தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இன்று (15.06.2010) அகவை 77. எதையும் துணிச்சலுடன எதிர்நோக்குகின்ற, அநீதிக்கு எதிராக போராடும் போர்க்குணம் கொண்ட அவரின் ஆரோக்கியமான அரசியல் பிரவேசம் கிளிநொசிப் பிரதேசம்தான். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்து படிப்படியாக அரசியல் பிரவேசம் செய்தார். அதோடு சட்டக் கல்லூரியிலும் பயின்று சட்டத்தரணியானார். கிளிநொச்சியில் அரசியல் என்பது நிலப்பிரபுக்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த நேரம் அது. கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளோடு கைகோர்ததுக்கொணடு 1960ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பின் 1965ம் ஆண்டு கிராமசபைத் தலைவராகி அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் பட்டிணசபைத் தலைவராகி அதன் பின்பு 1970ல் முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்;. 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்;. 1970தொடக்கம்1983 வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலமாகும். விவசாயிகளின் அத்தனை தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டன. வயல்காணிகளும்சரி, தோட்டக்காணிகளும்சரி அமோக விளைச்சல் கண்டன. வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே கூடிய சந்தை அமோக விளைச்சல் காரணமாக புதன் கிழமையும் கூடத்தொடங்கியது. வேலை வாய்ப்புகள் அனைத்தும் குறிப்பாக பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், தென்னை ஆராய்ச்சி நிலையம், நீர்பாசனத்திணைக்களம், கமநலசேவைநிலையம் போன்றவற்றில் உள்@ர் வாசிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டன.
கல்வியில் புது புரட்சி ஏற்படுத்தப்பட்டது. 1973ம் ஆண்டு நான் க.பொ.த.சாதாரணதர மாணவன். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அதுவரை எவரும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சித்தியடையவில்லை. மாணவர்களில் அனேகர் வட்டக்கச்சி, இராமநாதபுரம், உருத்திரபுரம், பரந்தன் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள். மாணவர்கள் அனைவரையும் அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் இரவு நேரத்தில் குழுவாக சேர்ந்து படிப்பதற்கு அனுமதி தந்தார் திரு. ஆனந்தசங்கரி. அவர் அலுவலகத்தின் பின்பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். ஆனந்தசங்கரி அவர்கள் அதிகாலையில் 4.30 மணிக்கு அலாரம் வைத்து எங்களை எழுப்பிவிடுவார். அவரைத் தொடந்து அவர் துணைவியார் சுடச்சுட தேனீருடன் பனங்கட்டியும் தருவார். ஆனந்தசங்கரி நினைத்ததை பரீட்சை முடிவில் நாங்கள் சாதித்து காட்டினோம். ஆம் கலைப்பிரிவிலேயே சித்தியடையமுடியாமல் இருந்த பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் அதுவும் விஞ்ஞானப்பாடத்திலும், கணிதப்பாடத்திலும் திறமைச்சித்திகளுடன் சித்தியடைந்தோம். விஞ்ஞானப்பிரிவில் அதிகூடிய திறமை சித்திகளுடன் நான் முதல் மாணவனாக சித்தியடைந்தேன். திரு. ஆனந்தசங்கரியின் அலுவலகத்தில் இருந்து படித்தவர்கள் அத்தனைபேரும் இன்று உயர்
பதவியில் இருக்கின்றார்கள். இலங்கையில்; தன் அலுவலகத்தையே மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தக்கொடுத்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மட்டுமே. அந்தளவிற்கு மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டினார்.
கிளிநொச்சித் தொகுதி மாணவர்கள் கல்வியில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட்டே கல்விகற்க வேண்டியிருப்பதால் பாடசாலைகளின் ஆய்வுகூட வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து பாடசாலைகளின் தரங்களை உயர்த்தினார்;. இருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினார்கள். இதனை சீர்செய்ய வேண்டுமானால் தனிமாவட்டமே சரியான தீர்வு என்பதை ஆனந்தசங்கரி புரிந்து கொண்டார். அதுமட்டுமல்ல அபிவிருத்தி, மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திற்கும் தனிமாவட்டமே சரியான வழியென தெரிந்து கொண்டு அதற்காக போராடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி பாரர்ளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய தொகுதியில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தனிமாவட்ட கோரிக்கையை எதிர்த்தார்கள். தனியாக நின்று போராடி கிளிநொச்சி மக்களின் துணையுடன் தனிமாவட்டமாக்கினார். அதன் பின்னர்தான் தனி மாவட்டச் செயலகம், தனியானதொரு மாவட்டவைத்தியசாலை, மற்றும் தனித்தனி மாவட்;ட திணைக்களங்கள் என அத்தனை வளர்ச்சியும் கண்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பலகலைக்கழகத்திற்கு அதிகமான மாணவர்கள் தெரிவானார்கள். பல வைத்தியர்கள்; உருவாகினார்கள, பல பட்டதாரிகள் தோன்றினார்கள். கிளிநொச்சியில் உருவான வைத்தியர்களும், பட்டதாரிகளும் ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாவார்கள். அதுமட்டுமல்ல இன்று வரை எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து கொண்டிருப்பதோடு, பல முன்பள்ளி ஆசிரியாகளுக்கான கொடுப்பனவுகளையும் மாதாமாதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கின்றார். எத்தனையோ உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று வரை எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால், அவர் செய்த தரும காரியங்களே அவரை காத்து நின்றது எனலாம்.
விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த நேரத்தில் பலர் விடுதலைப்புலிகளுக்கு உசுப்பேத்தி ரணகளத்திற்கு கொண்டு சென்ற வேளையில் ஆனந்தசங்கரி மட்டும்தான் விடுதலைப்புலிகளுக்கு அறிவுரை கூறி யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வேண்டினார். ஆரம்பத்திலிருந்தே புலிகளுக்கு இடித்துக்கூறி சரியான வழியை காட்டினார். துரதிஸ்டவசமாக அவர்களால் அதை புரிந்து கொள்ளமுடியவில்லை. இவருடன் இணைந்து அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளுக்கு இடித்துக்கூறி உண்மை நிலையினை தெளிவு படுத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொள்ளிவைப்பதற்குகூட ஒரு தமிழன் இல்லாமல் கொல்லப்பட்ட சமபவம் நடந்தும் இருக்காது, விடுதலைப்புலிகளும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து தழிழனை தலைநிமிரச் செய்திருப்பார்கள். தழிழினத்திற்கு இந்த நிலை வரப்போகின்றது, புலிகளும் அழியப் போகின்றார்கள், தயவு செய்து எனது பேச்சைக் கேளுங்கள். தமிழர்களையும், போராளிகளையும் காப்பாற்றுங்கள் என புலிகளை கெஞ்சி மன்றாடி எத்தனையோ கடிதங்கள் எழுதினார். கடைசியில் அவர் சொன்னபடியே எல்லாம் நடந்து முடிந்து விட்டது. கசப்பாக இருந்தாலும் உண்மையை சொன்ன ஒரே தலைவன் ஆனந்தசங்கரி மட்டுமே. உண்மையை சொன்ன ஒNரு காரணத்திற்காக துரோகியாக்கப்பட்டார். யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்பார்கள். சிந்திக்கத் தூண்டிய சோக்ரடீஸ_க்கு நஞ்சு கொடுத்த சமூகம் இது, உலகம் உருண்டையென கூறிய கலிலியோவின் கண்களைப் பறித்த சமூகம் இது, யேசுநாதரை சிலுவையில் அறைந்த சமூகம் இது, இன்று அனைத்து தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இந்திய அரசியல் அமைப்பு முறைதான் தமிழர்களுக்கு ஏற்ற தீர்வாக அமையுமென அன்றே எடுத்துக் கூறியதற்காக தமிழர் விடுலைதக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்ற சமூகம் இது. தலைவர் ஆனந்தசங்கரியையா விட்டு விக்கப் போகின்றது? துரோகிப் பட்டம் கொடுத்து தேர்தலில் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்தது நம் தமிழ் சமூகம். ஆனால் ஆனந்தசங்கரி தோல்வியைக்கண்டு துவண்டு போகவில்லை. தொடர்ந்தும் தமிழ் சமூகத்திற்கு ஒரு விடிவு கிடைக்க போராடிக் கொண்டேயிருக்கின்றார். “சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதில்லை”. நீதி, நேர்மை, அரசியலில் தூய்மை, பதவியை துச்சமென நினைக்கும் தன்மை, எவர் தவறு செய்தாலும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் போர்க்குணம் இதுதான்; அவரிடம் நான் கண்ட சிறப்பு. ஆனால் இத்தனை சிறப்புகளையும் கொண்ட அந்த தலைவனுக்கு தமிழ் மக்கள், இன்னல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் ஒரு உயர்ந்த அரசியல் அங்கீகாரம் அளிக்காமல் துரோகம் செய்ததுதான் வரலாற்றுக் கொடுமை. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே துரோகம் செய்து கொண்டனர். ஆனாலும் எங்கோ இருக்கின்ற யுனெஸ்கோ நிறுவனம் சகிப்புத்தன்மையுடன் வன்முறைக்கெதிராக செயற்பட்டதற்கான விருது கொடுத்து அவரை கௌரவித்தது. சர்வதேசத்திற்கே தெரிந்த அந்தத் தலைவனின் அருமை, அருகில் இருந்த எம்மவர்களுக்கு புரியாமல் போனது வியப்புக்குரியது மட்டுமல்ல, நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமுமாகும். ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல்,சமூக சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியாமல் அவரை தேர்தலில் தோல்வியைக் கொடுத்து தமிழினம் சாபத்தை தேடிக்கொண்டது.
இத்துனை சிறப்புகளைக் கொண்ட அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை ஆண்டவன் எனக்களித்த பெரும் கொடையாக நினைக்கின்றேன். அரசியலில் தன்னலம் கருதாத இவ்வாறான துணிச்சலான தலைவர்கள் எப்போதாவதுதான் பிறப்பார்கள்;. அந்தவகையில் ஆனந்தசங்கரியும் ஒருவராவார். இவர் இன்னும் பல்லாணடு வாழ்ந்து தமிழினத்திற்கு சேவை செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கின்றேன்.
இரா. சங்கையா,
யாழ் மாநகர சபை உறுப்பினர்
0 commentaires :
Post a Comment