ஆடிவேல் ஓர் ஐக்கிய விழர் இன ஐக்கியத்துக்கு புதுத்தெம்பு'
தமிழ்ப் புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மதப்பெரியார்கள் கருத்து
கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆடிவேல் விழாவை ஓர் ஐக்கியமான விழாவாக அனைவரும் ஏற்றுக்கொண்டு ள்ளமை இனங்களுக்கிடையே புதுத்தெம்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாதாரண மக்கள் இந்தச் சூழலை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சாதகமான சூழலைக் கட்டியெழுப் புவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்து கலாசார முன்னாள் அமைச்சரான பீ.பீ. தேவராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆடிவேல் விழாவை இயல்பாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
முன்பு நான் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்காக அலைக்கழிந்திருக்கிறேன். இன்று அவ்வாறு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.
நாட்டில் சுதந்திரமான ஒருசூழல் ஏற்பட்டுள்ளதென்பதையும், இனப்பிரச்சினைக்கா¡ன தீர்வொன்றைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் தோன்றியிருக்கிறது. இதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
யுத்தம் நிலவிய காலப் பகுதியில் அதன் தாக்கமும் பதற்றமும் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவுவது வழக்கம். அந்தச் சூழல் இல்லாது போயுள்ளமை ஆரோக்கியமானது” என்றும் குறிப்பிட்டார்.
கு. கணபதிப்பிள்ளை - கல்வியாளர்
“இந்து, பெளத்த மக்களின் ஐக்கிய விழாவினை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுமுகமான நிலை உருவாகிவிட்டது என்பதை ஆடிவேல் விழா பறைசாற்றியிருக்கிறது. பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் ஆலய நிர்வாகத்தினரே சுதந்திரமாகச் செய்ய முடிந்துள்ளமை 1983 இற்கு முன்னைய காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளது.
ஆடிவேல் ரதத்தின் முன் கலை, கலாசார கோலங்களுடன் மக்கள் மகிழ்ச்சிப் பரவசத்துடன் செல்வது நாட்டில் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்பதை வெளிப்படுத்தியி ருக்கிறது. கதிர்காம உற்சவ காலம் மூவினங்களையும் இணைக்கும் ஓர் எழுச்சிக் காலம். வடக்கு, கிழக்கு மக்கள் கால்நடையாக யாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 25 வருடகாலமாக காட்டு வழியாக நடந்து செல்வதைத் தவிர்த்திருந்தார்கள்.
நேற்றைய கதிர்காம உற்சவத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது ஓர் உண்மையான அமைதிச் சூழலையே புலப்படுத்துகிறது.
வீ.ஏ. திருஞானசுந்தரம் - மூத்த ஒலிபரப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர்,
“1983 இற்குப் பின்னர் இந்த முறைதான் ஆடிவேல் விழா முழுமையான ஓர் அமைதிச் சூழலில் நடைபெறுகிறது. சிங்கள மக்கள் பக்திச் சிந்தனை உடையவர்கள். ஆனால் நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையால், எதிர்க் கட்சிகளும், விஷமிகளும் சீர்குலைப்புச் செயல்களில் ஈடுபடலாம் என்ற ஒரு சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவியது. அதனால்தான் 1983 இற்குப் பின்னர் ஆடிவேல் விழா அவ்வளவாக சோபிக்கவில்லை. இப்போது அந்தச் சந்தேகம் நீங்கிவிட்டது. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதன் விளைவாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு இதுபோன்ற விழாக்களை மக்களாகவே செய்து கொண்டு செல்வதற்கான நிலை இருக்குமானால் நாடு முழுவதும் தொடர்ந்தும் பேணப்படுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றிக்கு ஓர் அளவுகோலாக அமையும். பத்திரிகைகள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் யதார்த்த நிலை நின்று நோக்குமிடத்து நாட்டில் நிரந்தர அமைதிக்கான அடித்தளம் உறுதியாகி விட்டது என்பதை உணர முடியும்.”
ஆளுநர் அலவி மெளலானா
இந்த ஆடிவேல் விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்க வந்திருந்த கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர்கள், மீண்டும் 16 வருடங்களுக்குப்பின் சீராகவும் சிறப்பாகவும் இந்த வருடம் ஆடிவேல் விழா நடக்கவிருப்பதாகவும் இதில் தவறாது கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.
நானும் அஸ்வர் எம்.பீயும் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றி கொண்ட போது இந்த நாட்டில் இனி சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. அனைவரும் “இலங்கையர்” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட போதும் ஜனாதிபதி இந்தக் கூற்றை நினைவு கூர்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அன்று கூறியது போல் சிறுபான்மையினர் என்று வேறுபாடில்லாமல் இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தது சிறப்பிற்குரியது.
சர்வதேச இந்துமத பீடச் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து மத விவகார ஆலோசகருமான பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா.
கதிர்காம கந்தப் பெருமானின் வருடாந்த உற்சவத்தையொட்டி கொழும்பில் வருடாந்தம் மிகவும் பக்திபூர்வமாக ஆடிவேல் விழா நடத்தப்படுவது வழக்கமாகும்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இந்த ஆடிவேல் விழாவை சீராகவும் சிறப்பாகவும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக தலைநகரில் இந்த வருடம் இந்த விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தம்பதியினர் அலரி மாளிகையில் நிறைகுடம், கும்பம் வைத்து எம்பெருமானை பக்தி பூர்வமாக வரவேற்று ஆசிபெற்றதை காணக்கூடியதாக இருந்தது.
ஆலய கிரியைகள், சடங்குகள் அனைத்தும் நாடு வளம் பெறவும் அமைதி பெறவும் நடத்தப்படுவதால், இந்த ஆடிவேல் விழா நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ்வாறான விழாக்களை நடத்தும் போது போக்குவரத்து கெடுபிடிகள் போன்ற சிற்சில இடையூறுகள் ஏற்படலாம். இவற்றை சகித்துக் கொண்டு சிறப்பாக நடத்தினால் பொருளாதார ரீதியிலும் நாடு வளம் பெறுவது உறுதியாகும்.
0 commentaires :
Post a Comment