வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.
இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்.
0 commentaires :
Post a Comment