7/08/2010

சிறப்புரிமையை பயன்படுத்தி 'என் மீது வீண்பழி சுமத்த சிலர் முயற்சி' சபையை மேடையாக பயன்படுத்துவதாக சபாநாயகரிடம் முறையீடு

பாராளுமன்ற சிறப்புரிமையை தவறாகப் பயன்படுத்தி ஒரு சில உறுப்பினர்கள் என் மீதும், எனது கட்சி மீதும் உண்மைக்கு புறம்பான அவதூறுகளை பரப்புகின்றனர். இனிமேலும் இந்த உயரிய சபையை மேடையாக பயன்படுத்தி வீண் பழிகளை சுமத்த அனுமதிக்கக் கூடாது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 க்கு கூடியது. வரவு - செலவுத் திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான நேற்று சபையின் வழமையான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பான அறிவித்தல்கள் நேரத்தின் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் (விஜயகலா மகேஸ்வரன் தனது கணவர் அமரர் மகேஸ்வரனின் படுகொலை மற்றும் சாவகச்சேரி மாணவன் படுகொலை தொடர்பாக ஈ. பி. டி. பி.யின் மீதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சிறப்புரிமை மீறல் தொடர்பாக அறிவித்தலை முன்வைத்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
எமது கட்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதயில் அனைத்துத் தரப்பினரதும் அங்கீகாரமும் தமிழ் மக்களின் பேராதரவும் பெருகி வரும் ஒரு சூழ்நிலையில் இதனைக் கண்டு சகிக்க முடியாதவர்களே எமது கட்சி மீது உண்மைக்குப் புறம்பான கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
ஈ. பி. டி. பி. மக்களிடம் இருந்து கப்பம் வரி போன்ற மக்கள் விரோத அறவீடுகளிலோ அன்றி கொள்ளை, கொலை போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளிலோ எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபட்டது கிடையாது.
இந்த நிலையில் எம் மீது வீண் அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் தங்களது அரசியல் பிழைப்பை சிலர் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே எங்கள் மீது குற்றச்சாட்டி நடாளுமன்றத்தில் நீதிமன்றத்தையே அவமதிக்க எத்தனித்துள்ளனர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
இந்த வகையில் கடந்த 2010.06.30 ஆம் திகதி யாழ். மாவட்ட ஐ. தே. க நடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தனது கணவர் அமரர் மகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி மாணவன் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது கொலைகள் தொடர்பாகவும் வட மாகாணத்தில் நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பாகவும் என்னைச் சம்பந்தப்படுத்திக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன்கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஸ்தலத்தில் வைத்தே இக்கொலை தொடர்பில் ஒருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டமை எல்லோரும் தெரிந்த உண்மையாகும். இவர் புலிகள் இயக்க பிஸ்ரல் குழு உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதனை திருமதி மகேஸ்வரனும் நன்றாக அறிவார்.
அமரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. ஆயினும் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என புலிகளால் எச்சரிக்கப்பட்ட பின்னர் அவர் புலிகளின் எச்சரிக்கையினையும் மீறி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த வேளை புலிகளால் சுடப்பட்டு படுகாயமுற்றதன் பின்னர் அதாவது அவரது இறுதிக் காலங்களில் அவருக்கும் எனக்கும் உறவுகள் இருந்து வந்தன.
இதன் தொடர்ச்சியாக, அமரர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவரை ஊடகம் ஒன்று செவ்வி கண்டிருந்தது. இதன் போது எமக்கும் எமது கட்சிக்கும் எதிராக மகேஸ்வரன் கருத்துக்களை கூறுவதற்கு குறித்த ஊடகத்தின் நிகழ்ச்சியாளரால் திட்டமிட்ட வகையில் தூண்டிவிடப்பட்டிருந்தார் என்றே நான் கருதுகின்றேன். இந்தக் கருத்தையே அந்த செவ்வியைப் பார்த்தவர்கள் பலரும் கூறியிருந்தனர்.
குறித்த மேற்படி ஊடக நிகழ்ச்சியாளருக்கும் ஊடாக மக்கள் அரங்கில் திட்டமிட்ட வகையில் எமக்குள் இருந்த முரண்பாட்டை தூண்டி விட்டிருந்த புலிகளின் தலைமை நாம் மகேஸ்வரன் மீது விமர்சனங்களை முன்வைக்கும்வரை காத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து அவரைப் படுகொலை செய்திருந்தது. இது சகலரும் அறிந்த உண்மை.
கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் எமது ஜனநாயக வழிமுறைப்படி இப்போது அந்த அடிப்படையிலேயே இந்த உயரிய மன்றத்திலும் நான் கருத்துக்களுக்குப் பதிலாக எமது கருத்தை முன்வைக்கின்றேன். கருத்துக்களுக்குப் பதிலாகக் கருவிகளை ஒருபோதும் நாம் எடுக்கவில்லை.
புலிகளின் தலைமை எவ்வாறு திட்டமிட்டு படுகொலைகளை செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் அவர்களது சகல படுகொலை முயற்சிகளில் இருந்தும் நான் தப்பித்து வந்திருக்கிறேன்.
அதேபோன்று சாவகச்சேரிப் பகுதியில் திருச்செல்வம் கபில்நாத் எனும் மாணவனின் படுகொலை குறித்த விசாரணையும் தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரான ஜீவன் என்பவர் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தக் கொலை தொடர்பிலும் எமது கட்சி மீது திருமதி மகேஸ்வரன் அபாண்டமாக குற்றச்சாட்டினை இந்த நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
அண்மையில் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவால் இலங்கையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற நடவடிக்கையின் போது வட மாகாணத்திலும் நீதிபதிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த இடமாற்றத்தைக் கூட தவறான கற்பனை கதையாக உருவாக்கி அரசியல் தலையீடு காரணமாக இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாக இவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயற்பாடுகளை அவமதிக்கும் செயலாகும். இதேவேளை அமரர் மகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது வழக்கு விசாரணைகளை துரிதமாக்கி உண்மையான குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் இச்சபையின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இனிமேலும் என்மீதும் எனது கட்சி மீதும் உண்மைக்குப் புறம்பான வீண் பழிகளைச் சுமத்த இந்த கெளரவமான சபையைப் பயன்படுத்துவதற்குத் தாங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையின் போது குறிப்பிட்டார்

0 commentaires :

Post a Comment