இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் |
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கென இந்தியா ஒதுக்கியுள்ள ஆயிரம் கோடி ரூபாயை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே வங்கிகள் வழியாக வழங்குவது பற்றி யோசித்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தபோது அவருடன் புதுடில்லியில் நடந்த ஆலோசனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் தகவல் வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதுதான் மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றி அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என்று மத்திய அரசுக்கு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிதம்பரம் அது பற்றி அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு எதுவும் வரவில்லை என்று மட்டும் கூறினார்.
விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு ஒரு தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சி என்பதால் இதை வன்மையாகவே கண்டிப்பதாகவும் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தன்னைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது. ஏனென்றால் தான் டெல்லியில் இருக்கும்போதே மலைக்கோட்டை ரயிலில் செல்லும் முடிவை ரத்துசெய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் தமிழக காங்கிரசின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுபேசும்போது, அதிகாரப்பரவலுக்கான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று ராஜபக்சேயிடம் இந்தியா வற்புறுத்தியிருப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் ஒன்றைத் துவக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சிதம்பரம் கூறினார்.
0 commentaires :
Post a Comment