வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடானது விடயங்களை சிக்கலாக்கக் கூடியதுடன் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மேலும் கருத்து வெளியிடுகையில், "தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் நியமித்துள்ள ஆலோசனைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விடயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்படப் பலர் கோரி வந்த விசாரணைக் குழுவிலிருந்து தற்போதைய குழு மாறுபட்டுள்ளது. விசாரணை நடத்துவது குறித்து தமக்கு எவ்வித எண்ணமுமில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சார்பாக பேசவல்ல அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது ஆலோசனைக்குழு, மாறாக உண்மைகளை தேடிக் கண்டறியும் குழுவல்ல, இது செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாம் இந்த நியமனத்தை வன்மையாக நிராகரிக்கின்றோம். இது எந்த வகையிலும் உதவக்கூடியதோ காலத்திற்குகந்ததோ அல்ல. நாம் எமது நாட்டில் படிப்பினைகளைக் கற்பதற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழுவிலுள்ளவர்கள் தகைமையுடையவர்கள். அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் கொண்டவர்கள். அப்படியிருக்கும் போது, அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐநாவின் குழு நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது துரதிஷ்டவசமானது; பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; எதிர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும்" என்றார். பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனக்குறிப்பிட்டீர்களே.... எவ்வாறான பின்விளைவுகள் என தெளிவுபடுத்த முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, "மக்களின் உணர்வுகள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. இது தேவையற்ற தலையீடு என மக்கள் உணர்கின்றனர். எவ்வாறாயினும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என அமைச்சர் குறிப்பிட்டதுடன் தற்போதைய நிலையில் இது தேவையற்றதெனவும் சுட்டிக்காட்டினார். ___ | ||||
|
0 commentaires :
Post a Comment