இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை ஆட்கேபித்துச் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் மற்றும் சினிமா உலகப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தாங்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதும் தங்கள் ஆர்ப்பாட்டத்தினால் இலங்கை ஜனாதிபதியின் விஜயத்துக்கோ அவருக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதும் இவர்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள். ஏனென்றால், இவர்கள் வெளிப்படையாகச் சொல்வதற்குப் புறம்பான காரணங்களுக்காகவே ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.
இனப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களாம். இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் பெருவாரியான தமிழ் மக்கள் இறக்க நேர்ந்தது என்றும் அதற்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு என்றும் கூறுகின்றார்கள். இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் மரணம் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமென்றால் இவர்களுக்கு எதிராகத்தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இந்த விடயத்தில் வைகோ, திருமாவளவன், நெடுமாறன், மகேந்திரன் போன்றவர்கள் தான் பிரதான குற்றவாளிகள்.
யுத்தத்தின் போது புலிகளின் தரப்பில் அகப்பட்டுக்கொண்ட அப்பாவிப் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் பணயக் கைதிகளாகப் புலிகள் தடுத்து வைத்திருந்தனர். தடையை மீறி வெளியேற முற்பட்டவர்களைக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தினார்கள். பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கமும் பல அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளைப் புலிகள் பொருட்படுத்தவில்லை. இன்று ‘தமிழ் மக்களுக்காக’ ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்கள் அன்று பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டி ருந்த அப்பாவிப் பொது மக்களை விடுவிக்கச் சொல்லி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பொதுமக்கள் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கும் வகையிலேயே செயற்பட்டார்கள். அந்த வகையில், இடம்பெற்ற மரணங்களுக்கு இவர்களும் பொறுப்பாளிகள். இவர்களுக்கு எதிராக யார் ஆர்ப்பாட்டம் செய்வது?
இலங்கையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுகின்றார்கள். அவருடன் இணைந்து செயற்படப் போவதாக கூறுகின்றார்கள். அவர் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் அவருடன் பேசப் போவதாகச் சொல்கின்றார்கள்.
இலங்கைத் தமிழர்கள் மீது அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கு இல்லாத கரிசனை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வந்துவிட்டது! நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புலிகள் சார்புக் கோஷத்துடன் களமிறங்கிய இவர்களைத் தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஐரோப்பாவில் திரைப்படங்களை விநியோகிப்பவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் சிலர். புலிகளிடமிருந்து கிடைத்த வசதிவாய்ப்புகளுக்காகச் சிலர்.
0 commentaires :
Post a Comment