5/26/2010

ஐ. தே.கட்சியிலிருந்து ரணில் விலகவேண்டும் : அப்துல் காதர் _




  அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியின் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகக் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த இவர், சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நடந்து முடிந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்த தோல்விக்கு அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தவறான அணுகுமுறையே காரணம். இதற்கான தார்மீக பொறுப்பையேற்று தலைவர் பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்.

அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மிக சிறந்த நிர்வாகி. அத்துடன் எம்முடைய இருபதாண்டு அரசியல் அனுபவத்தில் ராஜபக்ஷவைப் போல் மிகச் சிறந்த பண்பாளரை நான் சந்தித்ததில்லை. அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து விடயங்களுக்கும் மிக துல்லியமான தீர்வினை அவர் எடுத்து வருகிறார்.

அவர் எப்போதும் இஸ்லாமியர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகிறார். இதற்குக் கடந்த அமைச்சரவையில் பதினைந்து இஸ்லாமியர்களுக்குத் தமது அமைச்சரவையில் இடமளித்திருந்தமையே சான்றாகும்.

அவருடைய நிர்வாகத்தில் இலங்கை, புது பொலிவுடன் வலிமையாகவும், வளமாகவும் மாறி வருகிறது. யாழில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயமாக நான் பங்குபற்றுவேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தடைப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எம்முடைய விருப்பத்தினை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்" என்றார்.

முன்னதாக அவர் தமிழக அரசியல் கட்சித் தலைவர் அப்துல் சமதைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment