6/10/2010

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழ் மக்களை வஞ்சித்து விட்டன


தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசுடன் கடந்த 7ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன. தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நியாயப்படுத்த த.தே.கூட்டமைப்பு தவறிவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றும,; அரசு கொடுத்த உறுதி மொழிகளை நம்பியும் சரணடைந்தவர்களாவர். அரசின் வேண்டுகோளையும் உறுதி மொழியையும்  உதாசீனம் செய்து முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையினர் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நிம்மதியாக வாழ்கின்றனர். சில அரச அதிகாரிகள், உயர்மட்ட அரசியல்வாதிகளின் உதவியுடன் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று அயல் நாடுகளிலும், பிறநாடுகளிலும் உள்ரிலும் நிம்மதியாக வாழ, அப்பாவி மக்களின் பிள்ளைகள் இன்று தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தவர்கள் ஒரு வேளை உணவைக்கூட நிம்மதியாக உண்ண முடியாமலுள்ளனர்.  அண்மையில் விடுவிக்கப்பட்ட யாரோ ஒருவர் அநுராதபுரத்தில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டதற்காக பிடிபட்டார் என அரசு தரப்பால் கூறப்பட்ட கருத்திற்கு தகுந்த பதிலை கூட்டமைப்பினர் கொடுக்கத் தவறிவிட்டனர். ஒரு சிலரின் தவறான செயற் பாட்டிற்காக ஒட்டுமொத்த கைதிகளை தடுப்புக்காவலில் விடுதலை செய்யாமல் வைத்திருக்க முடியாதென்பதை விளக்கமாக அரசுக்கு எடுத்துக் கூற கூட்டமைப்பினர் தவறி விட்டனர்;. அன்று விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவர்களில் பலர் இன்று அரசுடன் செயற்படுகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறி சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விவாதிக்கவில்லை? தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து சில உயர்மட்ட குழுக்களை அமைத்து அவர்களின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு ஏன் கேட்கவில்லை? படிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை விடுவிக்கும்படி ஏன் கேட்கவில்லை? அதே போல் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் நின்று கொண்டு வழக்கை எதிர்கொள்ளும் போது, தற்போது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பெற்றோரின் உறுதியுடன் வெளியில் விடும்படி ஏன் கேட்கவில்லை? இந்த யோசனைகளை நான் பல தடவைகள் முன்வைத்துள்ளேன். எத்தனை ஆயிரம் பேர் புலிகளுடன் இருந்தவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர் என்பதை அரசு அறியாதா?

அடுத்ததாக மீளக்குடியமர்ந்த வன்னி மக்களுக்கு தொழில் வசதி கருதி உதவி செய்ய முன்வருவது மிக வேடிக்கையாகும். வன்னி மக்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளுமாவர். அநேகமானேர் செலவச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இன்று அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக அரசிடம் கையேந்தி நிற்கின்றனர். உண்ண, உறங்க வசதியற்ற நிலையில் சிறு கூடாரங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு முதலில் அவசியமானது உறைவிடம். போரால் அழிவுற்ற பகுதிகளில் புலிகள் தற்போது இல்லை. ஆகவே மக்களின் வீடுளைக் கட்டிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும். இக்கடமையிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது.

போரினால் அழிவுற்ற ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், அம்மக்கள் தங்கள் விவசாயத்தின் இரு தடவை அறுவடைகள் மூலமாக தாங்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் போரினால் தங்கள் வீடுகளை இழந்த மக்கள் அரசாங்கம் தங்கள் வீடுகளைக் கடடித்தரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜனாதிபதியின் இச்செய்தியினால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்போது 1500 தொடக்கம் 2000 ஏக்கர் வரையிலான காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 மூடை விளைச்சல் என்று கணக்கிட்டாலும், உற்பத்திச் செலவு போக. அதிலிருந்து கிடைக்கும் இலாபம் அவர்களின் வாழ்க்கைச் செலவிற்கே போதாது. இதே வேளை, இந்த 2000 ஏக்கர் நிலம் எத்தனைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்ன? இந்நிலையில், நெல் அறுவடையின் மூலமாக வீடுகளைக் கட்டிக்கொள்வது எவ்வாறு? இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது, சாத்தியமாகக் கூடிய விடயங்களா? இதனை ஒரு கேலிக்கூத்து என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது?

உண்மையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அதனைக் கட்டிக்கொடுக்க வெளிநாடுகளின் உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. அரசாங்கத்தின் பணத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தால் அதனைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்துலக நாடுகளிடமும் அமைப்புகளிடமும் எனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குத் தயாராகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டுக்குழு அமைக்கவிருப்பது ஆட்சேபனைக் குரியதாகும.; சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக குழுவொன்றை அமைத்து இனப்பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காணவேண்டும் என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தாகும்.

வீ; ஆனந்தசங்கரி,

தலைவர்,

தமிழர் விடுதலைக் கூட்டணி

0 commentaires :

Post a Comment