியை முன்னெடுக்கின்ற அதே வேளை முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் தமிழ்த் தலைமை செயற்பட வேண்டும். மக்களின் நலனைப் பேணுவதற்கு இதுதான் வழி.
முன்னைய நிலைப்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்வீடான தமிழரசுக் கட்சி முன்னர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டையும் பின்பற்றிய அணுகுமுறையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்படுவார்களேயானால் அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்களினதும் வரலாற்று ரீதியான வாழ்புலம் என்ற அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளை முன்வைத்தது. “தமிழ் மாநிலம் மாத்திரமன்றி முஸ்லிம்களுக்காக முஸ்லிம் மாநிலமொன்றையும் நாம் கோருவோம்” என்று 1956 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் தமிழரசுக் கட்சி கூறியிருந்தது. மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் 1971 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றுகையில், தமிழருக்கு ஒன்றும் முஸ்லிம்களுக்கு ஒன்றுமாகச் சிறுபான்மையினருக்கு இரண்டு மாநிலங்களைக் கோருவதெனக் கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
பண்டார - செல்வா ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் இரண்டு மாகாணங்களை யும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தவில்லை. வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளும் என்பதைத் தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. பக்கம் பக்கமாக உள்ள இரண்டு பிராந்திய சபைகள் சுயவிருப்பத்தின் பேரில் இணையலாம் என்ற ஏற்பாடும் அந்த ஒப்பந்தத்தில் இருந்தது. மக்கள் சுயமாகத் தீர்மானித்து இணைவதையே தமிழரசுக் கட்சி அப்போது விரும்பியது
0 commentaires :
Post a Comment