வருடா வருடம் ஜூன் மாதம் 12ஆம் திகதி, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. miner
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அவர்களின் அனைத்து உரிமைகளையும், விசேடமாக அவர்கள் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு அத்தியாவசியமான கல்வி என்னும் உரிமையையும் பாதிக்கிறது. எனவேதான், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பட்டு வருகிறது.
சிறுவர் உரிமை சாசனத்தின் 32ஆம் உறுப்புரை, "தம் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டுக்கு அச்சுறுத்தலாய் அமையக்கூடிய வேலைகளில் இருந்து பாதுகாப்பு பெறக்கூடிய உரிமை பிள்ளைகளுக்கு உண்டு" எனக் கூறுவதன் மூலம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, அவர்களின் முக்கியமான உரிமைளைப் பாதிக்கும் விடயம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.
ஆயினும் பல்வேறு நாடுகளில் சிறுவர் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு தொழிற்துறைகள் தொடர்ந்து இயங்கி வந்ததாலும், அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக, பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
எனவே, உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே ஐக்கிய நாடுகள் சபை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினத்தை பிரகடனப்படுத்தியது.
எனினும், ஒக்டோபர் முதலாம் திகதியான அனைத்துலக சிறுவர் தினத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, மக்கள் இன்றைய தினத்துக்கு வழங்குவதில்லை. இதனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகச் சமூகத்தின மத்தியில் ஒரு எதிர்ப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை.
72 மில். சிறுவர் கல்வி கற்க முடியாத நிலை
தற்போதைய புள்ளிவிபரத்தின் படி உலகில் சுமார் 72 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
கல்வி தொடர்பான மிலேனிய இலக்கின் படி 2015 ஆண்டுக்குள் அனைத்து சிறுவருக்கும் தரமானதும் இலவசமானதுமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கையிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சிறுவர்களை பாதிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த விடயத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட சிறுவர்களே.
வேலைக்கு அமர்த்தப்படும் பெருந்தோட்டச் சிறுவர்கள் பாதிக்கப்படும் போது அல்லது மரணமடையும் போது மட்டும் பெருந்தோட்ட சிவில் சமூகமும் அரசியல் தலைவர்களும் அது தொடர்பாக ஓரிரு நாட்கள் குரல் எழுப்பவதோடு எல்லாம் முடிவடைந்து விடுகிறது.
கடந்த வருடம் கொழும்பில் சுமதி, ஜீவராணி ஆசிய இரு மலையக சிறுமிகள் உயிரிழந்த போது, முன்னரை விட அதிகமாக மலையகச் சமூகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான தமது உணர்வலைகளை வெளிக்காட்டியது.
நமது அரசாங்கம் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக ஒரு அமைச்சையே நிறுவியுள்ளது. இந்த அமைச்சின் கீழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நன்நடத்தை திணைக்களம் உட்பட பல அமைப்புக்கள் சிறுவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்புக்காவும் பல பணிகளைச் செய்து வருகின்றன.
சிறுவர் சபைகளில் அங்கத்துவம்
இதைவிட சிறுவர் உரிமை பாதுகாக்கும் விடயத்தில் சிறுவர்களையும் சம்பந்தப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர் பிரிவு முதல் தேசிய மட்டம் வரையில் சிறுவர் சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் அவற்றில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றனர். பிரதேச சபை முதல் தேசிய மட்டம் வரையில சிறுவர் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக இவை பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறையில் இல்லை. பெருந்தோட்ட மக்களில் பலருக்கும், ஏன் நமது அரசியல்வாதிகளுக்கும் கூட இவ்வாறு அமைப்புக்கள் இருப்பது தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவே போதிய அறிவு இருப்பாதாகத் தெரியவில்லை.
அவ்வாறு இருந்திருந்தால் இந்தச் சேவைகளும் வளங்களும் நிதிகளும் பெருந்தோட்ட மக்களுக்கு விசேடமாக சிறுவருக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும் .அப்படி செய்ததாகவும் தெரியவில்லை.
சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தும் தரகர் தொழில் பெருந்தோட்ட பகுதிகளில் பகிரங்கமாக நடக்கும் போது இந்தச் சட்டவிரோத செயலைக் கட்டுப்படுத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இல்லை. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்குக் கிடைக்கும் சேவை, வளங்கள், நிதிகள் என்பவற்றை உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, கடமை அரசியல் பிரதிநிதிகளுக்கு உண்டு.
சிறுவர் உரிமை மீறலுக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் எதிரான பொது உணர்வைக் கட்டியெழுப்பாதவரை பெருந்தோட்ப்ட பகுதியில் சிறவர்களை வேலைக்கு அமர்த்தும் பிரச்சினை ஒரு தொடர்கதையாகவே தான் இருக்கப் போகிறது.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் தரகர் தொழிலை இல்லாதொழிக்க சட்டபூர்வமான நடவடிக்கை மாத்திரமல்ல, தாக்கமுள்ள சமூக எதிர்ப்பியக்கம் கட்யெழுப்பப்பட வேண்டியதும் அவசியம். _
0 commentaires :
Post a Comment