6/02/2010

இலங்கை அரசின் நிலைப்பாடு அமெரிக்காவால் பூரணமாக ஏற்பு அபிவிருத்திக்கு கூடுதல் பங்களிப்பை வழங்கவும் தயார்

இலங்கை அரசின் இன்றைய நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகளுக்குக் கூடுதல் பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மீது அமெரிக்கா திருப்தியும் நம்பிக்கையும் கொண்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன் தெரிவித்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் நேற்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,
எந்தவொரு நாட்டினதும் உள்ளகப் பிரச்சினையின் போது முதன்மையான பொறுப்பு அந்த நாட்டுக்கே உண்டு என்று அமெரிக்கா கருதுகிறது. எமது நாட்டின் தேசிய பொறிமுறைக்குப் பூரண ஆதரவை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் விதத்தை அமெரிக்கா பாராட்டுகிறது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த் தும் விடயத்தில் நாம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் பாராட்டுகிறது. மக்க ளைப் பெளதிக ரீதியாக அன்றிப் பொரு ளாதாரச் சூழலில் குடியமர்த்துவதையே ஜனாதிபதி விரும்புகிறார். இந்தக் கருத்தி யலை திருமதி கிளின்ரன் பாராட்டினார்.
பல தசாப்த காலமாக இல்லாதிருந்த ஜனநாயகக் கட்டமைப்பின் மீள்பிரவேசத் திற்கும் பாராட்டும் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசியல் தீர்வொன்றுக்காக முன்னெடுக்கப்படும் ஆரம்பக் கட்ட முயற்சிகளையும் விசேடமாகத் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்கா வெகுவாகப் பாராட்டியதாகக் கூறினார்.
தமது அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உயர்மட்ட ஆலோசகர் மற்றும் செனட் சபை உறுபபினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இலங்கையுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் உள்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த பங்களிப்புச் செய்வதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளைக் கூட்டாக மேற்கொள்வதற்கும் காலம் கனிந்துள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜீ – 15 நாடுகளின் தலைமைப் பதவியை ஜனாதிபதி ஏற்றுள்ளதோடு ஜீ – 8 நாடுகளுடன் நெருக்கமான கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதையும் அமெரிக்கா வரவேற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

0 commentaires :

Post a Comment