பல்வேறு பிரச்சினைகளுடன் 72 மணிநேரத்திற்குள் மூன்றரை இலட்ச மக்கள் இடம்பெயர்ந்தமையினால் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தோம். எனினும் குறுகிய காலத்திற்குள் அவர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் உரிமைகள் குழு தருணம் பார்த்து செயற்படுகின்றது என்றும் அவர் சொன்னார்.
தேசியப்பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் நிறுவனத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் {ஹலுகல்ல இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடமாகியுள்ள நிலையில் 65 ஆயிரம் மக்கள் இன்றும் மீள் குடியமர்த்தப்படாத நிலையில் இருக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமையும் சொல்லக்கூடிய வகையில் இல்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதிலளித்து தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 365 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மூன்று இலட்சத்திற்கு அதிகமானோர் இடம்பெயர்ந்திருந்தனர். ஒருவருக்கு ஒருநாள் என எடுத்துக்கொண்டாலும் எத்தனை நாட்கள் தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
பாதுகாப்பான பிரதேசங்களுக்குள் நாம் ஒரு இலட்சம் மக்களையே எதிர்பார்த்திருந்தோம், எனினும் 72 மணித்தியாலங்களுக்குள் சுமார் மூன்று இலட்சம் பேர் வருகைதந்தனர். இதனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவான பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்க நேர்ந்தது.
அப்பாவி மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே எங்களுக்கு நான்கு ஐந்து மாதங்கள் சென்றன. குழந்தைகள்,பெண்கள் முதியவர்கள் அடங்கலாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் 72 மணி நேரத்திற்குள் தமது வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு தேடிவந்தனர்.
பாதுகாப்பு வழங்கும் போது அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. இவ்வாறான நடைமுறை ரீதியிலான அசௌகரியங்கள் ஏற்படும் என்பதனை சகலரும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்குள் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதை இட்டு அரசாங்கம் பெருமை கொள்கின்றது.
கல்வியை எடுத்துக்கொண்டால் குறுகிய காலத்திற்குள் முகாம்களில் பாடசாலைகள் நடத்தப்பட்டன. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மீளக்குடியேற்றப்படாமல் இன்னும் 65 ஆயிரம் மக்கள் இருக்கின்றனர். மறுபக்கத்தில் இரண்டரை இலட்சம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.
யுத்தம் இல்லாத பிரதேசங்களில் கூட சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாகவும் சட்டவிரோத குடியேற்றங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆண்டாண்டு காலமாக பேசி வருகின்றோம். அவ்வாறானதொரு நிலைமையில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியிருக்கின்றது.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே சர்வதேச ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமக்கு எதிராக பெரும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டுகொண்டிருப்பது தொடர்பில் பலர் மகிழ்ச்சியடைய வில்லை. அதனால் தான் அவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும்.
மீள் குடியேற்ற விடயத்தில் முடிந்தளவு அதிகபட்சமான பலத்தை பிரயோகித்து உலகில் வேறெந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு முன்னிலையில் நிற்கின்றோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் சொந்த விடயத்தை அரசாங்கமே மேற்கொள்வதை விரும்பாத உரிமைகள் குழுக்கள் தருணம் பார்த்து செயற்படுகின்றன என்றார். _
0 commentaires :
Post a Comment