5/07/2010

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை; தடை விதித்தால் உறவு கெடும் அகமதி நிஜாத்


அணுசக்தி திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக ஈரான் மீது மேலும் பொருளாதரத் தடைகள் விதிக்கப்பட்டால் அமெரிக்காவுடனான உறவு மேலும் கெட்டுவிடும் என்று ஈரான் ஜனாதிபதி மெஹ்மூத் அகமதி நிஜாத் எச்சரித்தார்.
நியூயோர்க்கில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை பேசினார்.
ஈரானில் புரட்சி ஏற்பட்ட மன்னர் ஷா பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாள் முதலே ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா என்னென்ன முயற்சிகளையோ மேற்கொண்டு வருகிறது. 1979 முதல் அமெரிக்காவின் தூண்டுதலால் ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடைகளால் ஈரான் பின்னடைவு எதையுமே சந்தித்து விடவில்லை என்பதுதான் வரலாறு.
இப்போது அதே தடைகளை மேலும் தீவிரமாக விதிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் அணு திட்டங்கள் அதனுடைய சுய தேவையைப் பூர்த்தி செய்யவும் தற்காப்புக்காகவும் தான் என்று பலமுறை கூறியாகிவிட்டது.
ஈரானின் இறையாண்மைக்கு உள்பட்டு சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் ஆய்வுக்கும் நிலையங்களைப் பார்க்க அனுமதி தந்தாகிவிட்டது. இதன் பிறகும் சந்தேகப்பட்டுக்கொண்டும், சட்டாம்பிள்ளைத்தனமாக நிபந்தனைகளை விதித்துக்கொண்டும் இருந்தால் அதைக் கேட்க வேண்டும் என்று ஈரானுக்கு தலைவிதியா என்ன? ஈரானிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள்.
தங்கள் நாட்டை மாற்றார் மரியாதைக் குறைவாக நடத்துவதை விரும்பமாட்டார்கள். எத்தகைய சோதனைகள் வந்தாலும் தாங்கும் வலுவுடன் தான் நாடு இருக்கிறது. ஈரானைத் தனிமைப்படுத்தவும் பலவீனமாக்கவும் எடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது. இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் அரசுகளுக்கு இடையிலும் உறவு மேம்பட இத்தகைய தடை நடவடிக்கைகள் உதவாது என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அகமது நிஜாத்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் எப்படி அமுலாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை ஆதரவில் நியூயோர்க் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் தனது அதிருப்தியை அப்படியே தெரிவித்தார் அகமது நிஜாத்.
அணு ஆயுதங்கள் பரவக்கூடாது என்ற அக்கறை அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் உண்மையிலேயே இருந்தால், இஸ்ரேலிடம் இருக்கும் ஆயுதங்கள் எத்தனை என்று காட்டச் சொல்லி அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.
 

0 commentaires :

Post a Comment