6/05/2010
| 0 commentaires |
என். எம். பெரேரா ஒரு மாபெரும் அரசியல்வாதி ----- எஸ்.கே. தங்கவடிவேல் கோப்பாய்
நாம் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். பின் மடிகின்றோம். இக்குறுகிய காலத்தில் நாம் என்னத்தைச் சாதித்தோம்? உலகத்தில் பிறந்த பலருள் ஒரு சிலர்தான் மக்களின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துள்ளனர். அந்த ஒரு சிலரின் அர்ப்பணிப்புக்கள் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும்.
அந்த ஒரு சிலருள் ஒருவர்தான் இரட்டைக் கலாநிதி அமரர் என்.எம். பெரேரா ஆவார். பெரும்பாலானவர்கள் தம்புகழை மெருகூட்டுவதற்காக மக்களின் அழிவுகளுக்குக் காரணமாக இருந்துள்ளனர்.
இன்றும் இருக் கின்றனர். ஆனால் அமரர் என்.எம். பெரோ மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் அரசியல்வாதி. அன்னாரின் 105 ஆவது பிறந்த தினம் ஆனி மாதம் 5ம் திகதியாகும்.
அமரர் என்.எம். பெரேரா காலத்தில் பெரும் பெரும் தலைவர்கள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் அமரர்களான வைத்திய கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்க, ஜெயம் தர்மகுலசிங்கம், துரைசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அரசியல் விஞ்ஞானத்திலும், தத்துவத் துறையிலும் கலாநிதிபட்டம் பெற்று இங்கிலாந்திலிருந்து நமது தாய் நாடான இலங்கைக்குத் திரும்பியதும், பெரும் பெரும் பதவிகளை அமரர் என்.எம். பெரேரா பெற்றிருக்கலாம்.
ஆனால் அவரோ மலேரியா நோயினால் பீடிக்கப்பட் டிருந்த ஏழை மக்களுக்காக, அவர்களின் துயர் துடைப்பதற்காக மருந்துகளும் பருப்பு வகைகளும் அவர்களுக்குக் கிராமம் தோறும் சென்று வழங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் மக்களால் பருப்பு மாத்தையா எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏகாதிபதித்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய அமரர் என்.எம்.பெரேரா அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுகண்டு கண்கலங் கினார். கொதித்தெழுந் துள்ளார். வேதனை அடை ந்துள்ளார், அவர்களுக்காகப் போராடியதால் ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் 1940ல் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பலர் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் பேசலாம். சிலர் முதலைக் கண்ணீரும் வடிக்கலாம். ஆனால் அன்றைய கால கட்டங்களில் குறிப்பாக ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழி லாளர்களுக்காகப் பேசுவது கடினம். அப்படியான வேளைகளில்தான் இலங்கை சமசமாஜக் கட்சி, அமரர் என்.எம். பெரேரா தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடியது. போராட்டத்தில் முல்லோயாக் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளியின் உயிர்கூடப் பறிக்கப்பட்டது.
தமிழ்த் தலைவர்களுள் ஒருசிலர் கூட தோட்டத் தொழிலாளரின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, குடியுரிமை பறிப்பதற்குக் காரண மாயிருந்த ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியுடன் இணைந்து செயற்பட்ட போதும் சமசமாஜக் கட்சியும், அதன் தலைவர் அமரர் என்.எம். பெரேராவும் தோட்டத் தொழிலாள ருக்காக வாதாடியது மாத்திரமல்லாது அவர்களுக்காக வாக்கும் அளித்துள்ளனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமரர் என்.எம்.பெரேரா எதிர்த்துள்ளார்.
தமிழ் இனத்தை நசுக்கும் கொள் கைகள் எல்லாவற்றிற்கும் ஆரம்ப கர்த்தாக்களான ஐக்கிய தேசியக் கட்சி இனக்கலவரம் மற்றும் சிங்களம் மட்டும் சட்டங்கள் கொண்டு வருவதற்கும் மூலுகர்த்தாக் களே. அரச கரும மொழி யாகச் சிங்களம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பகர்த்தாவே ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஜே.ஆர். ஜயவர்தனா ஆவர். அதன் காரணமாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே அதாவது 19-10-1955 ல் அமரர் என்.எம். பெரேரா அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கவேண்டுமென்ற மசோதாவை பாராளுமன்றத் திற்குக் கொண்டுவந்தார். 1955ம் ஆண்டு காலகட்டத்தில்தான் இன வன்செயலும் நமது நாட்டில் வெடித்துள்ளது. அதற்கு “றை சிங்கள” என்ற அமைப்பே மூல காரணம். அந்த அமைப்பிற்கு தலைமை தாங்கியவரும் ஜே.ஆர்.ஜயவர்தனா அவர்களே.
1956ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவால் “சிங்களம் மட்டும்” சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொழுது அதை எதிர்த்து அமரர் என்.எம். பெரேராவும் சமசமாஜக் கட்சியும் வாக்களித்தது மாத்திரமல்லாது நாடு பூராகவும் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரமும் மேற்கொண்டனர். அதன் காரணமாக அமரர் என்.எம்.பெரேரா ஒரு கூட்டத்தில் காடையரின் குண்டெறிக்கு இலக்கான போதும் அவரைக் காப்பாற்றுவதற்காக “ரெஜினோல்ட் மென்டிஸ்” என்பவர் தனது கையால் குண்டைத் தடுத்ததன் காரணமாக கையையே இழந்தார். ஆகவே தமிழ் மொழிக்காக தனது கையையே இழந்தவர் ஒரு சிங்களத்தோழர் என்பது பலருக்குத் தெரியாமல் இருப்பதையிட்டு நாம் வேதனை யடைகின்றோம்.
1958ம் ஆண்டு இன வன்செயல்களை கே.எம்.பி. ராஜரத்தினா, சி.பி. த சில்வா, ஜே.ஆர். ஜயவர்தன போன்றோர் தமிழ் இனத்திற்கெதிராக நடாத்திய பொழுது அமரர் பெரேராவும் அவர் சார்ந்த சமசமாஜக் கட்சியினரும் தமிழ் மக்களைக் காப்பாற்றினர். அவர்களுடன் இலங்கைப் பொது வுடமைக் கட்சியினரும் தமிழ் மக்களைக் காப்பாற்றினர். அதனால் காடையர்களின் தாக்குதல்களுக்கு சமசமாஜ பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் சிலர் பலியாகியதுடன் பலர் காயத்திற்கும் உள்ளாகினர்.
“சிங்களம் மட்டும்” சட்டத்தை ஏற்று எஸ்.ஜே.வி. செல்வநாயகம், பண்டாரநாயக்காவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றபொழுது சமசமாஜக் கட்சியும் “சிங்களம் மட்டும்” சட்டத்தை ஏற்று பண்டா- செல்வா ஒப்பந்தத்தை ஆதரித்தது. அந்த ஒப்பந்தம் இல்லாதுபோனதற்கு ஜே.ஆர். ஜயவர்தனா மட்டும் காரணமல்ல. செல்வநாயகமும் அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியும் ஒரு காரணமென்பது பலருக்குத் தெரியாத கசக்கும் உண்மையாகும். இந்த விடயம் சம்பந்தமாக பிற்காலத்தில் அதாவது 18.04.1961ல் ஜே.ஆர். ஜயவர்தனா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அந்தக் கருத்துப்படக் குறிப்பிட்டுள்ளார்.
பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டிருந்தாலும் 1964ம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்ரீலங்கா- சமசமாஜக் கட்சிக் கூட்டரசாங்கத்தில் அவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்ததும், அந்த அரசாங்கத்தை, 1958ல் தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன் என்று கூக்குரலிட்ட கே.எம்.பி. ராஜரத்தினா போன்றோருடன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றோர் இணைந்து வீழ்த்தியதும் பலர் அறியாமல் இருக் கலாம். 1964ம் ஆண்டு ஸ்ரீலங்கா - சமசமாஜ கூட்டரசாங்கத்தை அ.அமிர்தலிங்கம் மு.சிவசிதம்பரம் ஆகியோர் விரும்பியும் இருந்தனர். 10.07.1964ல் அ.அமிர்தலிங்கம், பாராளுமன்றில் சமசமாஜக் கட்சியைப் புகழ்ந்து பேசி யுள்ளார். மு. சிவசிதம்பரம் 13.07.1964ல் பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது கூட்டரசாங்கத்தின் சிம்மாசன உரையில் முந்திய அரசா ங்கங்களிலும் பார்க்க தமிழ் மொழி விடயத்தில் முன்னேற்றகரமான அம்சங்கள் உள்ளன. எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதே தினத்தில் எம்.ஈ.எச். முகமது அலியும் அமரர் என்.எம். பெரேராவை புகழ்ந்து உரையாற்றியுள்ளார். பின்பு அப்படிப்பட்ட அரசாங்கம் வீழ்ச்சியுற தந்தை செல் வாவும் தமிழரசுக் கட்சியும் ஒரு காரணம் என்பது பலருக்குப் புரியாமல் இருக்க லாம். 1965ல் கூட அமரர் என்.எம். பெரேரா போன்றோர் ஸ்ரீலங்கா- சமசமாஜக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியையும் இணைத்து ஆட்சியமை த்து பண்டா- செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்ற எண்ணினர். அதற்குத் தமிழரசுக் கட்சி இணங்கவில்லை.
1970ம் ஆண்டு ஸ்ரீலங்கா- சமசமாஜ - பொதுவுடமைக் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் பல முன் னேற்றகரமான கொள்கைகள் நிறைவேறுவதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. விவசாயிகளின், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தமை, வேலையில்லாப் பிரச்சினை ஓரளவிற்குத் தீர் க்கப்பட்டமை, சீவல் தொழி லாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டமை, இலங்கை யின் நாணயப் பெறுமதி ஓரளவிற்கென்றாலும் நிலை யாக இருந்தமை, அதன் கார ணமாக பலரது வாழ்க்கைத் தரம் உயர்ந்தமை, தோட்டப் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டமை, உள்ளூர் உற்பத்திகள் உற்சாகப் படுத்தப்பட்டமை போன்ற பல விடயங்கள் கூட்ட ரசாங்கத்தில் நடைபெற்றன. அதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரண மென்பதை மறுக்க முடியாது.
ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு சுய பொருளாதார வளர்ச்சி முக்கியமானது மகாத்மா காந்தி உள்ளூர் உற்பத்திகளில் பெரும் கவனம் செலுத்தினார். எமது தலைமைகளில் காந்தி என்ற புனைப்பெயர்கள் இருந்தாலும் பெயரளவில் மட்டும்தான் இருந்தன என்றுகூட எண்ண இடமுண்டு. மகாத்மா தனது நாட்டின் விடுதலைக் காகப் போராடினார். அது சுயநலத்தில் ஊறிய பொதுநலம். மாட்டின் லூதர் தனது இனத்தின் விடுதலைக்காகப் போராடினார். அதிலும் சுயநலச் சாயல் இருக்கத்தான் செய்தது. ஆனால் அமரர் என்.எம். பெரேரா இன்னொரு இனத்தின் விடுதலைக்காக போராடினார் என்பதை நாம் எளிதில் மறக்க முடியாது.
கலாநிதி என்.எம். பெரேரா 14.08.1979ம் ஆண்டு அமரத்துவம் அடைந்தார். பாராளுமன்றத்திலிருந்து பேழை தாங்கிய அவரது உடல் மற்றவர்களால் படிகளில் இறக்கிக் கொண்டுவரும் வேளை வர்ண பகவான் கண்கலங்கிய காட்சி தனைக்காண முடிந்தது. ஆம்! கடும் வெயில் திடீரென மறைந்து சாதுவான இருள் சூழ்ந்த காட்சிதனை நான் நேரில் கண்டேன். மழைத்துழிகள் விழுந்தன. அதன் பின் திரும்பவும் வெயில் எறித்ததைப் பார்க்க முடிந்தது. அ.அமிர்தலிங்கம் அமரரின் அஞ்சலிக் கூட்டத்தில் கருத்தாளம் கொண்ட நீண்டதொரு உரை நிகழ்த்தினார். அமரர் என்.எம். பெரேராவின் கொள்கைகள் நிலைநாட்டப்பட்டிருக்குமானால் தான் இன்னொரு அரசியலில் இறங்கியிருக்கமாட்டேன் என்ற கருத்துப்பட அவர் பேசினார்.
அமரர் என்.எம். பெரேரா 1979ல் முக்கியமான கூற்று ஒன்றை விடுத்துள்ளார். அதாவது 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்களுக்குத் திருப்பதியாக இருந்தவை இன்னும் 20 வருடங்களுக்குப் பின் போதுமானவையாக இருக்க முடியாது. நல்லதொரு ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமானால் மாநில சுயாட்சி தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துப்பட கூறியுள்ளார்.
கலாநிதி என்.எம். பெரேரா ஒரு வருடத்தில் இரு முறை- ஒன்று அவரது பிறந்த தினம், மற்றையது அவரது இறந்த தினம் ஆகிய இரு தினங்களிலும் என்.எம். பெரேரா நிலையத்தினரால் மக்களுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறார்.
கலாநிதி என்.எம். பெரேரா மறைந்தாலும் அவரது கொள்கைகளை இலங்கை சமசமாஜக் கட்சி, இலங்கை பொதுவுடமைக் கட்சி மற்றும் ஜனநாயக இடது சாரி முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்படுத்த திடசங்கர்ப்பம் பூண்டுள் ளது.
முக்கியமாக தமிழ் மக்கள் பிரச்சினையில், அவர்களது அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இடம் பெயர் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இம்மூன்று கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதைப் பலரும் தெரிந்து கொள்வது அவசியமானதொன்றாகும்.
0 commentaires :
Post a Comment