ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தலைமையை மாற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்த போது தானே தலைவராக வேண்டும் என்ற எண்ணம் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கவில்லை. ஆனால் இப்போது அந்த எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. சஜித்தைத் தலைவராக்க வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் அடிக்கடி கூறி வந்ததாலும் சில ஊடகங்கள் அவருக்குச் சார்பாக எழுதி வந்ததாலும் சஜித்திடம் தலைமை விருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபலஸ்ஸ என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையற்றிய போது கட்சியின் தலைமை அம்பாந்தோட்டைக்குக் கொண்டுவரப் படவுள்ளது என்று சஜித் கூறினார். தலைமைப் பதவி தனக்கே கிடைக்கும் என்று கருதுவதாலேயே இவ்வாறு கூறினார்.
சஜித்தின் உள்ளக்கிடக்கை அங்குணுகொலபலஸ்ஸவில் வெளியாகியதும் அவருக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரமடையத் தொடங்கின. தலைமை மாற்றம் தேவை என்று கூறியவர்களிலும் சிலர் சஜித் தலைவராகுவதை விரும்பவில்லை. ஆர். பிரேமதாச கட்சித் தலைவராகுவதை முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்த்ததற்கு என்ன காரணம் இருந்ததோ அதே காரணமே சஜித்துக்கு எதிராகவும் இருக்கின்றது.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தலைவரைத் தெரிவு செய்யும் முறை கட்சியைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் தலைமைப் பதவிக்காகச் சதி முயற்சியில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இப்போது கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சஜித் தலைவராகுவதைத் தடுப்பதே இக் கருத்துகளை முன்வைப்பவர்களின் ஒரே நோக்கம்.
இரகசிய வாக்கெடுப்பும் தலைமைப் பதவிக்கான சதி முயற்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை.
1994ம் ஆண்டு எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்காக ரணில் விக்கிரமசிங்ஹவும் காமினி திசாநாயக்கவும் போட்டியிட்ட போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. காமினி திசாநாயக அதில் வெற்றிபெற்றார்.
தலைமைப் பதவிக்கான சதி முயற்சி ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வருகின்றது. டீ. எஸ். சேனநாயகவின் மரணத்துக்குப் பின் டட்லி சேனநாயக தலைவராகினார். இதுவும் ஒரு சதி முயற்சியின் விளைவே. டீ. எஸ். சேனநாயகவுக்கு அடுத்த சிரேஷ்டராக அப்போது கட்சியில் இருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை. கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் அவரே பதவியேற்க வேண்டியவர். ஆனால் அப்போதைய தேசாதிபதி சோல்பரி பிரபுவுடன் டீ. எஸ். சேனநாயக செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையின் விளைவாக சேர் ஜோன் தலைமைப் பதவியை இழக்க நேர்ந்தது.
அறுபதுகளில் தலைமையைக் கைப்பற்றுவதற்கு ஜே. ஆர். ஜயவர்த்தன முயற்சி செய்தார். 1965ம் ஆண்டு எஸ். ஜே. வி. செல்வநாயகமும் டட்லி சேனநாயகவும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார்கள். மாவட்ட சபைகளை அமைப்பது அவ்வொப்பந்தத்தின் பிரதான அம்சம். ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவட்ட சபைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததற்குப் பின்னால் ஜே. ஆர். ஜயவர்த்தன இருந்தார். எழுத்துமூல ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத நிலையில் டட்லி இராஜினாமா செய்வார் என்பது ஜே. ஆரின் எதிர்பார்ப்பு. டட்லி இராஜினாமா செய்தால் தலைமைப் பதவிக்கு வர வேண்டியவர் ஜே. ஆர். மாவட்ட சபை மசோதாவை நிறைவேற்ற இயலாததால் இராஜினாமா செய்யப் போவதாக டட்லி தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியதும் அவர்களது வேண்டுகோளின் பேரில் இராஜினாமா முடிவைக் கைவிட்டதும் தெரிந்த கதை. ஜே. ஆரின் எதிர்பார்ப்பு அப்போது நிறைவேறவில்லை.
ஜே. ஆர். எப்போதும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் அவருக்கு எதிரான ஒழுங்காற்று நடவடிக்கைக்கு 1972ம் ஆண்டு டட்லி உத்தரவிட்டார். அந்த ஒழுங்காற்று நடவடிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததன் மூலம் ஜே. ஆர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
ஆர். பிரேமதாச டட்லியுடன் முரண்பட்டுக்கொண்டு பிரசைகள் முன்னணி என்ற பெயரில் போட்டிக் கட்சியொன்றை ஆரம்பித்தார். சில காலத்துக்குப் பின் அதைக் கலைத்துவிட்டு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரும்பினார்.
ஆர். பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதற்குப் பின்னாலும் ஒரு கதை இருப்பதாகக் கூறுகின்றார்கள். மூன்றாவது தடவையாகவும் தான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியுமா என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜே. ஆர். ஜயவர்த்தன மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்தார். அரசியலமைப்பில் சிறிய திருத்தமொன்றைச் செய்வதன் மூலம் அது சாத்தியமாகும் என்று அக்குழு சிபார்சு செய்தது. அக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் அகால மரணம் ஏற்பட்டதற்கும் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதற்கும் தொடர்பு உண்டு என்று அந்த நாட்களில் பேச்சு அடிபட்டது.
இப்படியான கழுத்துவெட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் ஊடாகவே ஐக்கிய தேசியக் கட்சி பயணித்து வந்திருக்கின்றது. எனவே இப்போது நடக்கும் கயிறிழுப்புகள் கட்சிக்குப் புதியவையல்ல. இந்தக் கயிறிழுப்பில் சஜித் பிரேமதாசவும் தயாசிறி ஜயசேகரவும் நிற்கும் பக்கம் வெல்லுமா அல்லது ரவி கருணாநாயகவும் அத்தநாயகவும் நிற்கும் பக்கம் வெல்லுமா என்பது பற்றி இப்போதைக்கு எதிர்வு கூற இயலாது.
தலைவரைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆலோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். இது சஜித் பிரேமதாசவுக்குப் பலவீனமான அம்சம்.
1994ம் ஆண்டு முழு நாட்டிலும் 44 வீதம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி 2010ம் ஆண்டு 29 வீதம் வாக்குகளையே பெற்றது. இது ரணிலுக்குப் பலவீனமான அம்சம்.
ரணில் இருப்பாரா அல்லது சஜித் வருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 commentaires :
Post a Comment